பொங்கலோ பொங்கல்…

பேப்பர் கடைவந்ததும் சைக்கிளை நிறுத்தினேன்.  சைக்கிளின் ஸ்டேண்டை போட எத்தனித்தபோது ‘இன்னக்கி பேப்பர் கிடையாது.. ப்ரஸ் ஸெல்லாம் லீவ்’.. என்று பேப்பர் கடைக்காரர் என்னைப்பார்த்து சிரித்தார். சிரிப்பின் அர்த்தம் புரிந்தது. இந்த முறையும் பொங்கல் ஃபூல் ஆகிவிட்டேன். 

சரிவிடு.. என்றபடி  சைக்கிளை மிதித்தேன். நகர்  புறமென்றாலும்  பொங்கலுக்கு சற்று கூடுதாலாகத்தான் களைகட்டியிருந்தது.  போகி முடிந்த நிலையிலும் சாலையின் இரு புறத்தில் எரிந்தும் எரியாத நிலையில் இருந்த குப்பைகளில் இருந்து  இன்னும்  விதவிதமான  நாற்றங்களுடன் புகை வந்துகொண்டிருந்தது.  ஓரத்தில் தெருநாய்கள் படுத்து குளிர்காய்ந்துகொண்டிருந்தன.  மார்கெட்டின் வெளிப்புறத்தில்  கொத்துமஞ்சள், கரும்பு கட்டு, காய்கறிகள் பரந்து விரிந்திருந்தன.   மக்கள் ஒருவரோடு ஒருவர் உராயாமல் உராய்ந்தபடி  அவரவர் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தனர்.   சிலரது இரு சக்கர வாகனங்களில் கரும்பு கட்டப்பட்டிருந்தது.  சாலையோர குழைந்தைகள் இன்னும் டும்ம டக்க அடித்துக்கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோக்கள் கூட்டத்துடன் பறந்துகொண்டிருந்தன.

எப்போதும் கூட்டமாக காணப்படும் அந்த இடம் இன்று அதிக கூட்டமில்லாமல் இருந்தது. டாஸ்மாக் ஷட்டர் மூடியிருந்தது. ஒன்றிரண்டு பேர் ஷட்டரின் அருகில் அமர்ந்திருந்தனர்.  புது வேட்டி புது சட்டை அணிந்து ஒருவர் படுத்திருந்தார். (படுக்கவைக்கப் பட்டிருந்தார்). டாஸ்மாக் மூடியிருந்தாலும் வியாபாரம் நடைபெறுவதை  அருகில் இருந்த பாஸ்ட் ஃபுட் உணவுக்கடை உணர்த்தியது. அருகில் இருந்த  முடித்திருத்தகத்தில் சாலமன் பாப்பையாவினுடைய தீர்ப்பு எனக்கு தெளிவாக கேட்டது.   நான் மெதுவாக சைக்கிளை  மிதித்தேன்.

ஆயிரத்தில் ஒருவனாக  சூர்யாவின் தம்பி ஒரு பெண்ணை இடுப்பில் உட்காரவைத்துக்கொண்டு என்னை பார்த்து முறைத்தான். நான் பயப்படவில்லை. (படத்தை பார்கக போனாத்தானே பயப்படவேண்டும்) தியேட்டரின் வெளியே   காவல் என்று எழுதப்பட்ட ஜீப் ஒன்று அனாதயாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது (605 சுப்பிரமணி.. லைனுக்கு வாங்க ஓவர்… ஓவர்..).  ஈழப்பிரச்சினையில் உயிரிழந்த ஒருவருக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி போஸ்டர் ஒட்டுவதற்கு கூழ் தயாராகிகொண்டிருந்தது.  ஒரு சேவாக்கும் இரண்டு சச்சின்களும் என்னை கடந்து சென்றனர்.

 நகரமும் ஒரு காலத்தில் நகரமும் கிராமமாக்ததான் இருந்திருக்க வேண்டும் என்று அடையாளபடுத்திகொள்வதற்க்காக பல வண்ணக்கோலங்கள்  வீதி முழுவதும். (சாணி மொழுக அவசியமில்லாதபடி கருங்கல் சல்லி  தார் தெருக்கள்)  பெரியதிண்ணையுடன் கூடிய ஒரு ஓடுவேய்ந்த ஒரு வீட்டைப்பார்த்தேன்.  வாசலில் பூசணிப்பூ வைத்து அழகிய மாக்கோலம்.   நடுவே அடுப்பு வைத்து அதைச்சுற்றி கரும்பு வைத்து சிறிய அலங்காரம்.  குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என சூரியனுக்கு படைக்க ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள். நான் சற்று தள்ளி சைக்கிளை நிறுத்திவிட்டு தொலைவில் நின்று வேடிக்கைப்பார்த்தேன்.  என்ன இருந்தாலும் நகர்ப்புறமல்லவா.  பொங்கலோ பொங்கல் என்ற கூப்பாட்டை சுரத்தில்லாமல் கூவினார்கள்.  அதிக சத்தமாக கேட்ட கூப்பாடு அவர்கள் வீட்டிலிருந்த கடைக்குட்டிகளினுடையதுதான்.  நிர்பந்தத்தின் காரணமாக காகத்திற்க்கு சோறு வைத்துவிட்டு மற்றவர் நம்மை  தரக்குறைவாக நினைத்து விடுவார்களோ என்று கா.. கா.. என்று காகத்தை அழைக்காமல் திரும்பிய பலபேரை நான் பார்த்ததுண்டு.  இதுவே கிராமமக்களாக இருந்தால்  அவர்கள் போடுகிற கூப்பாட்டில் நகரமே அதிர்ந்திருக்கும்.  கிராமத்து நினைவுகளில் மூழ்கினேன். வயலிலிருந்து கொண்டுவரப்பட்ட புது அரிசி, புது நெற்கதிர்கள், புதுப்பானை, புதுத்துணிமணிகள், புது மருமகள்,  புது மகிழ்ச்சி  என எல்லாமே புதிதாக இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் அனைவரும் ஒன்றாக கூடி குதூகலிப்பது என்பது கிடைக்காத ஒர வரம். சண்டையும் இல்லாமலிருக்காது.  பக்கத்து வீட்டுக்காரன் தன் காளையின் கொம்பிற்க்கு தன் கட்சிகொடியின் வண்ணம் தீட்ட அதைக்கண்ட என் எதிர்கட்ச்சி மாமாவோ உடனே டவுனுக்கு சென்று பெயின்ட் வாங்கி வந்துவீட்டு தன்கட்சிக்கொடியின் வண்ணத்தை ஒன்றும் அறியா எங்கள் லட்சுமியின் கொம்புகளுக்கு தீட்ட அதைகண்ட எங்கள் தாத்தா கோபபட்டு லட்சுமியை கொட்டிலிலேயே அடைக்க அந்த வருஷம் எங்கள் வீட்டில்  பொங்கலே கொண்டாடவில்லை.. ஹ்ம்..

திடீரென்று வீட்டு ஞாபகம் வந்தது. வேகமாக சைக்கிளை மிதித்தேன்.  ‘பேப்பர் வாங்க போனா இவ்வளவு நேரமா.. சீக்கிரம் வாங்க’ என் மனைவி. ‘அப்பா வாசலுக்கு வாங்க..  தாத்தா கூப்பிடறாங்க..’ என் மகள். போனேன். என் மாமனார், மாமியார் மற்றும் உறவினரெல்லாம் வாசலில் தயாராக இருந்தார்கள்.   சூரியனோ என்னை  சுட்டான் (தாமதமானதால்).  இறுதியில் என்  மாமியார் சூடமேற்ற  எல்லோரும் ‘பொங்கலோ பொங்கல்’ என இருமுறை கூவி நிறுத்தினார்கள்.  நான் மட்டும் நிறுத்தவில்லை.   சத்தமாக…‘பொங்கலோ பொங்கல்…’‘பொங்கலோ பொங்கல்…’‘பொங்கலோ பொங்கல்…’

 

Advertisements
Published in: on ஜனவரி 16, 2010 at 11:14 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/01/16/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: