காசி.. ஒரு அனுபவம்…

இரயில் வண்டி மெதுவாக முகல்சாராய் இரயில் நிலையத்தை வந்தடைந்தபோது  மாலை மெல்ல இரவின் பிடியில் மெதுவாக தன்னை இழந்துகொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்தேன். ஊசிப்பனி ஊரையே உலுக்கிக்கொண்டிருந்தது. எடுத்துச்சென்ற பனிக்குல்லாயை தலையில் இறுக்கிக்கொண்டு இரயில் நிலையத்தின் வாயிலை சென்றடைந்தேன்.  என்னுடன் வந்தவர்கள் எனக்கு முன்னால் சென்று ஆட்டோ பிடிப்பதற்க்கான ஆயத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். பனியின் கொடுமையிலிருந்து மீள ஒரு ராஜாவை எடுத்துப்பற்றவைத்தேன். மொழி தெரியாத ஊரில் நான். எல்லாம் இந்தி மயம். எனக்கு இந்தி தெரியாது எவ்வளவு சவுகரியமாக இருந்தது தெரியுமா. இரயில் பெட்டியில் இருந்து இறங்கும்போது ஒருவ(னு)ருடைய காலை மிதித்துவிட்டு வந்தபோது அவ(ன்)ர் என்னை பார்த்து கோபமாக ஏதோ சொல்ல.. நான் பதிலுக்கு சிரித்து வைத்து விட்டு  வந்துவிட்டேன் என்றால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்களேன். வாழ்க கலைஞர். ஒரு வழியாக ஆட்டோ ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு நான் முகல்சாராய் இரயில் நிலையத்திலிருந்து காசியை நோக்கி பயணமானேன்.

பனி மூட்டத்தில் எதிரே வந்துகொண்டிருந்த வாகனங்களின் விளக்கொளி கீற்றுகளின் நடுவே எங்கள் ஆட்டோ விரைந்துகொண்டிருந்தது. ஒரு அரை மணிநேர பயணத்தில் காசியின் வீதிகளை கண்டேன். சென்னை சௌகார்பேட்டை நெரிசல் மிகுந்த சந்துபொந்துகளை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதைவிட சற்றே அகலமான வீதி. மக்கள், வாகனம், இரைச்சல் நிறைந்த புழுதி சாலை எங்களை எங்கோ இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இறுதியில் நாட்டுக்கோட்டை சத்திரம் வந்தடைந்தோம். பிறகுதான் தெரிந்தது அது நம் தமிழ் முன்னோர்கள் அதுவும் செட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் நம்மவர்களுக்காக கட்டி வைத்துள்ள சத்திரம் என்று.  குறைந்த வாடகையில் தரமான உணவுடன் சிறிய சுத்தமான அறைகளை வாடகைக்கு கிடைக்கின்றன என அறிந்து கொண்டேன். சத்திரத்தினுள் மது புகை கண்டிப்பாக அனுமதியில்லை என்ற வாசகம் என்னை அன்புடன் வரவேற்றது. சத்திரத்தில் நுழைவில் காலணிகளை விடுவதற்கென்றே அமைக்கப்பட்ட பிரத்தேயகமான இடத்தில்  காலணிகளை வைத்துவிட்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் போய் சற்று ஓய்வெடுத்துக்கொண்டேன்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் காசி விஸ்வநாதரைப்பார்க்க ஆயத்தமானோம். நல்ல இரவு. இரவின் ஒளியில் காசி மிளிர்ந்தது. விவரம் தெரிந்த நண்பன் முன்னால் வழிகாட்ட காசி விஸ்வநாதரை தரிசிக்க நடந்து முன்னேறினேன். வீதி ரங்கநாதன் தெருவை நினைவூட்டியது. ஆலயத்தின் நுழைவில் ஏதோ நான் பாகிஸ்தானில் இருந்து வந்ததவன் போல என்னை ஆய்ந்தார்கள் அக47 வைத்திருந்த காவலர்கள் . பின்னர்தான் தெரிந்தது நான் விஜயம் செய்த நாளிலிருந்து இரண்டுவாரங்களுக்கு முன்னர்தான்  காசியின் படிததுறையில் குண்டு வெடித்தது என. ஆய்வுக்குப்பின் கோவிலின் உள் நுழைந்தேன். என் கற்பனைகளை சிதறடிக்கும் வண்ணம் உள்ளே காசி விஸ்வநாதர் பிரகாரம் மிக எளிமையாய் இருந்தது. சிறிய லிங்க ரூபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அன்று நடைபெற்ற கடைசி பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் முடிந்தபின் மீண்டும் காசியின் வீதிகளில் நடந்தேன். இரவின் மடியில் காசி மெல்ல தன் கண்களை மூடுகின்ற வேளை. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்த வீதியில் மனித நடமாட்டங்கள் குறைந்திருந்தது.சில சாய் கடைகள் மட்டும் எங்களுக்காகவே திறந்திருந்தது போல எனக்குத்தோன்றியது.  சாயாவை அருந்தியபடி நோட்டமிட்டேன். சாலையின் இரு மருங்குகளை குப்பைகள் அலங்கரித்திருந்தன. நாய்களுக்கும் பஞ்சமில்லை.  நாளை காலையில் சீக்கிரமே கங்கையை தரிசிக்க வேண்டும் என நண்பன் சொன்னதால் வேகமாய் நடந்து சென்று அறைக்குள் முடங்கி வேகமாய் உறங்கியும் போனேன்.

 மறுநாள். காலையின் ஒளியில் காசியை தரிசித்தேன். சாய் அருந்தி விட்டு அதிகாலை 7 மணிக்கு(?) இறங்கி வீதியில் நடந்தோம். காலை கடைகள் களைகட்ட துவங்கியிருந்தன. நாஞ்சில் நாடனின் விருப்பமான கடுகு எண்ணைப்பூரி தயாராகிக்கொண்டிருந்தது. காய்கறிகள் வரத்து  ஆரம்பித்திருந்தது. கத்திரிக்காய் மிகப்பெரியதாய் இருந்தது நம்மூர் கத்திரிக்காய் நான்கந்தை ஒன்றாய் உருட்டி வைத்ததுபோல. மற்றவை எல்லாம் நம்மூரிலேயே கிடைப்பனதான் என்றாலும் அவைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள அழகை(?) காண எனக்கு ஒரு அவா. நான் கத்திரிக்காய் குவியலை ஆவலோடு பார்ப்பதையே சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கங்கை ஆர்பரித்தோடும் அழகைக்காண நண்பர்களின் பின்னால் நானும் ஓடினேன். வேகவேகமாய் படித்துறையில் இறங்கும் போது கங்கையை தரிசித்தேன். காலைக்கதிரவன் கங்கையின் மேல் நர்ததனமிட்டுக்கொண்டிருந்தான். நான் படிகளில் மெதுவாக இறங்கினேன். கங்கை ஆர்பரிப்பில்லாமல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது.

வருவேன்…

Published in: on ஜனவரி 14, 2011 at 10:28 முப  Comments (6)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2011/01/14/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

6 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. சரி …நம்ம தமிழ் நாட்டில் சில ஊர்களில் சிலர் “பாழாய் போன காசி ” என்று ஏன் திட்டுகிறார்கள் …என்ற காரணம் காசியில் அறிந்து வந்து சொல்லவும் ….நீங்கள் தான் அரிவதில் வல்லவர் ஆச்சே …:)

    • //நீங்கள் தான் அரிவதில் வல்லவர் ஆச்சே//

      உண்மைதான் தம்பி… இதையேத்தான் என் மனைவியும் சொன்னார்கள்… நன்றி…

  2. சார் இவ்வளவு ரசனையான எழுத்து நடை இருந்தும் ஏன் நிறைய எழுத மாட்டேனென்கிறீர்கள்

    • திரு. ஆறுமுகம் அவர்களுக்கு என் நன்றி. நிறைய எழுத ஆசை. உங்களின் ஊக்கம் என்னை இனி வரும் காலங்களில் நிறைய எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.

  3. காசி நல்ல ஊர் ஆனா அங்க பொக‌ பாவம் நெரய செய்யனும

    • இன்னா பாஸ்கரு… நம்மளப்பத்தி தெரிஞ்சுகிட்டே நம்மள கலாக்கிறியே…


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...