‘என் பேனா குனிகிறது என்றால் என் இனம் எழுகிறது’ என்று புரட்ச்சியாக எழுதலாமா இல்லை ‘சந்திரனில் பாட்டி சுட்டாள்வடை .. ஆனால் அங்கே யார் வைத்தது கடை’ என சமூக நலனைப்பற்றி எழுதலாமா இல்லை ‘இலையில் சோறு போட்டு.. ஈயை தூர விரட்டி.. ஆசை முத்தம் தந்த அம்மா எங்கே’ என்று பெண்ணியம் பற்றி எழுதலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றும் இல்லை.. நான் கவிதை எழுதப்போகிறேன்.. (பாத்துடலாம்.. சூனா பானா.. ம்..மேல போ…) எனக்கு இந்த சிந்தனையைத்தூண்டி விட்டவளே இந்த அம்மாதான். “வற்றலும் வடகமும் மேலே காயப்போட்டிருக்கிறேன்.. காக்கா வரமா பாத்துக்கோ.. நான் சீக்கிரம் வந்துடறேன்..” என்று என் அறிவுப்பசியைத்தூண்டி விட்டுவிட்டு மாவு மில்லுக்கு சென்றுவிட்டாள். மொட்டை மாடித்தனிமை என்னை கவிதை எழுத தூண்டியது. பேப்பர் மற்றும் பேனாவுடன் அமர்ந்தேன்.
எப்படி ஆரம்பிப்பது… ம்… வற்றலை வைத்து ஆரம்பிக்கலாமா.. ‘எண்ணையில் போடும் போது எகிறுகிற நீ.. தண்ணீரில் போடும் போது மட்டும் ஏன் தணிந்து விடுகிறாய்..’ ஐய.. நல்லா வரலயே.. ம்.. தென்னை மரம்.. தென்னையிளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது.. தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது..’ ஐயோ.. அடிக்க வருவார்கள்.. என்ன செய்யலாம். எல்லாருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும்., கவிதை நடையில் இருக்கவேண்டும்.. அதற்க்கு கரு வேண்டும்.. என்ன செய்வது.. யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அப்போது திடீரென ஒரு காகம் என்தலைக்குமேலே பறந்து சென்று திரும்பி யு டர்ன் அடித்து கிண்டியிலிருந்து மீனம்பாக்கத்தில் இறங்கும் விமானம் போல தாழ்வாக வந்து இறங்கியது. இப்போது நான், காகம், வடகம். மன்னிக்கவும். நான், நடுவில் வடகம், அந்தபக்கம் காகம். காகம் அசையாமல் எனைப்பார்த்தது. நான் காகத்தை கூர்ந்து பார்த்தேன். வெயிலில் கரும்பட்டுபோல ஜொலித்தது. காகத்துக்குத்தான் எத்தனை சிறப்புக்கள். வான் புகழ் வள்ளுவனே குறள் எழுதும் அளவிற்க்கு பெருமை கொண்டது (அதாம்பா.. இகல் வெல்லும்.. பகல் வெல்லும்..ன்னு வருமே.. சமயத்துக்கு மறந்துடுது..). சிவாஜி கணேசனால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது (கா..கா..கா.. ஆகாரம் அது இல்லாத எல்லோரும் அன்போடு ஓடி வாங்க…..). பாட்டி வடை சுட்ட கதைகளிலும்.. பானையில் கல்லைபோட்டு தண்ணீரை மேலே கொண்டு வந்த கதைகளிலும் இடம் பெற்று நீதிபோதனை செய்து அறிவு ஜீவனானது. தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதி அமாவசை சோற்றை அனைவரையும் அழைத்து பகுத்துண்டு உண்ணும் பண்பு படைத்தது. இத்தகய சிறப்பியல்புகளை பெற்ற காகத்தை பற்றி கவிதை எழுதினால் என்ன என்று தோன்றியது. எழுத துவங்கினேன்.
‘காகமே.. ஏ காகமே..’ (மரியாத.. மரியாத..) சரி.. சரி.. ‘காகமே.. எனதருமை காகமே’ ‘கண்ணனும் கருப்பு.. நீயும் கருப்பு.. ஆனாலும் உன்மேல் ஏன் கொள்கிறார்கள் வெறுப்பு..’ ‘அமாவாசை சோற்றை ஐயமிட்டு உண்ணும் நீ ஏன் பருந்தைப்பார்த்து பயப்படுகிறாய்..’ ‘காக்காய் பிடிப்பதாய் உனைச்சொல்லி காரியம் சாதிப்போர் பலபேர்’ ‘சனியின் சன்னிதியில் உனை துதிப்பதோ சில பேர்’ ‘உன்னைத்தான் தேசியப்பறவை என அறிவித்திருக்கவேண்டும்… கயவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு மயிலுக்கு மஞ்சம் விரித்துவிட்டார்கள்..’ ‘போகட்டும் விடு.. உனை உலகப்பறவையாய் உலகம் உவகையோடு அறிவிக்கும் உன்னதநாள் வெகு அருகில்..’ ‘ஆனாலும் உன் மேல் எனக்கு கோபம்.. ஏன் கம்பியில் காயவைத்த என் ஜட்டியின் மீது கக்கா போனாய்….’
தம்ம்… முதுகு வலித்தது. அடுத்த அடி என்மேல் விழுவதற்க்குள் நான் சுதாகரித்துக்கொண்டேன். அம்மா கையில் துடைப்பத்துடன் பத்ரகாளிபோல் என் முன்னே நின்றுகொண்டிருந்தாள். ‘காக்காய விரட்டாம என்னடா பண்ற கழுத… அங்கே பார் ஒரு காக்கா கூட்டமே உக்காந்து விருந்து சாப்பிடுது… உன்ன..
பேருக்கு நகைச்சு வைககாமல், உண்மையிலேயே சிரிக்க வைத்தது. வாழ்த்துக்கள்
வாங்க புவனாமுரளி.. என்ன பாத்து ரொம்பநாளாச்சு… சௌக்கியங்களா…
காக்கா விரட்டப் போயி கவிதை வாங்கி வந்தீர்களோ?
சரி சரி அந்த கவிதையை பினிஷ் பண்ணுங்க…
எவ்வளோவோ தாங்கிட்டோம்… இதை தாங்கமாட்டோமா?
வணக்கம். வெண்புரவி… பெயர் சூப்பர். உன்னப்பத்தியே கவித எழுதறேன்.. இந்தா புட்ச்சிக்கோ…
புரவின்னா குதிரை.. ஆனா என் ஊரு மதுரை…
மதுரையில் மீனாட்ச்சி… அது யாரு உன் தங்காச்சி..
உனக்கு வருதா அழுகாச்சி…
ரொம்ப சௌக்கியம் சுரேந்திரன்.
உங்க வெண்புரவி கவிதைக்கு finishing line (reply line…) இதோ:
எங்க ஊரு திருப்பாச்சி….
ம்…பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன்… நீங்ளும் வரக்கூடாது.. (ஒரு கவிதைக்கே இப்படியா?..)