காசி.. ஒரு அனுபவம்… 3

கங்கா ஸ்தானம் ஆயிற்று. படகோட்டி தம்பி எங்களைப்பார்த்து கையசைத்தான். நாங்கள் நனைந்த உடையுடன் படகில் ஏறி அமர்ந்தோம். கரையின் அக்கரை பனாரஸ்.  ஆம் பட்டுக்கு பெயர்போன பனாரஸ்ஸேதான். அது நாகரீக நகரம் என்று என்று என் நண்பன் கூறினான். மீண்டும் கங்கை நதியில் படகில். இம்முறை கூட்டமாய் வெண்பறவைகள் (பெயர் தெரிய வில்லை…) எங்கள் படகை சூழ்ந்து கொண்டன. படகோட்டி நண்பன் அவைகளுக்காக உணவை வீசியெறிந்து விட்டு எங்களையும் அவைகளுக்கு உணவளிக்குமாறு கூறி சில (மிக்ஸர் போன்ற) பொட்டலங்களை எங்களுக்கு அளித்தான் (பொட்டலம் ரூ.5). நாங்கள் வீசியதைத்தொடர்ந்து ஒரு பறவைப்படையே நாங்கள் பயப்படும் அளவிற்க்கு எங்களை முற்றுகையிட்டது. நகராப்படகு. நாங்கள் வீசியெறிந்த உணவை  வெண்பறவைகள் சத்தமிட்டபடி பாய்ந்து பிடித்தன. அவைகளுடைய இரைச்சல் இசையாய் என் காதுகளில்.  அந்த சூழல் என்னை என்னுடைய குழந்தைபருவத்திற்கே அழத்துச்சென்றது.  பறவைகளை பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.

மீண்டும் படித்துறையில். நானும் என் நண்பனும் மட்டும் தனியே படித்துறையில் நடந்துசென்றோம். படித்துறையின் சில இடங்களில் அகோரிகளை காணமுடிந்தது. ஒரு அகோரி அருகில் சென்று அமர்ந்தேன்.  என் நண்பனும் அமர்ந்தான்.  எங்களின் வருகையையோ நாங்கள் அவர் அருகில் அமர்ந்ததையோ பொருட்படுத்தாமல் கங்கையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். உலகே மாயம்.. வாழ்வே மாயம்..  நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.. வாயில் ஒரு புகைவாங்கி/போக்கி. உள்ளே நிச்சமாய் கஞ்சா போன்ற வஸ்து(?) இருக்கும் என்று என் நண்பன் சொன்னான். நான் அதை பரிசோதிக்க விரும்பாமல் எழுந்து நடையைக்கட்டினேன்.

அந்த படித்துறையிலும் வருங்கால சச்சின்களும்  டோனிக்களும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருநதார்கள்.  அதற்க்கு சற்று தள்ளி ஒரு காதல் ஜோடி விளையாடிக்கொண்டிருந்தது. மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை என்றான் என் நண்பன். சாய் குடிக்க படித்துறையின் சந்தில் அமைந்த ஒரு கடையில் ஒதுங்கினோம். அப்போதுதான் அந்த கடையில் சாய்அருந்திவிட்டு சிலர் அங்கே படுக்கைவக்கப்பட்டிருந்த சவத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர். நான் புத்தகத்தில் இதுபோல படித்திருக்கிறேன். அதை நேரிலே காணும்போது என்னுற் ஏற்படும் அழுத்தம் என்னை ஏதோ செய்தது.  மண் குடுவையில் உள்ள சாய்யை உறுஞ்சிவிட்டு கண்ணை மூடினேன். நண்பன் என்னை தட்டியெழுப்பி காசியில் அதுவும் தகனம் செய்யும் இடத்தில் சவ வாடை இருக்காது எனவும் காசியில் காகங்களை காணமுடியாது எனவும புதுத்தகவலைத்தந்தான். ஆம் நான் காசியில் இருந்தவரை ஒரு காகத்தைக்கூட பார்க்கவில்லை. மெதுவாக படித்துறையின் மேலேறி காசியின் வீதிகளில் நடந்தோம். இம்முறை எனக்கு பிடித்தமான பூரி மற்றும் சப்ஜி வாங்கியுண்டேன். சப்ஜி என்னை ஒன்றும் செய்யாது என்னும் தைரியத்தில் மீண்டும சப்ஜிக்காக கையேந்தினேன். நண்பன் நேரமின்மையை குறிப்பிடவும் நான் விடுதிக்கு விரைந்தேன். அங்கே எங்களுக்கு இரயில் நிலையம் செல்ல வாகனம் தயாராக இருந்தது. வேகவேகமாய் விடுதியை காலி செய்துவிட்டு கீழிறிங்கி காசியில் என் காலடித்தடத்தை விடுத்து  வாகனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் காசியை விட்டு அகன்று பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்தது. மாலைப்பனிமூட்டத்தில பாலத்தின் மேலிருந்து காசியை பார்த்தேன். படித்துறைகள் மங்கலாக தெரிய தூரத்தில் எரியூட்டப்படும் சிதைகள் தீயசைத்து எனக்கு விடையளித்தன.

நான்  ரசித்த  காசியின் அழகு உங்கள் பார்வைக்கு. கண்டு களியுங்கள் :            http://www.youtube.com/watch?v=u4NOzqeJY-Y

Published in: on ஜனவரி 21, 2011 at 11:28 முப  Comments (2)  

காசி.. ஒரு அனுபவம்… 2

படித்துறையில் இறங்கினோம். படித்துறையே பரவி நீண்டு பனி புகையினுள் எல்லையில்லாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தது. கதிரவன் மெல்ல சோம்பல்முறித்துக்கொண்டிருக்க இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் செல்ல ஆயத்தமானோம். அக்கரையில்தான் நன்னீர் உளது..  அங்கு குளித்து பாவவிமோசனமடையலாம்(?) என நண்பன் கூறவும் ஆறு  மாதங்களுக்கு முன்னர்தான் இராமேஸ்வரம் சமுத்திரத்தில் என் பாவங்களை களைந்துவிட்டமையால் மிகுதியுள்ள  ஒரு ஆறு மாத பாவங்களை கங்கையில் களைய புறப்பட்டேன். படகோட்டி (சரிதானே?..) இந்தியில் நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்க நானோ காசியின் படித்துறை அழகை என் கண்களால் பருகிக்கொண்டிருந்தேன். கங்கையின் வெள்ளப்பெருக்கின்போது இந்த படித்துறைகளின் கீழுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் எனவும் அதனாலேயே இங்குள்ள படித்துறைகள் உயரமாக எழுப்பபட்டுள்ளன எனவும் அறிந்துகொண்டேன். படித்துறையை ஒட்டி அழ(ழுக்)கான பல வண்ண கட்டிடங்கள். ஒவ்வொரு படித்துறையும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. படகோட்டி நண்பன் ஒவ்வொரு படித்துறை பகுதிகளின் அருகாமையில் படகினை செலுத்தி அதன் தலவரலாறுகளை விளக்க நான் விளங்கிக்கொண்டேன்(?). ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சிறப்பினைப்பெற்றதாய் இருந்தது. கங்ககைக்கு நிதமும் கங்கா ஆர்த்தி செய்யும் இடம்  வண்ணமயமாய் காட்சியளித்தது (இங்குதான் நான் சொன்ன குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாம்…) அரிச்சந்திரா கட் மற்றும் முருகன் கோவில் இருந்த படித்துறையும் அருகில் சென்று பார்த்தோம். கங்கையின் மடியில் அடி சாய்ந்திருந்த ஒரு ஆலயத்தினையும் கண்டோம். அழகாய் இருந்தது பைசா சாய் கோபுரத்தினைப்போல.

அடுத்து மயான காண்டம். காசிக்கு நான் வந்த நோக்கமே இந்த மாயானத்தை தரிக்கத்தான் என்றால் மிகையாகாது (நன்றி : நான் கடவுள்). ஆடி அடங்கிய வாழ்க்கையின் எச்சங்கள் ஆங்காங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. அதிலும ஒரு அழகு. எரியூட்டத்தேவைப்படும் விறகுள் விற்பனைக்கு அங்குள்ள படகுகளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டு மிதந்துகொண்டிருந்தன. அக்கணப்பொழுதில் எரியும் தீக்கங்குகளில் குறைந்தது நான்கந்துபேர் மோட்சம் அடைந்துகொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது நான் கண்டுகொண்டிருப்பது கீழ்தளமென்று. மேல்தளத்தில் இன்னும் பல பேர் தீக்குள் உறங்கிக்கொண்டிருப்பார்கள் எனவும் இன்றும் பல பேர் வரிசைகிராமமாய் தீக்குள் இறங்க ஆயத்தமாய் இருப்பார்கள் எனவும் அறிந்துகொண்டேன். நேரமிருப்பின் அருகில் சென்று காணலாம் என முடிவுசெய்தேன். சிலர் இங்கு வந்து மோட்சமமைய காத்துகொண்டிருக்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னபோது காலையில் நான் படித்துறையில் கால்வைக்கும்போது நிறைய வயோதிகர்கள் படித்துறையில் உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. உடல் பொருள் இங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. படகிலிருந்தபடியே கண்மூடி ஒரு நிமிடம் வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தபோது என் மனைவியின் உருவம் என் கண்முன்னே வந்ததால் தியானத்தை கலைத்துவிட்டு கங்கையின் மறுபுறம் நோக்கினேன்.

படகு மெல்ல அக்கரையை அடைந்தது. படகைவிட்டு இறங்கினோம். பள்ளிக்குக்போகாச்சிறுவர்கள்  சிலர் அழகிய சாவிக்கோர்ப்பான்களை (எப்படி..) விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைவாங்குவதில் நாட்டமில்லாததால் நான் கங்கையில் நீராட ஆயத்தமானேன். நீராடுவதற்க்கென்றே அமைக்கப்பட்ட தடுப்பின் எல்லையைத்தாண்டாமல் அதற்க்கே உரிய இடத்தில் நின்று வான் தொழுது கங்கையில் மூழ்கினேன். குளிர்ந்த நீர் உடலில்பட்டு உடல் சிலிர்த்து எழுந்தேன். இமயமலையிலிருந்து இப்போதுதான் வந்ததோ என்று நினைக்கவைக்கும் பனிநீர். பேருவகையாய்  கங்கையில் இறங்கும் ஆவலுடன் கரையில் வீற்றிருந்த என் நண்பர்களை பார்த்து மனதிற்க்குள் சிரித்துக்கொண்டேன்.

வருவேன்…

Published in: on ஜனவரி 20, 2011 at 11:46 முப  Comments (7)  

காசி.. ஒரு அனுபவம்…

இரயில் வண்டி மெதுவாக முகல்சாராய் இரயில் நிலையத்தை வந்தடைந்தபோது  மாலை மெல்ல இரவின் பிடியில் மெதுவாக தன்னை இழந்துகொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்தேன். ஊசிப்பனி ஊரையே உலுக்கிக்கொண்டிருந்தது. எடுத்துச்சென்ற பனிக்குல்லாயை தலையில் இறுக்கிக்கொண்டு இரயில் நிலையத்தின் வாயிலை சென்றடைந்தேன்.  என்னுடன் வந்தவர்கள் எனக்கு முன்னால் சென்று ஆட்டோ பிடிப்பதற்க்கான ஆயத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். பனியின் கொடுமையிலிருந்து மீள ஒரு ராஜாவை எடுத்துப்பற்றவைத்தேன். மொழி தெரியாத ஊரில் நான். எல்லாம் இந்தி மயம். எனக்கு இந்தி தெரியாது எவ்வளவு சவுகரியமாக இருந்தது தெரியுமா. இரயில் பெட்டியில் இருந்து இறங்கும்போது ஒருவ(னு)ருடைய காலை மிதித்துவிட்டு வந்தபோது அவ(ன்)ர் என்னை பார்த்து கோபமாக ஏதோ சொல்ல.. நான் பதிலுக்கு சிரித்து வைத்து விட்டு  வந்துவிட்டேன் என்றால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்களேன். வாழ்க கலைஞர். ஒரு வழியாக ஆட்டோ ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு நான் முகல்சாராய் இரயில் நிலையத்திலிருந்து காசியை நோக்கி பயணமானேன்.

பனி மூட்டத்தில் எதிரே வந்துகொண்டிருந்த வாகனங்களின் விளக்கொளி கீற்றுகளின் நடுவே எங்கள் ஆட்டோ விரைந்துகொண்டிருந்தது. ஒரு அரை மணிநேர பயணத்தில் காசியின் வீதிகளை கண்டேன். சென்னை சௌகார்பேட்டை நெரிசல் மிகுந்த சந்துபொந்துகளை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதைவிட சற்றே அகலமான வீதி. மக்கள், வாகனம், இரைச்சல் நிறைந்த புழுதி சாலை எங்களை எங்கோ இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இறுதியில் நாட்டுக்கோட்டை சத்திரம் வந்தடைந்தோம். பிறகுதான் தெரிந்தது அது நம் தமிழ் முன்னோர்கள் அதுவும் செட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் நம்மவர்களுக்காக கட்டி வைத்துள்ள சத்திரம் என்று.  குறைந்த வாடகையில் தரமான உணவுடன் சிறிய சுத்தமான அறைகளை வாடகைக்கு கிடைக்கின்றன என அறிந்து கொண்டேன். சத்திரத்தினுள் மது புகை கண்டிப்பாக அனுமதியில்லை என்ற வாசகம் என்னை அன்புடன் வரவேற்றது. சத்திரத்தில் நுழைவில் காலணிகளை விடுவதற்கென்றே அமைக்கப்பட்ட பிரத்தேயகமான இடத்தில்  காலணிகளை வைத்துவிட்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் போய் சற்று ஓய்வெடுத்துக்கொண்டேன்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் காசி விஸ்வநாதரைப்பார்க்க ஆயத்தமானோம். நல்ல இரவு. இரவின் ஒளியில் காசி மிளிர்ந்தது. விவரம் தெரிந்த நண்பன் முன்னால் வழிகாட்ட காசி விஸ்வநாதரை தரிசிக்க நடந்து முன்னேறினேன். வீதி ரங்கநாதன் தெருவை நினைவூட்டியது. ஆலயத்தின் நுழைவில் ஏதோ நான் பாகிஸ்தானில் இருந்து வந்ததவன் போல என்னை ஆய்ந்தார்கள் அக47 வைத்திருந்த காவலர்கள் . பின்னர்தான் தெரிந்தது நான் விஜயம் செய்த நாளிலிருந்து இரண்டுவாரங்களுக்கு முன்னர்தான்  காசியின் படிததுறையில் குண்டு வெடித்தது என. ஆய்வுக்குப்பின் கோவிலின் உள் நுழைந்தேன். என் கற்பனைகளை சிதறடிக்கும் வண்ணம் உள்ளே காசி விஸ்வநாதர் பிரகாரம் மிக எளிமையாய் இருந்தது. சிறிய லிங்க ரூபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அன்று நடைபெற்ற கடைசி பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் முடிந்தபின் மீண்டும் காசியின் வீதிகளில் நடந்தேன். இரவின் மடியில் காசி மெல்ல தன் கண்களை மூடுகின்ற வேளை. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்த வீதியில் மனித நடமாட்டங்கள் குறைந்திருந்தது.சில சாய் கடைகள் மட்டும் எங்களுக்காகவே திறந்திருந்தது போல எனக்குத்தோன்றியது.  சாயாவை அருந்தியபடி நோட்டமிட்டேன். சாலையின் இரு மருங்குகளை குப்பைகள் அலங்கரித்திருந்தன. நாய்களுக்கும் பஞ்சமில்லை.  நாளை காலையில் சீக்கிரமே கங்கையை தரிசிக்க வேண்டும் என நண்பன் சொன்னதால் வேகமாய் நடந்து சென்று அறைக்குள் முடங்கி வேகமாய் உறங்கியும் போனேன்.

 மறுநாள். காலையின் ஒளியில் காசியை தரிசித்தேன். சாய் அருந்தி விட்டு அதிகாலை 7 மணிக்கு(?) இறங்கி வீதியில் நடந்தோம். காலை கடைகள் களைகட்ட துவங்கியிருந்தன. நாஞ்சில் நாடனின் விருப்பமான கடுகு எண்ணைப்பூரி தயாராகிக்கொண்டிருந்தது. காய்கறிகள் வரத்து  ஆரம்பித்திருந்தது. கத்திரிக்காய் மிகப்பெரியதாய் இருந்தது நம்மூர் கத்திரிக்காய் நான்கந்தை ஒன்றாய் உருட்டி வைத்ததுபோல. மற்றவை எல்லாம் நம்மூரிலேயே கிடைப்பனதான் என்றாலும் அவைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள அழகை(?) காண எனக்கு ஒரு அவா. நான் கத்திரிக்காய் குவியலை ஆவலோடு பார்ப்பதையே சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கங்கை ஆர்பரித்தோடும் அழகைக்காண நண்பர்களின் பின்னால் நானும் ஓடினேன். வேகவேகமாய் படித்துறையில் இறங்கும் போது கங்கையை தரிசித்தேன். காலைக்கதிரவன் கங்கையின் மேல் நர்ததனமிட்டுக்கொண்டிருந்தான். நான் படிகளில் மெதுவாக இறங்கினேன். கங்கை ஆர்பரிப்பில்லாமல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது.

வருவேன்…

Published in: on ஜனவரி 14, 2011 at 10:28 முப  Comments (6)  

பயணங்கள் முடிவதில்லை…

நேற்று என் பயணத்தினைப்பற்றிய பதிவினை படித்துவிட்டு என் நண்பன் போனில் என்னை அழைத்தான். ‘சும்மா நம்ம பக்கத்தில இருக்கிற தூத்துக்குடி, இராமேஸ்வரத்துக்கு போய்ட்டு வந்துட்டு ஏதோ ஜப்பானுக்கு போய்ட்டு வந்தமாதிரி பயணக்கட்டுரை எல்லாம் எழுதுர… இது உனக்கு ஓவராத்தெரியல..’ என்றான். அதற்க்கு நானும் ‘ஜப்பானுக்கு போய்வந்து அந்த நாட்டப்பத்தி எழுதணும்ன்னுதான் ஆசையாத்தான் இருக்கு.. ஆனா அதுக்கு அந்த ஜப்பானுக்கு இன்னும் அதிர்ஷ்டம் வரலியே..’ என்றேன்.  எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட்ட சத்தம் எனக்கு தெளிவாக கேட்டது. (சென்ற வாரம் எங்களூரின் ஏரிக்கரையை நான் படம்பிடித்து இவனிடம் காண்பிக்க அதற்க்கு இவன் ‘அட ஊட்டி ஏரி.. எப்ப போய் போட்டோ எடுத்த’ என்றவனாயிற்றே..) பொதுவாக பயணம் என்பதை   குறைந்தது 3 மணிநேரமாவது பஸ்ஸிலோ இரயிலிலோ பிரயாணம் செய்து செல்லுகிற இடத்தில் குறைந்தது 1நாளாவது தங்கியிருந்து அங்குள்ளவற்றை பற்றி அறிந்து அனுபவம் கொள்வது என்று நான் வரையறுத்திருந்தேன். என்னுடைய பள்ளிப்பிராயத்தில் முதன் முதலாக எங்களின் துவக்கப்பள்ளியிலிருந்து ஒருநாள் இன்பச்சுற்றுலா அழைத்துச்சென்றதுதான் என் முதல் பயணம். 

முதலில் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்று எஸ்.எஸ்.ஆர் பாட பிளாக் அன்ட் வொய்ட்டில் டிவியில் நாங்கள் கண்ட கடல்மல்லையை வண்ணத்தில் நேராக கண்டோம். அர்ச்சுனன் தபஸ் (எவ்வளவு பெரிய யானை..), வெண்ணெய் திரட்டிக்கல் (எவ்வளவுபேர் சேந்ந்து தள்ளினாலும் நகரமாட்டேங்குதே..), குரங்கு பேன் பார்க்கும் சிற்ப்பம் (சூப்பர்..), ஐந்து ரதம் (குச்சிஐஸ் சாப்பிட்டோம்) என அனைத்தையும் தொட்டுப்பார்த்து அனுபவித்தோம் (இப்போது தடுப்பிவேலியெல்லாம் போட்டு.. வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமாம்).  அடுத்தது கடற்கரைக்கோயில். முதன் முதலாக கடலைப்பார்த்த அனுபவம்.  எங்கள் ஆசிரியரைப்பார்த்து நாங்கள் இவ்வளவு தண்ணி எங்கிருந்து வந்தது?.. கடல் அலை என்றால் என்ன?… அது ஏன் நம்மைப்பார்த்து சீறிவருகிறது?.. எனக்கேட்டுவிட்டு அவர் சொன்ன அறிவியல் புரியாமல் கடலையே பார்த்துக்கொண்டிருந்தோம். பின்  வரிசையாக நிற்க்க வைக்கப்பட்டு கால் நனைத்தோம் (அன்று சுனாமி வந்திருந்தால் எங்களூரில் பள்ளிகூடமே இருந்திருக்காது).

அடுத்தது திருக்கழு(கு)குன்றம்.  மலையடிவாரத்தில் அமர்ந்து பயணத்துக்கே உரித்தான புளியோதரை மற்றும் தயிர்சாத பொட்டலங்களை பிரித்து பகுத்துண்டோம்.  பின் மலையேற்றம்.  நெட்டுருவான ஏற்றம்.  இளம்வயது என்பதால் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறினோம்.. (குரங்கு மாரிதி தவ்வறான் பார்.. எங்கள் வாத்தியார்). மலையுச்சியில் ஏகப்பட்ட கூட்டம்.  ஒரு இடத்தில் மக்கள் ஒரேதிசையை நோக்கி கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். நாங்களும் அமர்ந்தோம். சுமார் மதியம் 12மணியளவில் கோவில் குருக்கள் ஒரு பெரியதட்டினை எடுத்துக்கொண்டு மலையுச்சியில் உள்ள  ஒரு பாறையின் மேல் அமர எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து அந்தப்பாறையின் மேல் அமர்ந்தது.  பிறகு மெதுவாக குருக்களின் அருகில் வந்து அவர் கையில்  உள்ள உணவை கொத்தியது.  இதைக்காண மக்கள் கூட்டம் முண்டியடித்தது. நாங்கள் கம்பித்தடுப்பின் மேல் ஏறி நின்று பார்த்தோம்.  நாங்கள் பார்த்ததால் என்னவோ கழுகு உடனே மேலெழும்பி ஒரு சிறிய வட்டமும் பின் ஒரு பெரிய வட்டமும் அடித்து எங்கள் தலைக்குமேல பறந்து சென்றது.  நாங்களும் விடாமல்  தாழ்வாகப்பறக்கும் ஆகாயவிமானத்தின் பின் ஓடி பின் அது மறையும் போது போடாப்போ என்று கூவுவது  போல கழுகை நோக்கி கையை  ஆட்டி கூவினோம். எல்லோரும் எங்களை ஒரு மாதிரியாகப்பார்த்தார்க்ள். பிறகு சிவனை வணங்கிவிட்டு மலையிறங்கினோம்.  இப்போதெல்லாம் கழுகு வருவதில்லை என அறிந்தவர்கள் சொன்னார்கள்.

அடுத்தது சர்க்கஸ்.  செங்கற்பட்டிலே ஜெமினி சர்க்கஸ்.  ஜெமினி கணேசனுக்கும் சர்க்கஸ்சுக்கும் சம்மந்தமில்லை என உள்ளேபோன போதுதான் தெரிந்தது. வட்டமான பகுதி.  பகுதியைச்சுற்றி வட்டமாக நாற்காலிகள். அதற்க்குமேல் கட்டையால் அடிக்கப்பட்டு படிக்கட்டுபோன்ற இருக்கைகள்.  இந்தப்பபகுதியின் மேல் துணியால் ஆன கூரை. குறுக்கும் நெடுக்குமாக பல கயிற்றுப்பின்னல்கள். எங்களை அரங்கத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டை இருக்கையில் அமரவைத்தார்கள். உயரத்திலிருந்து பார்த்துபோது குளத்தில் கல்லிடும்போது தோன்றும் வளையங்கள் நினைவுக்கு வந்தன. தின்பதற்க்கு பொரிகடலை என் பள்ளியின் சார்பாக எங்களுக்குத் தந்தார்கள். பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன் (சர்க்கஸ் ஆரம்பித்த உடன் சாப்பிடலாம்).  சர்க்கஸ் ஆரம்பமானது. வேடிக்கையான பல நிகழ்ச்சிகள், விலங்குகளின் சாகஸங்கள் என களைகட்டியது.  சிங்கம், புலி, கரடி, யானை போன்றவவைகளை முதன்முறையாக நேரடியாக கண்டோம்.(அவற்றின் இயல்புநிலையில்லாமல்…  பின்னே.. யானை புட்பால் விளையாடுகிறது…).  கூண்டுக்குள் ஒருவன் அதிவேகமாக மோட்டார்சைக்கிளில் சுற்றியதை கேட்டோம் (சத்தம் மட்டும் வந்தது.. கூண்டுக்குள்ளே தேடினோம் சரியாகத்தெரியவில்லை). 

அடுத்தது பார்விளையாட்டு. அந்தரத்தில் இங்கும் அங்குமாய் பெண்களும் ஆண்களும் தாவித்தாவி பறந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. உடலை பம்பரம் போல் சுற்றி அவ்வளவு உயரத்திலிருந்தது கீழே உள்ள வலையில் குதிப்பது குலைநடுங்க வைத்தது. சர்க்கஸ் முடிந்து வெளியேவந்தபோது  ஏதோ ஒன்றினை இழந்துவிட்ட மனநிலை.  பேருந்தை விட்டு இறங்கி அப்பாவுடன் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.  எனக்குள்ளே பல நினைவுகள்.  கடற்கரை மணல்.. கழுகு.. சர்க்கஸ்பெண்கள்.. பஸ்சுக்குள்ளே நண்பர்களின் ஆட்டம் பாட்டம் என  பயணநினைவுகள்.  என் பின்னால் யாரேல நடந்துவரும் சத்தம் கேட்டது. மெல்ல திரும்பிப்பார்த்தேன்.  பயணம் என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

Published in: on மார்ச் 8, 2010 at 9:49 முப  Comments (8)  

இராமேஸ்வரம்…3

திரும்பினோம்.  தனுஷ்கோடியினுள் வண்டி நுழைந்து நின்றது.  நாங்கள் இறங்கி நடந்தோம்.  புயல் விட்டுச்சென்ற எச்சங்களாக பழைய இடிந்த நிலையில் உள்ள கட்டிடங்கள். இது தான் சர்ச் என்ற இடத்தில் பழய சர்ச்சின் நுழைவாயில் மட்டும் எஞ்சியிருந்தது.  ஊரே மண்மேடாக காட்ச்சியளித்தது.  ஆங்காங்கே மீனவ குடிசைகள்.  முழுமையாய் ஒரு கட்டிடத்தைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. (1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட அழிவுக்குப்பின் அரசாங்கம் தனுஷ்கோடியை மக்கள்வாழ தகுதியற்றப்பகுதியாக அறிவித்ததாம்).

தூத்தில் நிறையக்கூட்டமாக இருந்தது.  நாங்கள் கூட்டத்தை நோக்கி நடந்தோம்.  எங்களை கடந்து  சில பேர் கூட்டத்தைநோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். கண்டுகொண்டேன் அது சினிமா படப்பிடிப்பென்று.  அருகில் சென்று கூட்டதோடுத்தோடு கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்தோம்.  வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் சுறா படத்தின் படப்பிடிப்புதான் என தெரிந்து கொண்டோம்.  படப்பிடிப்பு நடக்கும் இடத்தைச்சுற்றி வளையம் போல் அமைத்து போலீஸ் மக்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டது.  விஜய் நீலநிற சட்டையோடு டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் மற்றும் 30க்கும் மேற்பட்ட நடனக்குழுவினரோடு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

‘சவுண்ட்ஸ் ஆன்.. ஆக்ஷன் என்றதும் ‘தய்யாரே தய்யா… தய்யாரே தய்யா’ என்ற பாட்டுக்கு (சுறா படத்தின் ஒரு பாடல் லீக்)  விஜய்யும் நடனக்குழுவினரும் முன்னே வந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.  காட்சி சரியாக வரவில்லை. அடுத்த டேக்குக்கு விஜய் தயாராகிகொண்டிருந்தார். மக்கள் கூட்டம் இன்னும் அதிகரித்திருந்தது.  நாங்கள் புறப்பட்டோம்.  திரும்பும் வழியில் மீண்டும் ஒரு முறை பழய இடிபாடுகளின் தரிசனம்.  ஜீப்பில் ஏறி இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டோம்.

அறைக்குத்திரும்பி உடமைகளை எடுத்துக்கொண்டு இரயில் நிலையம் வந்தடைந்தோம். இரவு உணவினை வாங்கிக்கொண்டு எங்கள் பெட்டியை நோக்கி நடந்தோம்.  இரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தது. தரை வழவழப்பான கற்க்கள் பதிக்கப்பட்டு பளபளத்தது. ஆனாலும் ஆங்காங்கே இரயில்வே தொழிற்சங்கங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களின் தலைவர்களை வாழ்த்தி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். சரியாக இரவு 8மணிக்கு இரயில் புறப்பட்டது.  எங்கள் பெட்டியில் நான் என் மனைவி குழந்தையைத்தவிர யாருமில்லை. என் மனைவி ஏற்கனவே பாம்பன் பாலத்தை பார்க்க தவறிவிடாதீர்கள் எனக்கூறியிருந்ததால் நான் ஜன்னலோரமாக உட்கார்ந்து பாம்பன் பால வருகைக்காக காத்திருந்தேன்.  இரயில் மெல்ல பாலத்தில் ஏறுவதை உணர்ந்தேன். அன்று பவுர்ணமி என்பதால் இரவில் அலைகளை தெளிவாக காணமுடிந்தது.  பாம்பன் பாலத்தின் நுழைவில் இப்போது இரயில் வண்டி மெல்ல ஊர்ந்தது.  அலைகள் சீற்றத்தோடு இரயிலை பிடிக்க எத்தனித்தன.சில சமயம் அலைகள் சீற்றத்தினால் இரயிலை பாலத்திலேயே நிறுத்தி விடுவார்கள் என என் மனைவி கூறினாள்.  எனக்குள் உள்ளூர திக்கென்றிருந்தது.  பாலத்தின் இறுதியை  வண்டி அடைந்தபோது  கதவின் வழியாக மெல்ல எட்டிப்பார்த்தேன்.  பவுர்ணமி நிலவொளியில் பாம்பன்பாலம் மெல்ல போய்க்கொண்டிருந்தது.

முற்றும். 

Published in: on மார்ச் 3, 2010 at 6:03 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

இராமேஸ்வரம்…2

கோவிலை நோக்கி நடக்கும் போதே கோவிலின் இராஜகோபுர தரிசனம்.  சூரிய ஒளியில் சந்தன நிறத்தில் இராஜகோபுரம் மின்னியது.  சில ஊர்களில் இராஜகோபுரத்திற்க்கு பல்வேறு வகையான வண்ணங்களை பூசி கோபுரத்தின் இயல்பான அழகையே கெடுத்திருப்பார்கள்.  இங்கே அப்படியில்லாமல் பார்க்க அருமையாக இருந்தது. 

 

கோவிலின் வெளியே நிறையபேர் கையில் சிறிய வாளியுடன் சுற்றிக்கொண்டிருந்தனர்.  வாளியுடன் இருந்த ஒருவரை விசாரித்தபோது கோவிலின் உள்ளே 22 வகையான தீர்த்தங்கள் உள்ளதாகவும் அந்த தீர்த்தங்களில் நீராடினால் ஒருவருடைய பாவங்கள் போகும் எனவும் ஒருவர் நீராட சுமார் 100 ரூபாய் ஆகும் எனவும் கூறினார்.  நாங்கள் நீராடாமல் கோவிலினுள் நுழைந்தோம்.  சனிக்கிழமையாதலால் கூட்டமாயிருந்தது.  வரிசையில் நின்றோம்.  அரைமணிநேர காத்திருத்தலுக்குப்பின் தரிசனம்.  இராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்றார்கள். கருவறையினுள் சிறிய சிவ லிங்கம். ஜோதியில் ஒளிர்ந்தது.  வணங்கிவிட்டு கோவிலை வலம் வந்தோம்.  அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிய மண்டபம்.  நின்று ரசித்துவிட்டு வெளியே வந்தோம்.   பக்கத்திலிருந்த ஹோட்டலில் மதிய உணவு. பில் வந்ததும் பணத்தை கட்டிவிட்டு (பகல் கொள்ளை) ஆட்டோ பிடித்து அறைக்கு வந்தோம்.  இரவு 8 மணிக்குத்தான் புறப்பாடு என்பதாலும்  இன்னும் அரைப்பகல் மீதமுள்ளதாலும் தனுஷ்கோடி போய்வரலர்ம் என முடிவு செய்து உள்ளூர் நண்பனை செல்லில் அழைத்தேன்.  இன்னும் அரைமணிநேரத்தில் வண்டி வந்துவிடும் என நண்பன் கூறியதால் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

வண்டி வந்துவிட்டிருந்தது.   அது ஒரு ஜீப் வண்டி.   நான் நண்பனுக்கு இதுபற்றி தெரிவிக்க அவனும் தனுஷ்கோடிக்கு பயணம் செய்ய ஜீப் வண்டிதான் சிறந்தது என கூறினான். நான் பயணமானேன். இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் சாலை நன்றாக இருந்தது. புறநகரில் ஒரே மீன் வாசனை.  டிரைவர் என்னைப்பார்த்து ‘ இராமேஸ்வரம் கருவாடு பேமஸ் சார்…  இங்கே மீன்களை மணலில் உலரவைக்கிறதால்தான் இந்த நாற்றம்’ என்றார்.  ஒரு சினிமாவில் கமல்ஹாசன் கூடை நிறைய கருவாடு வாங்கிக்கொண்டு நண்பனை  பார்க்க ஆட்டோவில் செல்ல, கருவாட்டு வாசனை தாங்காது  ஆட்டோ டிரைவர்  வாந்தியெடுக்க ‘கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசன’ என்று கமல் சொல்வார். அது எனக்கு  நினைவுக்கு வந்தது.  வண்டி இப்போது கடலுக்கு வெகு அருகாமையில் கடற்க்கரையை ஒட்டிய சாலையில் சென்றது.   அலைகள் சீற்றத்தோடு எங்களைப்பார்த்து சீறியது.  தெளிவான பச்சைநிற அலைகள். ஆங்காங்கே  மீனவ குடிசைகள்.  மூன்று சத்திரம் என்றஇடம் வந்தடைந்தோம்.  இங்கேதான்   கோஸ்டல் கார்ட் செக்போஸ்ட் அமைந்திருந்தது.

ஏன் ஜீப் வண்டி எனக்கு இப்போது புரிந்தது.  புதை மணல்.  சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் கூட செல்வது கடினம்.  பேருந்து செல்லவே முடியாது.  இராணுவத்தில் டாங்கிகள் தரையைப் பற்றி செல்வது போல எங்கள் ஜீப் வண்டி சென்று கொண்டிருந்தது.  அது கூட  ஏற்கனவே  பலமுறைசென்றதால் ஏற்பட்டிருந்த தடயத்தின் ஊடேதான் செல்ல முடியும்.  எங்களுக்கு முன்னாலே ஒரு ஜீப் வண்டி சென்றுகொண்டிருந்தது.   சுற்றிலும் மனித நடமாட்மில்லாத ஒரே வெளி.  ஒரு புறம் கடலின் சீற்றம்.  மறுபுறம் ஒரே சகதிவெளி.  தொலைவில் ஒரு வண்டி மணலில் சிக்கிக்கொண்டு ஆட்கள் அதை வெளியே எடுக்கப்போராடிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில்  மக்கிய கயிற்றுடன் கூடிய நங்கூரத்துடன்ஒரு படகு அனாதையாய் கிடந்தது.

இலக்கில்லாமல்  வண்டி போய்க்கொண்டிருந்தது.  நான் மெதுவாக டிரைவரிடம் ‘அண்ணே.. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்’ என்றேன். ‘எங்கே’ என்றார்(ன்).  அடப்பாவி இது தெரியாமலா நீ போய்கிட்டு இருக்கே என கேட்க நினைத்தவன் மாறாக ‘என் ப்ரண்ட் சொல்லி அனுப்பலியா’ என்றேன்.  ‘சொன்னாரு… தனுஷ்கோடியையும் அரிச்சர் முனையையும் காட்டச்சொன்னாரு’ என்றான். நானும் கோபம் வந்தாலும் காண்பிக்காமல் ‘ அதான்.. இன்னும் எவ்வளவு தொலைவு போகணும்’ என்றேன். அதோ தெரியுது பாருங்க ஒரு பாழைடைந்த கட்டிடம்.. அதுதான் தனுஷ்கோடி.. ஆனா நாம முதல்ல போகப்போறது அரிச்சர் முனை.. அது தனுஷ்கோடியோட முனை.. இன்னும் ஒரு பத்துநிமிஷத்துல அரிசசர் முனைய தொட்டுடலாம்’ என்றார் டிரைவர் தெளிவாக.  ஆனது ஆகட்டும் என்று அரிச்சர் முனைக்காக காத்திருந்தேன். வந்தது.

 

இரு கடல் சங்கமிக்கின்ற இடம். இங்கிருந்து இலங்கை 18 கிமீ என்றார்கள்.  இங்கிருந்து தான் ராமரின் வானர சேனை இலங்கைக்கு சேது பாலம் அமைத்தார்களாம்.  இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குள் வருவதற்காக கரையேறும்போது அவர்களை வரவேற்கும் நுழைவுவாயிலாகவும் அரிச்சர் முனை உள்ளது. இராபிரான் போர் முடிந்து இக்கரையில் அமர்ந்து பூஜித்ததார் என ஜதீகம் நிலவுவதால்  இன்றும்கூட பிற மாநிலத்தவர்கள் தமது முன்னோர்களுக்கான சடங்குகளைச் இம்முனையில் செய்து வருகின்றனர்.  இலங்கையை நோக்கி நின்றேன். “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!” என்ற பாரதியின் பாடல் வரிகள் மனதில் ஓடியது. 

வருவேன்…

Published in: on மார்ச் 2, 2010 at 12:32 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

இராமேஸ்வரம்…

பிப்ரவரி 26ஆம் தேதி மாலை தாம்பரத்திலிருந்து சென்னை இராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரசில் என் பயணம்.  எஸ் 3 கோச்சில் என் மனைவி மற்றும் மகள் எக்மோரிலிருந்தே புறப்பட்டு வருவதால் வண்டியின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தேன்.  வண்டி சரியாக 5.30 மணிக்கு தாம்பரம் வந்தது. என் மனைவியின் புன்னகையோடும் மகளின் அழைப்போடும் வண்டியில் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன். முன்னிருக்கையில் இளைஞர் ஒருவர் ஆவியோடு உறவாடிக்கொண்டிருந்தார் (இங்கே ஆ.வி., என்று போட்டிருக்க வேண்டுமோ). எதிரே ஒரு அம்மா ‘ டிடி வந்தா பாத்துக்கலாம்.. நீ ஒண்ணும் கவலப்பபடாத’ என்று தன் அருகில் உள்ள பெண்ணோடு அளாவளாவிக்கொண்டிருந்தார்.   நான் அப்போதுதான் கவனித்தேன். அந்த அம்மாவின் அருகில் உள்ள பெண் சற்றே மிரட்ச்சியோடிருந்தார்.  கூடவே இரண்டு ஆண்குழந்தைகள் பள்ளி சீருடையோடு(ஏதோ அவசரம் போலிருக்கிறது).  நான் அவர்களை பார்ப்பதை பார்த்துவிட்ட அந்த அம்மா ‘சார் இத கொஞ்சம் பாருங்க என்று டிக்கட்டை எடுத்து நீட்டினார்.. டிக்கட்டை நான் வாங்குவதற்க்குள் அது என் மனைவியின் கைகளுக்குச் சென்றது.  ‘வெயிட்டிங் லிஸ்ட் 75.  கஷ்டம்தான். இன்னேரம் யாராவது பல்கா கேன்சல் பண்ணியிருந்தாங்கன்னா இவங்களுக்கு  கன்பாம் ஆகியிருக்கும். எதுக்கும் டிடி வந்ததும் கேட்டுறலாம்’ என்றாள் என் மனைவி (இரயில்வேயில் பணிபரிகிறாள்(ர்). அந்தம்மாவும் ‘ஆமாம் ஸிஸ்டர் நீங்க கொஞ்சம் பேசிபாருங்களேன்.. பரமக்குடிவரைக்கும் இந்த குழந்தகளை வச்சுக்கிட்டு போகணுமாம்..’ என்றாள். ‘நீங்க’ என்றேன் நான்.  ‘ராம்நாட்.. இந்தப்பொண்ணு குந்தைகளோட கையில் டிக்கட்ட வச்சிக்கிட்டு ஸ்டேஷன்ல முழிச்சிக்கிட்டுருந்துச்சு.. ஏதோ அவசரம் போல.. நான்தான் என்கூட ஏத்திக்கிட்டேன்’ என்று அந்த அம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே டிடி வந்துவிட்டார்.

திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள். தெய்வம் கைவிடவில்லை.  அந்த பெண்ணுக்கு சீட்/பெர்த் கன்பார்ம் ஆகியிருந்தது எஸ் 8 கோச்சில்.  இம்முறை ஆ.வி. நண்பர் உதவினார்.  அவர் இருக்கையையும் பெர்த்தையும் அந்த பெண்ணுக்குத்தந்துவிட்டு எஸ் 8 கோச்சுக்கு தன் உடமைகளை எடுத்துக்கொண்டு நடந்தார்.  அந்த அம்மாள் மிகுந்த சந்தோஷமடைந்தாள். இரவு உணவை முடித்துக்கொண்டு என் பெர்த்தில் ஏறி  கிடந்தேன்.  சிறிது நேரத்தில்  என் மனைவியும் மகளும் நன்றாக உறங்கிவிட்டிருந்தார்கள்.  எனக்கு உறக்கம் வரவில்லை.  அந்த அம்மாவின் முகத்தைப்பார்த்தேன். அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லலோர்க்கும் பெய்யும் மழை.. மெல்ல கண்ணை மூடினேன். 

யாரோ என்னை எழுப்புவது போலிருந்தது.  திடுக்கிட்டு விழித்தேன். யாருமில்லை. அந்த அம்மாவும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.  ‘தினமும் குடிச்சிட்டு வந்து ஒரேத்தொல்லை.. இப்ப மலேசியாவில இருக்காரு.. வேளச்சேரியில எங்க அண்ணன் வீட்டில   இருக்கேன்.. ஊருல வேண்டியவங்க தவறிட்டாங்க.. ’ துண்டு துண்டாக வார்த்தைகள் காதில் விழுந்தன.  சிறிது நேரத்தில் பரமக்குடி வந்துவிட்டிருந்தது.  குழந்தைகளுடன் அந்தப்பெண் இறங்கினாள்.  மணியைப்பார்த்தேன்.  அதிகாலை 2.30. நான் மெல்ல பெர்த்திலிருந்து இறங்கி வாயிலை அடைந்தேன்.  தூரத்தில் மின்சார கம்பத்தின் ஒளியில் அந்தப்பெண் இரு குழந்தைகளின் கையைப்பிடித்து வேகமாக நடந்து சென்று மறைவது தெரிந்தது.

வண்டி புறப்பட்டது.   நான் என் பர்த்தில் ஏறாமல்  கீழே இருக்கையில் குனிந்து அமர்ந்து கொண்டேன். வண்டி போய்க்கொண்டிருந்தது. ‘என்ன தம்பி தூக்கம் வரலியா’ என்று அந்தம்மா எழுந்தார்கள்.  ‘இல்ல… அவங்க கிளம்பிட்டாங்க போல இருக்கே’ என்றேன். ‘ஆமா தம்பி.. என்ன குடும்ப கஷ்டமோ.. பாவம்.. இருக்கிறவனுக்கு இல்லாத குறை.. இல்லாதவனுக்கு எல்லாமே குறை’  என்று கூறிக்கொண்டே ‘ராம்நாட் ஸ்டேஷன் வருது தம்பி.. நான் முன்னாடி போய்க்கிறேன்’ என்று அவருடைய பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தார்.  நான் மெல்ல கண்ணயர்ந்தேன்.

 ‘என்னங்க ஸ்டேஷன் வந்துருச்சி.. எந்திரிங்க..’ மனைவி.  எழுந்தேன்.  நான் என்மகளை எடுத்துக்கொள்ள என் மனைவி பெட்டியை உருட்டியபடியே ராமேஸ்வரம் ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில்  காலை 4.30 மணியளவில் நடந்தோம். ஆலமரத்தின் அடியில் இராமேஸ்வரம் என்ற ரெயில்வேயின் மஞ்சள் போர்ட் எங்களை வரவேற்றது (டெட் என்ட்).  ஸ்டேஷனுக்கு அருகிலேயே ஓய்வறை ஏற்கனவே ஏற்பாடாகியிருந்ததால் நேராகப்போய் சாவியை வாங்கிக்கொண்டு எங்களுக்குண்டான அறையை அடைந்தோம்.  முகம் கழுவினேன்.  நீர் ஒரே உப்புகரித்தது (கடலில் இருந்து நேரிடையாக  ரூமுக்கு கனெக்க்ஷன் போல).  எங்களுக்கு காலையில் 8மணிக்குத்தான் புறப்பாடு என்பதால் கட்டிலில் விழுந்தேன்.

மீண்டும் ஒரு  முறை விழித்தெழுந்தேன்.  வேகமாக நீராடி (அதே உப்பு நீரில்தான்)  கோவிலுக்குப்புறப்பட்டோம்.  ஆட்டோ ஓடி(ஆடி)க்கொண்டிருந்தது.  வீதியெங்கும் வாசம் (புரிந்து கொள்க).  கோவிலின் அருகேயுள்ள கடற்க்கரையை அடைந்தோம். கடற்கைரையைச்சுற்றி வேதவிற்ப்பன்னர்களின் மந்திர ஓசை. சில போர் கூட்டமாக  தத்தம் மூதாதயருக்கு பிண்டம் வைத்துக்கொண்டிருந்தனர்.  மிகுதியாக வடமாநிலத்தவர்களை காணமுடிந்ததது.  பலர் கடலில் மூழ்கி தத்தம் பாவங்களை கழுவிக்கொண்டிருந்தார்கள் (கடலை யார் கழுவுவது என்று கேட்குமளவிற்க்கு கடற்கரை அசுத்தமாயிருந்தது). தூரத்தில் படகுகள் வரிசையாக காணப்பட்டன.  கடலில் பல படகுகளை காணமுடிந்தது.  இன்று கடலுக்கு புறப்பாடு என்று யாரோ யரிரிடத்திலோ கூறியதை கேட்டேன்.  சிலோன்காரன் குண்டுபடாமல் இவர்கள் நல்லபடியாக திரும்பவேண்டும் என வேண்டிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தேன்.

வருவேன்…

 

Published in: on மார்ச் 1, 2010 at 12:12 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

திருச்சிமலக்கோட்டடா…

என்ன.. மரியாத குறையுது என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.  என்ன செய்ய.. தலைப்பை கொஞ்சம் வித்தியாசமா போட்டாத்தான் நம்மாளுங்க நம்பள திரும்பி பாக்குறாங்க. (வேற ஒண்ணும் இல்லிங்க… திருநெல்வேலி அல்வாடா… திருச்சி மல கோட்டடா.. ன்னு ஒரு பாட்டு வருதில்ல…). சரி விஷயத்துக்கு வருவோம்.  இதுவரை திருச்சி மலைக்கோட்டைக்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளேன்.  ஒன்று என் பள்ளி பருவத்தில் சுற்றுலா செல்லும் போது. மலைக்கோட்டையின் கீழே சற்றே ஏற்றம் நிறைந்த ஒரு வீதியில் எங்கள் ஆசிரியர் எங்களை வரிசையாக நிற்க்கவைத்து அழைத்துச்செல்லும்போது அந்த வீதியே வேடிக்கை பார்க்கவந்த எங்களை வேடிக்கை பார்த்தது. இரண்டாவது முறை எனக்கு திருமணமானபின் என் மனைவி மற்றும் என் மகளுடன் சமீபத்தில் சென்றது.  அதன் அனுபவம் தான் இந்தப்பதிவு.

இளம்மாலை வேளையில் நாங்கள் ஏற ஆயத்தமானோம்.  சபரிமலை சீசன் ஆதாலால் அடிவார பிள்ளையாருக்கு ஏக கிராக்கி.  கண்டும் காணாமல் தரிசித்துவிட்டு ஏற துவங்கினோம்.  சின்னஞ்சிறுசுகள் வேகமாக படிக்கட்டுகளை தாவித்தாவி ஏறின.   இது போன்ற நெட்டான மலைகளில் வயதானவர்கள் ஏறும் போது Z  என திசை மாறிக்கொண்டே ஏறினால் எளிதாக ஏறலாம் என்பதை  கண்கூடாக கண்டேன். ஒரு முதியவர்  திசை மாறி மாறி மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்.   ஒரு இடத்தில் ஏற்றம் கூரையால் மூடப்பட்டிருந்தது.  உள்ளே இருள் சூழ்ந்து காணப்பட்டது.  எனக்கு முன்னே ஒருவர் (அர்ச்சகர் போலும்) வேகமாக ஏறிகொண்டிருந்தார்.  ஒரு சமயத்தில் நான் என் மனைவி குழந்தை தவிர முன்னேயும் பின்னேயும் ஆட்க்களில்லை.  எங்களிடம் வேகம் குறைந்து ஓரிடத்தில் நின்றோம்.

திடீரென்று எங்கள் எதிரே ஒரு இளம் ஜோடி வேகமாக படி இறங்கியது.  எனக்கு அவர்களுடைய வேகத்தினை கண்டு பயமாயிருந்தது. விழுந்தால் அவ்வளவுதான்.  இப்போது எங்கிருந்தோ சத்தமாக யாரோ கத்துவது கேட்டது.  நாங்கள் மீண்டும் ஏற ஆரம்பித்தோம்.  சத்தம் இப்போது தெளிவாக.  வெள்ளை வேட்டி அழுக்கான சட்டையோடு ஒருவர் எங்களுக்கு முன்னால் சென்ற அர்ச்சகரோடு சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  நாங்கள் அருகில் போய் நின்று பார்தோம்.  உண்மையில் அவரால் சத்தம் மட்டுமே போட முடிந்ததது.  பாவம் ஊமை.  ‘சித்த நேரம் சும்மாயிரு.. நா திரும்பி வந்து பாத்துக்கறேன்’ என்றார் அர்ச்சகர்.  அர்சசகர் எங்களைப்பார்த்து சிரித்துவிட்டு ‘இங்கதான் கதியேன்னு இருக்கார்.. பாவிகள் இவர் படுத்திக்கிட்டு இருக்கறதுக்கு பக்கத்திலேயே அசிங்கம் பண்றதுகள்.. அதுதான் சத்தம் போட்டு விரட்டியிருக்கார்’ என்ற படி படியேறினார்.  இப்போது எனக்கு புரிந்தது அந்த இளம் ஜோடிகள் ஏன் அவ்வளவு வேகமாக படியிறங்கினார்கள் என்று.

மேலே வந்துவிட்டிருந்தோம்.  தாகித்தது.  தரிசனம் முடிந்து பார்த்துக்கொள்ளலாமென உச்சிப்பிள்ளையாரை நோக்கிச்சென்றோம்.  நல்ல தரிசனம். பிள்ளையார் எளிமையா அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தரிசனம் முடிந்து கோவிலை வலம் வந்தோம்.  தூரத்தில் பாலத்தில் வண்டிகள் ஊர்வது அற்ப்புதமாக தெரிந்தது (அதாங்க.. திருடா திருடி படத்தில் தனுஷ் தன் சாக்களை சந்திக்கின்ற பாலம்தான்).  திருச்சியின் எழில் மிகு தோற்றத்தினை மலையுச்சியிலிருந்து கண்டு களித்தோம்.  ஒரிடத்தில் அமர்ந்தோம். சுற்றிலும் ஆங்காங்கே  பல இளசுகளை காண முடிந்தது. நம்ம சென்னை மாதிரி இளசுகளுக்கென்று இங்கே கடற்க்கரை இல்லாதது பெரிய குறைதான். தாகசாந்தி முடித்துவிட்டு படியிறங்கினோம்.  திரும்பும்போது வேட்டி சட்டை பெரியவரை காணவில்லை. 

Published in: on பிப்ரவரி 24, 2010 at 7:22 முப  Comments (4)  

தூத்துக்குடி…9

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.  கூட்டமிருந்தது.  கடலில் கால் நனைத்துவிட்டுதான் தரிசிக்கவேண்டும் என்று நண்பன் சொன்னதால் கடற்க்கரையை அடைந்தோம்.  என்னைக்கேட்காமலேயே ஒரு அலை என்காலை நனைத்துவிட்டு சென்றது.  முருகன் சூரசம்ஹாரம் செய்கின்ற இடமாம். கோவிலின் பிரதான வாயிலை அடைந்தோம். நண்பன்  தமக்கு முன்னரே பரிச்சயமான ஒரு குருக்களை தேடி கண்டுபிடித்து எளிதாக தரிசனத்திற்க்கு ஏற்ப்பாடு செய்துவிட்டான்.  குருக்கள் எங்களை நேராக மூலவரிடமே அழைத்து சென்று அமரவைத்தார்.  அற்ப்புதமான தரிசனம்.   முருகனை கண்ணார கண்டுவிட்டு குருக்களையும் கவனித்துவிட்டு கோவிலை வலம் வந்தோம்.

 

கோவிலைச்சுற்றி நிறைய கடைகள்.  ஒவ்வாருகடைகளிலும் விதவிதமான பொருட்க்கள்.  குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து நிறைய விளையாட்டு பொருட்க்கள். அதிலும் நிறைய புதுமைகளை புகுத்தியிருந்தார்கள்.  நிதானமாய் ஒவ்வாருகடையாய் ஏறிஇறங்கினேன்.  நண்பன் அவசரப்படுத்தவே மனமில்லாமல் பேருந்து நிற்க்குமிடத்திற்கு விரைந்தோம். இம்முறை அரசுபேருந்து. சொல்வதற்கில்லை.  பசியெடுத்தது.  நண்பன் நாம் தூத்துக்குடியை அடைந்ததும் உணவருந்தலாம் எனக்கூறவே கண்ணயர்ந்தேன். தூத்துக்குடி வந்தது எனக்கு தெரியவில்லை.  நண்பன் எனைதட்டி வா என்றான்.  இறங்கினோம்.  இப்போது பசியில்லை.  பசியை பசி தின்றுவிட்டிருந்தது.  அறையைவந்தடைந்தோம்.  மதிய நேரம் முடியும் தருவாய்.  ஏற்கனவே உணவினை செல்பேசியில் சொல்லிவிட்டிருந்ததினால் உணவு தயாராக இருந்தது.   சிறிதாக ஊற்றிக்கொண்டு உணவருந்த அமர்ந்தோம்.  இரண்டு நாட்க்ளை ரீவைண்ட செய்தோம்.  சிறிது நேர ஓய்வுக்குப்பின் அறையை காலி செய்து புறப்பட்டோம்.   ஊர் திரும்ப எனக்குமட்டும் இரயிலில் புக்செய்யப்பட்டிருந்ததால் மற்ற அனைவரும் பேருந்தில் புறப்பட்டனர்.  எனக்கு மாலை 7.45 மணிக்கு என்பதால் பொடிநடையாக ஸ்டேஷனை அடைந்தேன். வாயிலில் முத்துச்சிப்பி எனைப்பார்த்து சிரித்தது. பயணிகள்  பதிவுச்சீட்டை சரிபார்த்து ஏறி அமர்ந்தேன். வண்டி புறப்பட இன்னும் அரைமணிநேரமிருந்தது.   இறங்கி நடைமேடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்தேன்.  தூத்துக்குடியின் வட்டார  வழக்கொலி இன்னும் சில நிமிடங்களில் எனைவிட்டு மறையும் என்பதால் எனைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை காதாற கேட்டேன்.  சிக்னல் போட்டிருந்தார்கள்.  மெல்ல பெட்டியில் ஏறி அமர்ந்தேன்.  இரயில் என்னை தூத்துக்குடியிலிருந்து மெல்ல என்னை சென்னை நோக்கி தள்ளிக்கொண்டு சென்றது…

…முற்றும்

 

Published in: on பிப்ரவரி 19, 2010 at 12:21 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

புஜி மாரு…

It is as if a colourful and multi-cultural world exists in a microcosm on board the Japanese cruise liner Fuji Maru which docked at the Chennai Port on Wednesday. A contingent of over 250 youth of various nationalities is here as part of the ‘Ship for World Youth’ (SWY) programme being run by the Cabinet Office, Government of Japan. The 22nd edition of the programme which involves youth of Japan and various nationalities is aimed at providing an on-board living experience that could make a world of difference for the future. Participants live together, study and discuss common issues from a global perspective and participate in other various activities that involve multi-cultural and multi-national exchange opportunities. “It is great fun and a learning experience as well,” said Thushara Deepal Dias Dahanayake, who has led the Sri Lankan youth delegation. There are 134 participants from Japan and 143 youth from 12 countries, including Australia, Bahrain, Ecuador, Egypt, Greece, Turkey and Yemen. The ship, which left the Yokohama harbour on January 22, has come to Chennai after stopovers at Singapore and Dubai.

நல்லாத்தானய்யா போய்க்கிட்டுருந்துச்சு என நீங்க நினைக்கறது எனக்கு புரியுது.  என்ன செய்ய.  மேலே உள்ள செய்தியையும் படத்தைத்தையும் பார்த்தா உங்களுக்கு இது ஒரு சாதாரணமான செய்தியா தெரியலாம்.  எனக்கோ அனுபவம்.  படத்தில் உள்ள ‘புஜி மாரு’ கப்பலின் விருந்தினராக உள்ளே நுழைந்த அனுபவம்.  புஜி மாரு கப்பல்  நேற்று எனக்கு அறிமுகமானது என் மனைவியின் மூலமாக. உலக இளைஞ(ஞி)ர் கப்பல் என்பது   பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்களை  தேர்வுசெய்து பல்வேறு நாடுகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று பல்வேறுநாடுகளின் கலை மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்காகவும் நட்புறவை வளர்பதற்காகவும் ஜப்பான் அரசாங்கத்தால் ஏற்பாடுசெய்யப்டுவது .   1998 ஆம் ஆண்டு என் மனைவிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது.  இந்த கப்பலில் பயணம் செய்த முன்னாள் இளைஞி என்பதால் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு. அதனால் எனக்கும் இலவசமாக ஒரு ஜப்பான் டின்னர்.   புஜி மாருவில் சாப்பிட்டு விட்டு புஜி மாருவைப்பற்றி பதிவெழுதாமல் போனால் நல்லாயிருக்குமா… சாம்பிளுக்கு சில புகைப்படங்கள் கீழே…

 

 

 

புஜி மாரு துறைமுகத்தில் எப்படி டாக்  செய்யப்படுகிறது  என்பதை கீழே உள்ள சுட்டியை சொடுக்கினால் தெரியும்…

http://www.youtube.com/watch?v=KxIVmHcPn2Y&feature=related

Published in: on பிப்ரவரி 19, 2010 at 7:09 முப  Comments (4)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...