நல்ல உடையுடுத்திகொண்டு பாண்டியின் பின்னால் பைக்கில் அமர்ந்தேன். ‘அங்க நீ விசிட்டராத்தான் வர.. என் ப்ரண்டா இல்ல.. புரிஞ்சுதா’ என்றான் பாண்டி. எல்லாம் காலக்கொடுமை என நினைத்தவனாய் ‘சரி’ என்றேன். பைக் பறந்தது. சரியாக 5வது நிமிடத்தில் கம்பூட்டர் சென்டரில். பாண்டி வேகமாக உள்ளே போய்விட்டான். நான் மெதுவாக உள்ளே நுழைந்தேன். ‘வாங்க’ என்ற மென்மையான குரல் கேட்டு திரும்பினேன். மஞ்சள் சுரிதார் என்னை விளித்தது. நான் மெல்ல ‘சார் இல்லீங்களா’ என்றேன். ‘சார் இப்ப வந்துருவாரு.. உக்காருங்க’ என்றார் (எனக்கு முன்னமே இந்த சென்டர் அறிமுகமானதுதான் என்பது பாண்டிக்கு தெரியாது). நான் அமர்ந்து கண்ணாடியின் வழியே பாண்டியைத் தேடினேன். மொத்தம் 15பேர் இருக்கலாம். நான்கைந்து கலர் சுரிதார்கள் உள்ளே வலம்வந்து கொண்டிருந்தன. நாலாவது ஸிஸ்டத்தில் பாண்டி. என்னை பாத்தும் பார்க்காததுபோலவே இருந்தான். சார் வந்துவிட்டிருந்தார். ‘வாங்க.. என்ன ரொம்பநாளா இந்த பக்கமே காணோம்… கோர்ஸ் முடிஞ்ச உடனே எங்கள மறந்துட்டீங்கல்ல..’ என்றார் சார். ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.. வேலை அதிகமாயிட்டதுனாலே வர முடியல…(எந்த வேலை) ‘எப்படி போய்க்கிட்டிருக்கு’ என்றேன். ‘நிறைய புது கோர்ஸ் வந்துகிட்டிருக்கு… இப்பகூட ஒரு நல்ல பேக்கேஜ் இருக்கு… இப்ப உங்களுக்கு டைம் இருந்துச்சினா ஒரு டெமோ காண்பிக்கறேன்’ என்றார். பழம் நழுவி என் வாயில் விழுந்தது போல இருந்தது. ‘ஓகே.. பாக்கலாமே’ என்றேன்.
நான் உள்ளே நுழைவதை பாண்டி பார்த்துவிட்டான். ‘தமிழ் இங்க வாங்க.. இந்த ஸிஸ்டத்துல பில்லிங்பேக்கேஜ் லோட் பண்ணிட்டீங்களா..’ என்றார் சார். ‘எஸ் சார்.. இட் இஸ் அல்ரெடி லோடட்’ இது தமிழ். வயது சுமார் 25 இருக்கும். சிகப்புக்கலரில் சுரிதார் அதற்க்கு வெள்ளை பேண்ட் (பேண்ட்டுன்னுதானே சொல்லணும்?). மாநிறம். நல்ல எடுப்பான தோற்றம். களையான முகம். மெல்லிய சென்ட் வாசனையோடு தமிழ் இப்போது என்னருகில். நான் மெல்ல பாண்டியனை பார்த்தேன். பாண்டியனோ தமிழையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான். எனக்கு புரிந்தது தமிழ்தான் பாண்டியின் ஆள் என்று. நான் மெல்ல தமிழிடம் ‘இது எத்தன மாச கோர்ஸ்’ என்றேன். ‘ஜஸ்ட் தர்டி டேஸ்.. உங்க பிஸினெஸ்க்கு ரொம் யூஸ்புல்லா இருக்கும்..’(எனக்கு பிஸினெஸ்ஸா.. விளங்கிடும்..) என்றாள் தமிழ். ‘நீங்க’ என்றேன் நான். ‘ஹி இஸ் ஒன் ஆப் அவர் பேக்கல்டி.. இந்த ஊர்தான்’ என்றார் சார். ‘அப்படியா என்றேன்’ சற்றே வழிந்துகொண்டு. பாண்டி என்னைப்பார்தது முறைத்தான். அவனை மேலும் கடுப்பேற்ற ‘நம்ம ஊர்னு சொல்றீங்க.. உங்கள இதுக்கு முன்னே நான் பாத்ததே இல்லியே’ என்றேன். ‘நான் இந்த ஊருக்கு வந்தே மூணு மாசம்தான் ஆகுது… இங்கே குவாட்டர்ஸ்லதான் இருக்கேன்’ என்றாள். ‘குவாட்டர்ஸ்ஸா’ என்றேன். ஆமாம் ‘போலீஸ் குவாட்டரஸ்.. இந்த ஊருக்கு வந்திருக்கிற புதிய கிரைம் இன்ஸ்பெக்டரோட ஸிஸ்டர் நான்’ என்றாள். எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
காரணமிருந்தது. போனமுறை பஸ்நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் என் கண்முன்னால் ஓடியது. நான் டீக்கடையில் சிவனே என்று (நீயா..வர்றவன் போறவன் எல்லாரையும் கலாய்க்கிறவன் சிவனா…) தம்மடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு போலீஸ் ஜீப் கடையருகே வந்து நின்றது.வண்டியிலிருந்து இறங்கிது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்ராகத்தான் இருக்கமுடியும். அசப்பில் பச்சைக்கிளி முத்துச்சரம் சரத்குமார் போலவே இருந்தார். டீக்கடைக்காரரோ ‘இன்னிக்கு எவன்னு தெரியல’ என்றபடி அமைதியானார். நான் அவரிடம் ‘என்னண்ணே.. யாரு’ என்றேன். ‘அட நம்மூருக்கு புதுசா வந்திருக்கிற இன்பெக்டர் பா.. நேத்து பஸ்ஸாண்ட் சுவத்து மேல உங்காந்து தம்மடிச்சவனையெல்லாம் துவச்சி எடுத்திட்டாரு.. நேத்து ஒரு சினிமாவே பாத்தேன் போ.. இன்னக்கி எவன் மாட்டறான்னு தெரியலயே’..என்று கடைக்காரர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் எங்களை நோக்கி வந்துவிட்டிருந்தார். வந்தவர் டீக்கடைக்காரரிடம் ‘எலே பெருசு இங்கே எவனோ பொண்ணுங்களை கேலி பண்ணிக்கிட்டு திரியறானாமே.. உனக்கு தெரியுமா’ என்றார் கணீரென்று. ‘தெரியலே சாமி’ என்றார் கடைக்காரர் வெடவெடத்து. ‘சார் நீங்க இங்க எவ்வளவு நேரமா இங்க இருக்கிறீங்க.. உங்களுக்கு தெரிஞ்சி யாராவது இங்க கலாட்டா ஏதாவது செய்ஞ்சாங்களா’ என்றார் எனைப்பார்த்து. (சிகரெட்டை ஏற்கனவே கீழே போட்டுவிட்டிருந்தேன்) ‘சார்..நா இப்பதான் இங்கே வந்தேன்’ ‘ஜஸ்ட் நவ் ஐ கம் இயர் சார்’ என்றேன். என் பீத்தை ஆங்கிலத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் ‘பெருசு.. ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எங்கிட்ட சொல்லணும் என்ன’ என்று ஜீப்பில் ஏறினார். அவர் எங்களை நோக்கி வந்த வேகத்தைப்பார்த்தால் நான்தான் அந்த ஆள் என நினைத்து வந்தாரோ என அடுத்தவர் நினைக்கக்கூடும். நான் மெல்ல ‘யாருப்பா அவர்தேடுற ஆள்’ என்றேன். ‘உங்களுக்கு தெரியாதா நேத்து அவர்கிட்ட அடி வாங்கினதுல ஒருத்தன்தான்.. இப்ப அவன் எந்த ஜில்லாவில இருக்கானோ’ என்றார். பிறகு பொறுமையாக ‘நீங்க நல்லா இங்கிலீஸ் பேசறீங்க’ என்றார்.
…. வருவான்
மறுமொழியொன்றை இடுங்கள்