காசி.. ஒரு அனுபவம்… 3

கங்கா ஸ்தானம் ஆயிற்று. படகோட்டி தம்பி எங்களைப்பார்த்து கையசைத்தான். நாங்கள் நனைந்த உடையுடன் படகில் ஏறி அமர்ந்தோம். கரையின் அக்கரை பனாரஸ்.  ஆம் பட்டுக்கு பெயர்போன பனாரஸ்ஸேதான். அது நாகரீக நகரம் என்று என்று என் நண்பன் கூறினான். மீண்டும் கங்கை நதியில் படகில். இம்முறை கூட்டமாய் வெண்பறவைகள் (பெயர் தெரிய வில்லை…) எங்கள் படகை சூழ்ந்து கொண்டன. படகோட்டி நண்பன் அவைகளுக்காக உணவை வீசியெறிந்து விட்டு எங்களையும் அவைகளுக்கு உணவளிக்குமாறு கூறி சில (மிக்ஸர் போன்ற) பொட்டலங்களை எங்களுக்கு அளித்தான் (பொட்டலம் ரூ.5). நாங்கள் வீசியதைத்தொடர்ந்து ஒரு பறவைப்படையே நாங்கள் பயப்படும் அளவிற்க்கு எங்களை முற்றுகையிட்டது. நகராப்படகு. நாங்கள் வீசியெறிந்த உணவை  வெண்பறவைகள் சத்தமிட்டபடி பாய்ந்து பிடித்தன. அவைகளுடைய இரைச்சல் இசையாய் என் காதுகளில்.  அந்த சூழல் என்னை என்னுடைய குழந்தைபருவத்திற்கே அழத்துச்சென்றது.  பறவைகளை பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.

மீண்டும் படித்துறையில். நானும் என் நண்பனும் மட்டும் தனியே படித்துறையில் நடந்துசென்றோம். படித்துறையின் சில இடங்களில் அகோரிகளை காணமுடிந்தது. ஒரு அகோரி அருகில் சென்று அமர்ந்தேன்.  என் நண்பனும் அமர்ந்தான்.  எங்களின் வருகையையோ நாங்கள் அவர் அருகில் அமர்ந்ததையோ பொருட்படுத்தாமல் கங்கையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். உலகே மாயம்.. வாழ்வே மாயம்..  நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.. வாயில் ஒரு புகைவாங்கி/போக்கி. உள்ளே நிச்சமாய் கஞ்சா போன்ற வஸ்து(?) இருக்கும் என்று என் நண்பன் சொன்னான். நான் அதை பரிசோதிக்க விரும்பாமல் எழுந்து நடையைக்கட்டினேன்.

அந்த படித்துறையிலும் வருங்கால சச்சின்களும்  டோனிக்களும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருநதார்கள்.  அதற்க்கு சற்று தள்ளி ஒரு காதல் ஜோடி விளையாடிக்கொண்டிருந்தது. மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை என்றான் என் நண்பன். சாய் குடிக்க படித்துறையின் சந்தில் அமைந்த ஒரு கடையில் ஒதுங்கினோம். அப்போதுதான் அந்த கடையில் சாய்அருந்திவிட்டு சிலர் அங்கே படுக்கைவக்கப்பட்டிருந்த சவத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர். நான் புத்தகத்தில் இதுபோல படித்திருக்கிறேன். அதை நேரிலே காணும்போது என்னுற் ஏற்படும் அழுத்தம் என்னை ஏதோ செய்தது.  மண் குடுவையில் உள்ள சாய்யை உறுஞ்சிவிட்டு கண்ணை மூடினேன். நண்பன் என்னை தட்டியெழுப்பி காசியில் அதுவும் தகனம் செய்யும் இடத்தில் சவ வாடை இருக்காது எனவும் காசியில் காகங்களை காணமுடியாது எனவும புதுத்தகவலைத்தந்தான். ஆம் நான் காசியில் இருந்தவரை ஒரு காகத்தைக்கூட பார்க்கவில்லை. மெதுவாக படித்துறையின் மேலேறி காசியின் வீதிகளில் நடந்தோம். இம்முறை எனக்கு பிடித்தமான பூரி மற்றும் சப்ஜி வாங்கியுண்டேன். சப்ஜி என்னை ஒன்றும் செய்யாது என்னும் தைரியத்தில் மீண்டும சப்ஜிக்காக கையேந்தினேன். நண்பன் நேரமின்மையை குறிப்பிடவும் நான் விடுதிக்கு விரைந்தேன். அங்கே எங்களுக்கு இரயில் நிலையம் செல்ல வாகனம் தயாராக இருந்தது. வேகவேகமாய் விடுதியை காலி செய்துவிட்டு கீழிறிங்கி காசியில் என் காலடித்தடத்தை விடுத்து  வாகனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் காசியை விட்டு அகன்று பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்தது. மாலைப்பனிமூட்டத்தில பாலத்தின் மேலிருந்து காசியை பார்த்தேன். படித்துறைகள் மங்கலாக தெரிய தூரத்தில் எரியூட்டப்படும் சிதைகள் தீயசைத்து எனக்கு விடையளித்தன.

நான்  ரசித்த  காசியின் அழகு உங்கள் பார்வைக்கு. கண்டு களியுங்கள் :            http://www.youtube.com/watch?v=u4NOzqeJY-Y

Published in: on ஜனவரி 21, 2011 at 11:28 முப  Comments (2)  

காசி.. ஒரு அனுபவம்… 2

படித்துறையில் இறங்கினோம். படித்துறையே பரவி நீண்டு பனி புகையினுள் எல்லையில்லாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தது. கதிரவன் மெல்ல சோம்பல்முறித்துக்கொண்டிருக்க இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் செல்ல ஆயத்தமானோம். அக்கரையில்தான் நன்னீர் உளது..  அங்கு குளித்து பாவவிமோசனமடையலாம்(?) என நண்பன் கூறவும் ஆறு  மாதங்களுக்கு முன்னர்தான் இராமேஸ்வரம் சமுத்திரத்தில் என் பாவங்களை களைந்துவிட்டமையால் மிகுதியுள்ள  ஒரு ஆறு மாத பாவங்களை கங்கையில் களைய புறப்பட்டேன். படகோட்டி (சரிதானே?..) இந்தியில் நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்க நானோ காசியின் படித்துறை அழகை என் கண்களால் பருகிக்கொண்டிருந்தேன். கங்கையின் வெள்ளப்பெருக்கின்போது இந்த படித்துறைகளின் கீழுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் எனவும் அதனாலேயே இங்குள்ள படித்துறைகள் உயரமாக எழுப்பபட்டுள்ளன எனவும் அறிந்துகொண்டேன். படித்துறையை ஒட்டி அழ(ழுக்)கான பல வண்ண கட்டிடங்கள். ஒவ்வொரு படித்துறையும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. படகோட்டி நண்பன் ஒவ்வொரு படித்துறை பகுதிகளின் அருகாமையில் படகினை செலுத்தி அதன் தலவரலாறுகளை விளக்க நான் விளங்கிக்கொண்டேன்(?). ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சிறப்பினைப்பெற்றதாய் இருந்தது. கங்ககைக்கு நிதமும் கங்கா ஆர்த்தி செய்யும் இடம்  வண்ணமயமாய் காட்சியளித்தது (இங்குதான் நான் சொன்ன குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாம்…) அரிச்சந்திரா கட் மற்றும் முருகன் கோவில் இருந்த படித்துறையும் அருகில் சென்று பார்த்தோம். கங்கையின் மடியில் அடி சாய்ந்திருந்த ஒரு ஆலயத்தினையும் கண்டோம். அழகாய் இருந்தது பைசா சாய் கோபுரத்தினைப்போல.

அடுத்து மயான காண்டம். காசிக்கு நான் வந்த நோக்கமே இந்த மாயானத்தை தரிக்கத்தான் என்றால் மிகையாகாது (நன்றி : நான் கடவுள்). ஆடி அடங்கிய வாழ்க்கையின் எச்சங்கள் ஆங்காங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. அதிலும ஒரு அழகு. எரியூட்டத்தேவைப்படும் விறகுள் விற்பனைக்கு அங்குள்ள படகுகளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டு மிதந்துகொண்டிருந்தன. அக்கணப்பொழுதில் எரியும் தீக்கங்குகளில் குறைந்தது நான்கந்துபேர் மோட்சம் அடைந்துகொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது நான் கண்டுகொண்டிருப்பது கீழ்தளமென்று. மேல்தளத்தில் இன்னும் பல பேர் தீக்குள் உறங்கிக்கொண்டிருப்பார்கள் எனவும் இன்றும் பல பேர் வரிசைகிராமமாய் தீக்குள் இறங்க ஆயத்தமாய் இருப்பார்கள் எனவும் அறிந்துகொண்டேன். நேரமிருப்பின் அருகில் சென்று காணலாம் என முடிவுசெய்தேன். சிலர் இங்கு வந்து மோட்சமமைய காத்துகொண்டிருக்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னபோது காலையில் நான் படித்துறையில் கால்வைக்கும்போது நிறைய வயோதிகர்கள் படித்துறையில் உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. உடல் பொருள் இங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. படகிலிருந்தபடியே கண்மூடி ஒரு நிமிடம் வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தபோது என் மனைவியின் உருவம் என் கண்முன்னே வந்ததால் தியானத்தை கலைத்துவிட்டு கங்கையின் மறுபுறம் நோக்கினேன்.

படகு மெல்ல அக்கரையை அடைந்தது. படகைவிட்டு இறங்கினோம். பள்ளிக்குக்போகாச்சிறுவர்கள்  சிலர் அழகிய சாவிக்கோர்ப்பான்களை (எப்படி..) விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைவாங்குவதில் நாட்டமில்லாததால் நான் கங்கையில் நீராட ஆயத்தமானேன். நீராடுவதற்க்கென்றே அமைக்கப்பட்ட தடுப்பின் எல்லையைத்தாண்டாமல் அதற்க்கே உரிய இடத்தில் நின்று வான் தொழுது கங்கையில் மூழ்கினேன். குளிர்ந்த நீர் உடலில்பட்டு உடல் சிலிர்த்து எழுந்தேன். இமயமலையிலிருந்து இப்போதுதான் வந்ததோ என்று நினைக்கவைக்கும் பனிநீர். பேருவகையாய்  கங்கையில் இறங்கும் ஆவலுடன் கரையில் வீற்றிருந்த என் நண்பர்களை பார்த்து மனதிற்க்குள் சிரித்துக்கொண்டேன்.

வருவேன்…

Published in: on ஜனவரி 20, 2011 at 11:46 முப  Comments (7)  

தடாக மலையும்… தாடகை மலையும்…

கிரகம் சுத்திச்சுத்தியடிக்கும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் நடந்தது. புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆசை. ஆனால் அதற்க்கு  ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணிநேரமென்றால் நீங்களாய் இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா. ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். சகதர்மினியோடு (தமிழ் சரிதானே?..) ஒரு ஷாப்பிங் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ‘அப்படியே புக் ஃபேர் போயிட்டு வரலாமா?.’ என்றேன்.  ‘முதல் ஷாப்பிங் போவோம்.. அப்புறம் டைம் இருந்திச்சுன்னா போகலாம்’ என்றாள். ‘இல்ல நாளையோடு புக் ஃபேர் முடியுதாம்.. அதனால ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.. ’ என்ற என் ஆதங்கத்தை புரிந்தவளாய்.. ‘சரி.. சரி.. ஒரு ஒரு மணி நேரம்னா நானும் வரேன்..’ என்றவளிடம் பதிலேதும் பேசாமல் புறப்பட்டேன். வாங்கியதென்னவோ இரு பொருள்கள் என்றாலும் அதற்க்கே ஒரு மணிநேரமானது. பின் விரைவாக புக் ஃபேர் விரைந்தோம். வண்டியில் அமர்ந்தபடியே புக் ஃபேருக்கான ஒரு திட்டம் வகுத்தேன். நேராக உயிர்மை ஸ்டால்.. அப்புறம் கிழக்கு.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என முடிவுசெய்தேன். என் சகதர்மினியின் (மீண்டும் கேட்கிறேன் என் தமிழ் சரிதானே?…) இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக ‘நீ எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க விரும்புவாய்? என்றேன் அன்பாக. ‘அது கிடக்கட்டும்..  போனமோ வந்தமோன்னு இருக்கணும்… வீட்டுல சின்னவ அழ ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்..’ என்று என் இலக்கிய ஆர்வத்தில் கல்லெறிந்தாள். புத்தகத்திருவிழா நடக்கும் அரங்க வாயிலை அடைந்தோம்.  பொங்கல் விடுமுறையாதலால் நல்ல கூட்டம். வண்டியை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்தோம்.

திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்த எங்களுக்கு ஒருவர் உதவினார்.  ‘என்ன புத்தகம் வாங்க போறீங்க’ என்றவளுக்கு ‘இன்னும் முடிவு செய்யல’ என்றபடி அவளையும் இழுத்துக்கொண்டு உயிர்மையைநோக்கி ஓடினேன். உள் நுழைய முடியாதபடி கூட்டம். என்னவள் வெளியிலே நிற்க நான் சிரமப்ட்டு உள் நுழைந்து சாருவையும், மனுஷ்ய புத்திரனையும் தேடினேன். அவர்களுடைய நல்ல நேரமோ என்னமோ தெரிய வில்லை அவர்கள் அங்கில்லை. என்னுடைய தேடல் சாருவின் புத்தகங்களில் இருந்து துவங்கியது. தேடினேன்… தேடினேன்… தேகத்தை தேடினேன்… ‘இன்னும் முடியலையா’ இது என் மனைவி. ‘வந்துட்டேன்’ என்று வெறும் கையுடன் திரும்பினேன். அடுத்தது கிழக்கு பதிப்பகம். நிறைய புத்தகங்கள். என் மனைவியும் ஆவலாய் புத்தகங்களை பார்வையிட்டாள். நான் ராகவன் சார் அங்கில்லை என்றதும் வெளியே வந்துவிட்டேன். அதற்க்குள் என் மனைவி மூன்று சமையல் சம்பந்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துவிட்டு பில் போடுவதற்க்கும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ‘சரி வாங்க போகலாம்’ என்றாள். எனக்கு அழுகையாக வந்தது. புத்தக கண்காட்சியில் சில பல எழுத்தாளர்களை பார்க்கலாம் பேசலாம் என்று வந்தால் அது நிறைவேறாது போலும என்று என்னை நான் நொந்தபடி என் மனையாளின் பின் நடந்தேன். திடீரென்று ஒரு தரிசனம்.  ஆம் அவரேதான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு. நாஞ்கில் நாடன் அமைதியாய் தமிழினி ஸ்டாலின் முன் அமர்ந்திருந்தார். முதலில் நான் அவரை பார்த்துவிட்டு கடந்தும் விட்டேன். பின் என்ன தோன்றியதோ என் மனைவியை அழைத்துக்கொண்டு அவரருகே சென்றேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.   பின் அவருக்கு சாகித்ய அகாதமி விருதினை பெற்றுத்தந்த படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தினை வாங்கி அவரின் கையெழுத்திற்காக அவரிடம் நீட்டினேன். ‘நட்புடன் நாஞ்சில் நாடன்’ என கையொப்பமிட்டு அன்ற தேதியையும் அதில் குறிப்பிட்டார்.  என் மனைவி யார் இவர் என வினவ.. என்னுடைய இலக்கிய அறிவை அவளுக்கு தெரிவிக்கும் விதமாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல்..(இரண்டு இலக்கியவாதிகள் பேசும்போது குறுக்கே.. ம்..)  நாஞ்சில் அவர்களைப்பார்த்து ‘ சார் உங்களை திரு. ஜெயமோகன் அவர்களுடைய வலைத்தளத்தின் மூலமாய் அறிந்து கொண்டேன். அவர் உங்களைப்பற்றி நகைச்சுவை கலந்து ‘தடாக மலையடிவார்த்தில் ஒருவர்’ என எழுதியுள்ளதை நான் பலமுறை படித்திருக்கிறேன்’ என்றேன் மிக பெருமிதத்தோடு. நாஞ்சிலார் மெல்ல புன்னகைத்து விட்டு ‘அது தடாக மலையில்லை.. தாடகைமலை..’ என்றார்.

வரும் வழியெல்லாம் என் மனையாள் அடிக்கடி சத்தமாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ஏனென்று தெரிய வில்லை. வீடு வரை நான் எதுவும் பேசவில்லை.  வீட்டிற்க்கு வந்த உடன் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தை எடுத்து என் மேசையின் மேல் வைத்தேன். இப்போது நாஞ்சில் நாடனும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

Published in: on ஜனவரி 18, 2011 at 12:00 பிப  Comments (6)  

காசி.. ஒரு அனுபவம்…

இரயில் வண்டி மெதுவாக முகல்சாராய் இரயில் நிலையத்தை வந்தடைந்தபோது  மாலை மெல்ல இரவின் பிடியில் மெதுவாக தன்னை இழந்துகொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்தேன். ஊசிப்பனி ஊரையே உலுக்கிக்கொண்டிருந்தது. எடுத்துச்சென்ற பனிக்குல்லாயை தலையில் இறுக்கிக்கொண்டு இரயில் நிலையத்தின் வாயிலை சென்றடைந்தேன்.  என்னுடன் வந்தவர்கள் எனக்கு முன்னால் சென்று ஆட்டோ பிடிப்பதற்க்கான ஆயத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். பனியின் கொடுமையிலிருந்து மீள ஒரு ராஜாவை எடுத்துப்பற்றவைத்தேன். மொழி தெரியாத ஊரில் நான். எல்லாம் இந்தி மயம். எனக்கு இந்தி தெரியாது எவ்வளவு சவுகரியமாக இருந்தது தெரியுமா. இரயில் பெட்டியில் இருந்து இறங்கும்போது ஒருவ(னு)ருடைய காலை மிதித்துவிட்டு வந்தபோது அவ(ன்)ர் என்னை பார்த்து கோபமாக ஏதோ சொல்ல.. நான் பதிலுக்கு சிரித்து வைத்து விட்டு  வந்துவிட்டேன் என்றால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்களேன். வாழ்க கலைஞர். ஒரு வழியாக ஆட்டோ ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு நான் முகல்சாராய் இரயில் நிலையத்திலிருந்து காசியை நோக்கி பயணமானேன்.

பனி மூட்டத்தில் எதிரே வந்துகொண்டிருந்த வாகனங்களின் விளக்கொளி கீற்றுகளின் நடுவே எங்கள் ஆட்டோ விரைந்துகொண்டிருந்தது. ஒரு அரை மணிநேர பயணத்தில் காசியின் வீதிகளை கண்டேன். சென்னை சௌகார்பேட்டை நெரிசல் மிகுந்த சந்துபொந்துகளை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதைவிட சற்றே அகலமான வீதி. மக்கள், வாகனம், இரைச்சல் நிறைந்த புழுதி சாலை எங்களை எங்கோ இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இறுதியில் நாட்டுக்கோட்டை சத்திரம் வந்தடைந்தோம். பிறகுதான் தெரிந்தது அது நம் தமிழ் முன்னோர்கள் அதுவும் செட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் நம்மவர்களுக்காக கட்டி வைத்துள்ள சத்திரம் என்று.  குறைந்த வாடகையில் தரமான உணவுடன் சிறிய சுத்தமான அறைகளை வாடகைக்கு கிடைக்கின்றன என அறிந்து கொண்டேன். சத்திரத்தினுள் மது புகை கண்டிப்பாக அனுமதியில்லை என்ற வாசகம் என்னை அன்புடன் வரவேற்றது. சத்திரத்தில் நுழைவில் காலணிகளை விடுவதற்கென்றே அமைக்கப்பட்ட பிரத்தேயகமான இடத்தில்  காலணிகளை வைத்துவிட்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் போய் சற்று ஓய்வெடுத்துக்கொண்டேன்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் காசி விஸ்வநாதரைப்பார்க்க ஆயத்தமானோம். நல்ல இரவு. இரவின் ஒளியில் காசி மிளிர்ந்தது. விவரம் தெரிந்த நண்பன் முன்னால் வழிகாட்ட காசி விஸ்வநாதரை தரிசிக்க நடந்து முன்னேறினேன். வீதி ரங்கநாதன் தெருவை நினைவூட்டியது. ஆலயத்தின் நுழைவில் ஏதோ நான் பாகிஸ்தானில் இருந்து வந்ததவன் போல என்னை ஆய்ந்தார்கள் அக47 வைத்திருந்த காவலர்கள் . பின்னர்தான் தெரிந்தது நான் விஜயம் செய்த நாளிலிருந்து இரண்டுவாரங்களுக்கு முன்னர்தான்  காசியின் படிததுறையில் குண்டு வெடித்தது என. ஆய்வுக்குப்பின் கோவிலின் உள் நுழைந்தேன். என் கற்பனைகளை சிதறடிக்கும் வண்ணம் உள்ளே காசி விஸ்வநாதர் பிரகாரம் மிக எளிமையாய் இருந்தது. சிறிய லிங்க ரூபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அன்று நடைபெற்ற கடைசி பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் முடிந்தபின் மீண்டும் காசியின் வீதிகளில் நடந்தேன். இரவின் மடியில் காசி மெல்ல தன் கண்களை மூடுகின்ற வேளை. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்த வீதியில் மனித நடமாட்டங்கள் குறைந்திருந்தது.சில சாய் கடைகள் மட்டும் எங்களுக்காகவே திறந்திருந்தது போல எனக்குத்தோன்றியது.  சாயாவை அருந்தியபடி நோட்டமிட்டேன். சாலையின் இரு மருங்குகளை குப்பைகள் அலங்கரித்திருந்தன. நாய்களுக்கும் பஞ்சமில்லை.  நாளை காலையில் சீக்கிரமே கங்கையை தரிசிக்க வேண்டும் என நண்பன் சொன்னதால் வேகமாய் நடந்து சென்று அறைக்குள் முடங்கி வேகமாய் உறங்கியும் போனேன்.

 மறுநாள். காலையின் ஒளியில் காசியை தரிசித்தேன். சாய் அருந்தி விட்டு அதிகாலை 7 மணிக்கு(?) இறங்கி வீதியில் நடந்தோம். காலை கடைகள் களைகட்ட துவங்கியிருந்தன. நாஞ்சில் நாடனின் விருப்பமான கடுகு எண்ணைப்பூரி தயாராகிக்கொண்டிருந்தது. காய்கறிகள் வரத்து  ஆரம்பித்திருந்தது. கத்திரிக்காய் மிகப்பெரியதாய் இருந்தது நம்மூர் கத்திரிக்காய் நான்கந்தை ஒன்றாய் உருட்டி வைத்ததுபோல. மற்றவை எல்லாம் நம்மூரிலேயே கிடைப்பனதான் என்றாலும் அவைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள அழகை(?) காண எனக்கு ஒரு அவா. நான் கத்திரிக்காய் குவியலை ஆவலோடு பார்ப்பதையே சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கங்கை ஆர்பரித்தோடும் அழகைக்காண நண்பர்களின் பின்னால் நானும் ஓடினேன். வேகவேகமாய் படித்துறையில் இறங்கும் போது கங்கையை தரிசித்தேன். காலைக்கதிரவன் கங்கையின் மேல் நர்ததனமிட்டுக்கொண்டிருந்தான். நான் படிகளில் மெதுவாக இறங்கினேன். கங்கை ஆர்பரிப்பில்லாமல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது.

வருவேன்…

Published in: on ஜனவரி 14, 2011 at 10:28 முப  Comments (6)  

நொந்தலாலா…

இன்றைக்கு எப்படியும் பார்த்துவிட வேண்டும். சாநியும் ஜெமோவும் ரொம்ப சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆன  நிலையில் படத்தினைக்காண ஆவலாய் ஆயத்தமானேன். ஆயத்தம் என்று சொன்னால் அப்படி இப்படியில்லை. என்னுடைய முழுநாள் வேலையை அரைநாளில் முடித்துவிட்டு நிறுவனத்தின் முதல் பேருந்து புறப்படும் நேரத்திற்க்காக கவுண்டவுன் முறையில் காத்திருந்தேன். ஆனால் யார் செய்த செய்வினையோ என்னுடைய அலுவலகத்திலிருந்து நான் சீக்கரிமாகவே புறப்படவேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் என்னுடைய பாஸ் என்கிற பாஸ்கரன் என்னை உள்ளே அழைத்தார். (சத்தியமா என் பாஸ் பெயர் பாஸ்கரன்தான்.. ம்.. நம்புங்க…) மிஸ்டர்.. நாளைக்கு ஃபாரின் விசிட்டர்ஸ் வராங்கன்னு சொன்னேனில்லயா.. அதற்கான ஏற்பாடுகளை செஞ்சாச்சா?.. என்று சற்றே உரத்த சொனியில் வினவ நான் வேகமாக ‘ஆச்சு சார்’ என்று மறுமொழிந்தேன். ‘மண்ணாங்கட்டி’ என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. ‘வெல்கம் போர்டுல என்னய்யா லெட்டர்ஸ் ஒட்டியிருக்கே.. நான் கேணல் திரு.. என்று போடச்சொன்னா கேண திரு..ன்னு போட்டிருக்கே..’ என்று மொழிய நான் எந்த போர்டு என்று கேட்க நினைத்து பின் சுதாகரித்துக்கொண்டு ‘நான் பார்த்து சரி பண்ணிடறேன் சார்’ என்று சொல்லியபடி பின்வாங்கி கோபமாய் என் சகாவைத்தேடினேன். ‘என்னப்பா பேயறஞ்சா மாதிரி வெளியே வரே..’ என்றபடியே எதையோ எடுத்து தனது வாயில் போட்டபடி என்னைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தான் சகா. ‘டேய் உன்னுடைய பொறுப்புதானே நேம் போர்ட் கிரியேஷன்’ என்றேன். ‘யெஸ்.. ’ என்றான். ‘பாவி நீ பண்ண தப்புக்கு என்ன கூப்பிட்டு திட்டறான் அந்த லூசு’ ‘நேம் போர்டுல கேணல் என்பதற்கு பதிலா கேண என்று போட்டிருக்கியாமே..’ என்று கடிந்தேன்.   ‘அந்த லூசு சொல்லுதுன்னு இந்த லூசு வந்து நிக்குது..’ என்று முனகியவனை ‘என்ன உனக்குள்ளேய பேசிக்கற’ என்றேன். ‘கேணல்..ல  ‘ல்’ காணாம் அவ்வளவுதானே. ஒட்டிட்டாப்போச்சு..’ என்றான் கூலாக. நான் அவனை வைய வாயெடுப்பதற்குள் மீண்டும் பாஸ்கரன் கூப்பிட்டார்(ன்).

‘மிஸ்டர்.. எல்லாத்தையும் வெரிபை பண்ணிட்டு எனக்கு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் இன்னைக்ககு நீங்க புறப்படணும்..’ என்று எனக்கு கட்டளையிட்டு விட்டு அவர்(ன்) புறப்பட்டுக்கொண்டிருந்தார்(ன்). நான் பார்த்து வளந்த பய .. ஹ்ம்.. எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பாஸ்கரன்  எனைப்பார்த்து ‘மிஸ்டர்.. என்ன யோசிக்கிறீங்க.. நான் கன்பார்ம் பண்ணச்சொன்னது என்னுடைய மொபைல்ல.. அண்டர்ஸ்டேண்ட்..’ என்று சொல்லியபடி விருட்டென்று எழுந்து சென்றான்.  பாஸ் என்கிற பாஸ்கரன்  யாரையாவது கார்னர் செய்கிறான் என்றால் அதில் ஏதாவது ஒரு உள்குத்து இருக்கிறது என்று அர்த்தம். ஒரு முறை சகா பளிச்சென்று நல்ல விலையுயர்ந்த சர்ட் அணிந்து வர அது பாஸ்கரன் கண்ணை உறுத்த அன்றைக்கு சகா பட்ட பாடு இருக்கிறதே… அப்பப்பா… சொல்லி மாளாது.. அன்னைக்கு சகா அவன் சர்ட்டுல அவனே வலிய தேனீர் ஊற்றி கறைபடுத்திக்கொண்டு பாஸ்கரன் முன்னால் போய் நின்ற போதுதான் பாஸ்கரன் அமைதியானான். (உங்க ஆபீஸ்ல கூட இப்படித்தானுங்களா?…). இப்பொழுது பாஸ்கரன் மனம் நோகும்படி நான் என்ன செய்தேன்… கடவுளே எனக்கு விளங்கச்செய் என்று என்னையே நான் நொந்தபடி செக்லிஸ்டை எடுத்துக்கொண்டு சகாவின் உதவியை கூட எதிர்பாராமல் விருவிருவென என் வேலையை(?) துவங்கினேன்.

வெல்கம் போர்ட் வெரிபிகேஷன் (ஆப்டர் தி ஒட்டிங் ஆப் தி லெட்டர் ‘ல்’), பொக்கே மற்றும் சந்தனமாலை ஆர்டர்.. டீ ட்ரேவில் வைக்கவேண்டிய யுடென்ஸில்ல்.. டீ.. (ஹெர்பல் டீயாம்.. அந்த கருமத்த எப்படித்தான் குடிக்கிறான் இந்த பாஸ்..) மில்க்.. பாரின் பிஸ்கட்ஸ்..  , கான்பரஸ் ஹால் ஸ்ப்ரே அண்டு ஹவுஸ் கீப்பிங் என்று சரிபார்த்ததோடு மட்டுமால்லாமல் ரிசப்ஷனிஸ்ட் கேரளாடைப் சாரி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்பது வரை உறுதிசெய்துவிட்டு வேகவேகமாய் என்னுடைய நிறுவன பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ‘என்ன சார் இன்னைக்கு லேட்டு’ என்றது பக்கத்து சீட்.  ‘வேலப்பா..’ என்று வேலை என்ற சொல்லுக்கே வேலை என்று அர்த்தம் கற்பித்துவிட்டு ஆசுவாசமாய் நந்தலாலாவைப்பற்றி சிந்ததிக்கத்தொடங்கினேன்.

மிஷ்கின். ஒரு அற்புதமான டைரக்டர். ஆனால் இதுவரை நான் அவருடைய படங்களை பார்த்ததில்லை. பின் எப்படி அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் இணையத்தில் அவரைப்பற்றி சேகரித்த செய்திகளை வைத்துத்தான். சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே திரைவிமர்சனங்களை படித்தபின்பு அவருடைய களங்கள் வித்தியாசமானது என்பதை நான் அறிந்து(?) கொண்டேன். ஆனால் அவருடைய படைப்பான நந்நலாலாவில் ஒரு வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் அதுவும் மிஷ்கினே மனநலம் குன்றியவராக நடிக்கவும் செய்துள்ளார் எனும்போது என் ஆவல் கூடவும் மேலும் பல விமரிசனங்கள் படத்தினை தூக்கியும் சில விமரிசனங்கள் படத்தினை தாக்கியும் இணையத்தில் வந்ததால்  கண்டிப்பாக படத்தினை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தினை தூற்றிய பலராலும் காப்பி என்று சொல்லப்பட்ட அல்லது தழுவல் என்று அறியப்பட்ட நந்தலாலா ஜப்பான் பதிப்பை(?) யூடிபில் அரசல் புரசலாக பார்த்துவிட்டதிலிருந்து(?)  ஒரு வாரம் காத்திருந்தது தவறு என்று எனக்கு பட்டதால் படத்தினை அன்றே உள்ளூர் திரையரங்கில் காண முடிவுசெய்தேன்.  முடிவெடுத்தலில் தவறில்லை. ஆனால் எடுக்கப்பட்ட நாள் எனக்கு சரியான நாளில்லை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

வேகவேகமாய் வீடு சென்ற நான் ‘சினிமாவுக்கு போறேன்’ என்றேன் மொட்டையாக. ‘எப்ப’ என்ற கேள்விக்கு பதிலாய் ‘10 மணிக்கு’ என்றேன். ‘வேண்டாம்.. மழ வர மாதிரியிருக்கு..’ என்ற ஆணவ பேச்சுக்கு பதிலாய் ‘கண்டிப்பா இன்னிக்கு நா பாத்தேயாகணும்..’ என்றேன். ‘அப்ப.. இன்னிக்கு டின்னரு உங்களுக்கு தேவை இல்ல.. ம்.. அப்பபுறம்.. என்ன படம்’ என்ற அலட்சிய கேள்விக்கு ‘நந்தலாலா’ என்றேன். ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலிக்கு ‘என்ன சிரிப்பு’ என்றேன். ‘ஒண்ணுமில்ல..  போய்ட்டு வாங்க’ என்ற நக்கலுக்கு பதிலளிக்காமல் வீட்டை விட்டிறங்கி திரையரங்கை நோக்கி வேகமாய் சைக்கிளை மிதித்தேன். வழக்கத்தைவிட சைக்கிள் மிக மெதுவாய் சென்றது. காரணத்தை அறியும் ஆவல் அப்போது என்னிடம் ஆர்பரிக்காததால் நான் என் முழு திறனையும் உபயோகித்து வேகமாய் சைக்கிளை மிதித்தேன். ஒரு வழியாய் திரையரங்கின் நுழைவாயிலை அடைந்து விட்டேன். தியேட்டரின் விளம்பர சுவற்றில் மிஷ்கின் தனது ஒருகையால் பள்ளிச்சிறுவன் ஒருவனின் கையையும் மறுகையால் தான் அணிந்திருந்த பேண்ட் நழுவாமலும் பிடித்துக்கொண்டு என்னை உற்றுப்பார்த்தார். நான் அவருடைய பார்வையை தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கூட்டம் இல்லை என்று சொல்வதைவிட கூட்டமேயில்லை என்று சொல்வதுதான் சரி. மணியை பார்த்தேன். சரியாக இரவு 9. 30.  தியேட்டரின் வாகன நிறுத்துமிடத்தில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். என் சைக்கிளைத்தவிர வேறு எந்த வாகனமும் இல்லை. சற்று முன்கூட்டியே வந்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ‘என்ன சார்.. டோக்கனா’ என்றபடி ஒரு பையன் என்னைப்பார்த்து வந்து கொண்டிருந்தான். பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கும் முன் பையன் எனைப்பார்த்து ‘ இன்னா படம் சார்’ என்றான். ‘நந்தலாலா’ என்றேன்.  ‘நீங்க பத்து மணிக்கு வந்து டோக்கன் போட்டுக்குங்க சார்’ என்றபடி என் பதிலை எதிர்பாராதவனாய் அரங்கதின் வாயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்தான். நான் என் சைக்கிளை பூட்டி விட்டு மெதுவாய் நடந்து சென்று திரையரங்கின் வெளிவாசலை அடைந்தேன்.

திரையரங்கின் எதிரே டாஸ்மாக் தனது அன்றைய நாளின் இறுதிகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. மிதமான கூட்டம் மிதந்து கொண்டிருந்தது. ஹ்ம்.. கல்யாணத்துக்கு முன்னே இருந்த சுதந்திரம் இப்போது எனக்கிருந்தால்.. இந்நேரத்தில் நாள் உள்ளே இருந்திருப்பேன்.. என்று நான் பெருமூச்சுவிடவும் பக்கத்திலிருந்த நாய் என்னைப்பார்த்து குரைக்கவும் சரியாக இருந்தது. தனியா நிக்கறது தப்பா என்று நாயினை முறைத்துவிட்டு அதன் குரையினை பொருட்படுத்தாது இருண்ட வானத்தை அண்ணாந்து பார்த்தேன். மேலேயிருந்து மழைச்சிதறல்கள் பூச்சிதறல்களாய் என் முகத்தை முத்தமிட்டன. மனம் சிறகாய் பறந்தது. அதை இன்னும் சற்று உயரத்தில் பறக்கவைக்க எண்ணி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டாஸ்மாக்கினுள் நுழைந்தேன் (ஒரு ரெண்டு மணி நேரத்துல சரக்கு வாசன நம்ம கிட்டயிருந்து போயிடாது?). லைட்டாக ஒரு மீன்கொத்திபறவையினை வாங்கிக்கொண்டு மணியைப்பார்த்தேன். சரியாக 9.50. வேகவேகமாய் பாட்டிலை காலிசெய்துவிட்டு நிமிர்ந்தேன். எனக்கெதிரே சற்று தொலைவில் டோக்கன் பாய் சரக்கடித்துக்கொண்டிருந்தான். நான் அவனை அணுகி ‘தம்பி டோக்கன் போட வரலியா?’ என்றேன். அவன் கடுப்புடன் எனைப்பார்த்து ‘டோக்கன் எல்லாம் கிடையாது.  போய் முதல்ல டிக்கட் கிடைக்குதான்னு பாருங்க’ என்றான். ஆஹா.. எல்லாம் அட்வான்ஸ் புக்கிங்கா.. என்று மனசுக்குள் நினைத்தபடி தியேட்டரின் டிக்கட் கவுன்டரை (கவுண்டர் என தவறாக படிக்காமல் ‘என்கவுன்டரில்’ வருமே அந்த கவுன்டர் போல வாசிக்கவும்)  நோக்கி விரைந்தேன்.

டிக்கட் கவுன்டரில் ஆளும் இல்லை வரிசையும் இல்லை. இதே இடத்தில் போன மாதம் எந்திரனுக்கு வரிசையில் நின்று டிக்கட் வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது. உள்ளே எட்டிப்பார்தேன். விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.  மணியைப்பார்த்தேன். சரியாக 10. ‘என்னா வேணும் சார்’ என்ற குரல்கேட்டு திரும்பினேன். பேண்ட் சர்ட் அணிந்து கையில் ஒரு சின்ன பெட்டியுடன் ஒருவர் (இந்த நேரத்தில் எந்த பேங்க் திறந்திருக்கும்) என்னை பார்த்து நடந்துவந்துகொண்டிருந்தார்.  ‘நந்தலாலா டிக்கட்’ என்றேன் தயக்கத்துடன். அவர் சாவகாசமாய் என்னருகே வந்து நின்று ‘சார் கலைப்படங்களை விரும்பி பாக்கறவரு போலிருக்கு’ என்றார். ‘ஆம்’ என்றேன். அமைதியாக.  ‘உங்களையும் சேத்து மொத்தம் மூணுபேர் மட்டுமே நந்தலாலாக்கு வந்திருக்கிறதால நாங்க ஷோவ இன்னிக்கு ரன் பண்ண முடியாத நிலைமையில் இருக்கோம்.. மன்னிச்சுக்கோங்க’ என்ற படி நகர முயன்றார். ‘என்ன சார் இது இப்படி பண்ணறீங்களே’ என்று நான் கேட்க அவர் சற்று நிதானமாய் ‘மூணு பேருக்காக படத்த ஓட்ட முடியுமா.. எங்களையும் நீங்க பாக்கணும்.. புரிஞ்சிக்கோங்க..’ என்றபடி திரையரங்கின் உள்சென்று கதவையடைத்துக்கொண்டார். நான் வெளியே பார்த்தேன். இப்போது மழையை என்னால் ரசிக்க முடியவில்லை.  மெதுவாய் நடந்துவந்து என் சைக்கிளை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வெளியே வந்தேன். சைக்கிளை தள்ளுவதே சிரமமாய் இருந்தது.  சைக்கிளை நிறுத்தி பார்வையிட்டேன். புரிந்தது. முன் சக்கரம் பங்ஞ்சர். என்னை நானே நொந்தபடி சைக்கிளை தூறும் மழையில் தள்ளிக்கொண்டு நடந்தேன். இரவு நேர சாலை வாகனங்கள் என்மேல் சேற்று சிதறல்களை பூவாய்(?) தூவியபடி பறந்துகொண்டிருந்தன.  நான் சாலையின் இடது ஓரமாய் நடந்துகொண்டிருந்தேன். சாலையின் எதிர் முனையில் சாலையோர விளக்கு கம்பத்தின் கீழே ஒரு உருவம் நின்றுகொண்டு விளக்கு கம்பத்தின் மேலே இருந்த விளக்கினை பார்த்து கடுமையான வார்த்தைகளால்  திட்டிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாய் அதை சத்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது (இதுதான் என்னைப்பார்த்து குரைத்த நாயோ?..). நான் சைக்கிளை தள்ளிக்கொண்டே அந்த உருவத்தைப்பார்த்தேன்.  முகம் பளபளவென்று வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது.  செக்கியூரிட்டி அணிவது போன்ற ஒரு வெளிர் நீல சர்ட்டும், சர்ட்டில் தொங்கும் ஒரு ஊதலும்,  கருமை நிறம் என்று சொல்ல முடியாத கருமையான நிறத்தில் ஒரு அளவில்லாத பேண்டும் அணிந்து கொண்டு அந்த பேண்ட் தரையில் விழுந்து விடாதபடி தனது ஒரு கையால் அதை கெட்டியாக பிடித்தபடி அந்த உருவம் நின்று கொண்டிருந்தது. சமீபத்தில்தான் அதன் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்க வேண்டும் என தோன்றும் வகையில் அதன் தலையில் முடியிருந்தும் இல்லாது போன்ற ஒரு நிலை. நான் அது மன்னிக்கவும் அவனை பார்த்தேன். அவன் நிற்பதும் துள்ளுவதுமாக யாரையோ ஏசிக்கொண்டிருந்தான். நான் இப்போது நின்றுவிட்டிருந்தேன். வயிற்றில் இருந்த மீன்கொத்தியின் வாசனை இப்போது என் தொண்டையின் வழியாக ஏப்பமாக வெளிவந்தது. இப்போது அவன் ஏசுவதை நிறுத்திவிட்டு என்னை உற்றுப்பார்த்தான். ஆஹா தேவையில்லாமல் நாம் எதிலும சிக்கிக்கொள்ளக்கூடாது என சட்டென்று என் சைக்கிளில் ஏறி அது பங்ஞ்சர் என தெரிந்தும் வேகமாக சவட்டினேன். சிறிது தூரம் வந்து சைக்கிளை நிறுத்தி என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனிதனின் படைப்புளில்தான் எத்தனை விதம். பாவம் அவன். அவன் பிறக்கும் போது அவன் தாய் எவ்வளவு ஆனந்தப்பட்டிருபபாள்.  மீண்டும் நந்தலாலா நினைவு.  மிஷ்கின் என்னை பார்த்ததை நான் நினைத்துப்பார்த்தேன்.  ஒரு கலைப்படம் எடுத்துப்பிழைப்பது எவ்வளவு கடினம் பார்த்தாயா? என்று அவர் என்னை கேட்பது போல எனக்கு தெரிந்தது.  ‘பளீர்’ ஒரு மின்னல் தாக்கிய உணர்வு. நான் அந்த விளக்கு கம்பத்தின் அடியில் பார்த்தது.. அது ஒரு வேளை….

Published in: on திசெம்பர் 7, 2010 at 10:20 முப  Comments (14)  

பட்டை…

 

கண்ணாடி முன்னால் நின்று என் தொந்தியை அழுத்திப்பிடித்துக்கொண்டிருந்த இடுப்புபட்டையை நன்றாக பிடித்து இறுக்கினேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்து ஒரு பெரிய மூட்டையை நன்றாக இறுக்கும் லாவகத்துடன் இன்னும் நன்றாக இறுக்கினேன். என்னுடைய கணிப்பின்படி  தற்போது தொந்தி குறைந்திருக்க வேண்டும்.  இன்னும் நன்றாக இறுக்கினேன். கடந்த மூன்று வாரங்களாக நான் நடைபயிற்சி மேற்கொண்டது பலன் தந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மேலும் இறுக்கினேன். கண்டிப்பாக தொந்தி ஒரு சுற்று குறைந்திருக்க வேண்டும்.. ம்… இன்னும் நன்றாக இறுக்கி….. பட்..  ஊறிய ஊசிப்பட்டாசு வெடித்ததுபோன்ற ஒரு சத்தம். என் கைகளில் இரு துண்டுகளாக என்னுடைய இடுப்புபட்டை.  அலுவலகம் செல்ல அவசரமாக ஆயத்தமான சூழலில் எதிர்பாரா வண்ணம் நிகழ்ந்த இந்த நிகழ்வினால் நான் செய்வது அறியாது திகைத்து நின்றேன். நான் திகைத்ததற்கு காரணமிருந்தது. என்னுடைய கால்சட்டை மற்றும் கைசட்டையை விட விலை அதிமானது இந்த இடுப்புபட்டை. சுமார் 400 ரூபாய்க்கு  (ரூபாய்க்கான சின்னம் கீபோர்டுல எங்கப்பா இருக்குது?) சென்னையில் உள்ள ஒரு உச்சரிக்க கடினமான பெயருடைய ஒரு விற்பனை அங்காடியில் ஏதோ ஒரு உந்துதலால் சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்(?) நான் வாங்கியது.

கருமையான தோலினாலான பளபளக்கும் இந்த இடுப்புபட்டையை நான் கட்டியதிலிருந்து எனக்கு நடந்தது எல்லாமே நல்லவையாக அமைந்தது என நான்  நம்பினேன் (எனக்கு கல்யாணம் என்று ஒன்று ஆனது இதை வாங்கிய பிறகுதான் என்றால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்). இதை நான் வாங்கி கட்டியதிலிருந்து என்னை எப்பொழுதும் கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கும் என் மேலதிகாரி  திடீரென என்னை கரிசனமாக நடத்தியது எனக்கு வியப்பளித்தது (‘சொம்பு தூக்கனத்துகு எப்படி காரணத்த கண்டுபிடிக்கிறான் பாரு’ என்று என் எதிரிகள் யாராவது உங்களிடம் கதைத்தால் நீங்கள் நம்ப வேண்டாம்). நீண்ட நாட்களாக நான் கழட்டி விட வேண்டும் என்று நினைத்திருநத என் நண்பன்(?) ஒருவனை காணாமல் போகச்செய்தது இந்த இடுப்புபட்டியின் ராசியில்தான் என நான் அகமகிழ்ந்தது (நாம தினமும் ஓசியில் டீக்குடிச்சதுக்கு அவன் நம்மள கழட்டி விட்டிருப்பானோ? சே.. சே.. அப்படியெல்லாம் இருக்காது..) என இதன் பெருமைகளை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த என் இடுப்பு பட்டை இப்போது இரு துண்டுகளாக என் கைகளில். ‘என்னங்க இன்னுமா ஆபீசுக்கு கிளம்பல..’  என் மனைவியினுடைய குரல் கேட்டது. துன்பம் வருவதற்க்குள் இடுப்பு பட்டை இல்லாமல் இன்செய்துகொண்டு இரயிலைப்பிடிப்பதற்க்காக இல்லத்தை விட்டு இறங்கினேன் (எத்தன இ பாருங்க..).

இடுப்பு பட்டை இல்லாமல் இருப்பது எவ்வளவு கடினம் என எனக்குப்புரிந்தது.  என்னுடைய கால்சட்டையை அடிக்கடி தொந்தியின் மேலே இழுத்துவிட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு தொந்தி இருப்பது எவ்வளவு சௌகரியமாக இருக்கிறது. இதைப்போய் அநியாயமாய் துன்பத்தின்(?)   குடைச்சல் காரணமாய் குறைக்க இருந்தேனே.  சுற்றும் முற்றும் பார்த்தேன். இரயிலடியில் கூட்டமதிகமாய் இல்லாவிட்டாலும் வந்திருந்த அனைவரும் சொல்லிவைத்துபோல இடுப்பு பட்டை அணிந்தவர்களாகவே நின்றுகொண்டிருந்தார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ஒரு மனநலம் குன்றிய ஒரு பரட்டைதலையுடைய ஒருவன் (இவர்களை இன்டலெக்ச்சுவல் டிசாடர் பர்சன்ஸ் என்று இனிமேல் மரியாதையாய் அழைக்கவேண்டும் என்று சட்டம் வரப்போவதாய்   எப் எம் ரேடியோலில் காபி வித் சுசி கூறியதாய் நினைவு) கிழிந்த அழுக்கேறிய சட்டையின் முன்புறத்தை தன் முக்கால் கால்சட்டையினுள் திணித்துக்கொண்டு  ஒரு அறுந்த கோணிக்கயிறினை தம்முடைய இடுப்புப்பட்டையாய் இறுக கட்டியிருந்தான். அவன் என்னை ஒரு மாதிரியாய் பார்த்து சிரித்தான். நான் அவனிடமிருநது விலகி நடந்து  ஆளில்லா ஓரிடத்தில் நின்றேன். என்னை கடந்துசென்றவர்களில் சில பேர் என்னுடைய இடுப்பை பார்த்துவிட்டு இடுப்புபட்டியில்லாத என்னை ஏளனமாய் பார்த்துவிட்டு சென்றதுபோல எனக்கு தோன்றியது. எல்லாம் பிரம்மை. வழக்கம் போல இரயில் தாமதமாய் வந்தது. இரயில் பெட்டியினுள் ஏறினேன். அமர இடமில்லாவிட்டாலும் தாராளமாய் நிற்க இடமிருந்தது. இடப்புற வாயிலின் அருகே வசதியாய் நின்றுகொண்டு வண்டியினுள் நோட்டமிட்டேன். என்னெதிரே கல்லூரி மணவர்கள்போல தோற்றமளித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஈஷிண்டு அமர்ந்து சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். சம்மந்தம் இல்லாமல் பாலினம் மாறி எதிரெதிர் தொடைகளை தட்டிக்கொண்டு திடீர் திடீரென சிரித்துக்கொண்டார்கள்.  வாழ்க கலாச்சாரம் என்று நினைத்தபடி நான் அவர்களை நோட்டமிட்டேன். அந்த கூட்டத்திலிருந்த ஒரு மஞ்சள் ஆடையணிந்து கண்ணாடி அணிந்திருந்த ஒருத்தி (இனிமேல் மஞ்சுளா) என்னை அவள் கண்ணாடியினூனே பார்த்தாள். நான் அவளைப்பார்பபதை தவிர்த்தாலும அவள் என்னை தொடர்ச்சியாக பார்ப்பது எனக்கு தெரிந்தது . அதுவும் குறிப்பாக என் இடுப்பை பார்ப்பது எனக்கு புலனானது. இடுப்பு பட்டை அணியாதது அவ்வளவு மோசமா. அவள் இப்போது தன் அருகே அமர்ந்திருந்த அந்தப்பையனிடம் (தாடியும் அவனும் கண்றாவி..)  ஏதோ மெதுவாக கதைக்க அந்தபையனும் என்னை குறிப்பாக என்னுடைய இடுப்பை பார்த்தான். அடப்பாவிகளா இடுப்புபட்டை அணியாமல் இன் செய்தது அவ்வளவு பெரிய கலாச்சார இழிவா? கடவுளே.. சம்பளம் வந்ததும் முதலில் இடுப்புபட்டையை வாங்கிவிட வேண்டியதுதான். இப்போது அவர்ளுடைய சிரிப்பொலி அதிகமானது.  நல்ல வேளையாக நான் இறங்கவேண்டிய நிலையமும் வந்துகொண்டிருந்தது.  நான் இறங்க ஆயத்தமானபோது அவர்களும் இறங்குவதற்கு ஆயத்தமாகி என்னருகே வந்து நின்றார்கள்.  என்னைப்பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுளா இப்போது என்னருகே.  நிலையம் வந்தது. நான் சட்டென இறங்கி நடக்கலானேன். என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. திரும்பிபார்க்காமல் வேகமாய் நடந்தேன். இப்போது சத்தம் பலமாய். திரும்பிப்பார்த்தேன். மஞ்சுளா இப்போது என்னைப்பார்த்து வந்துகொண்டிருந்தாள். இவள் ஏன் என்னை அழைக்கிறாள் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே மஞ்சுளா என்னருகே வந்து நின்று தன் கண்ணாடியினூடே என்னை நோக்கி ‘அங்கிள்.. உங்க பேண்ட் சிப் தொறந்திருக்கு’ என்று கூறினாள்.

Published in: on செப்ரெம்பர் 24, 2010 at 1:26 பிப  Comments (2)  

வாருங்கள் விரட்டுவோம்…

முதன் முதலாக நன் கடந்த டிசம்பர் மாதம் வலைப்பூ துவங்கியது முதல் வோட்ப்பிரஸ் முகப்புதளம் எனக்கு பரிச்சயம். அதில் இருக்கும் பட்டியலில் என்னுடைய வலைப்பூ வராதா என்ற என்று ஏங்கிய நாள் முதலாய் அது நடக்காமல் போகவே முகப்புத்தளங்களில் உள்ள வலைப்பூக்களை சொடுக்கி அவற்றைப்பார்த்து நானும் அதுபோல என்னுடைய வலைப்பூவிலும எழுதி நானும் பின்னாள் ஒரு முண்ணணி வலைப்பூவனாக ஆகவேண்டும் என்ற ஆசையில் சிறிதுகாலம் எழுதாமல் இருந்து வலைப்பூக்களைப்படிப்பதில் என்னுடைய ஆர்வத்தை செலுத்தினேன். பொதுவாக என்னுடைய வாசிப்பு வரிசையில் நகைச்சுவை படைப்புகள் முதலாவதாக இடம்பெற்றிருக்கும். பின் அனுபவங்கள், பயணக்கட்டுரைகள், பொதுவானவைகள், அரசியல் மற்றும் சமூகம் என்று வரிசைப்படி என் வாசிப்பு அமைந்திருக்கும். வாசிப்பு எவ்வாறாக இருந்தாலும அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை மேலோட்டமாக மேய்வதோடு சரி. ஆழ்ந்து படிப்பதில்லை. சில சமங்களில் சில வலைப்பூக்கள் அதையும் மீறி என்னுடைய கவனத்தை ஈர்க்கும். அப்படி என்னை ஆட்கொண்ட வலைப்பூக்களில் ஒன்றுதான் கை. அறிவழகன் .

இவருடைய பதிவுகளுக்கு முதன் முதலாக நான் விஜயம் செய்தபோது இவர் சராசரி இளைஞனைப்போலல்லாமல் சமூகத்தின் அவலங்களை தம்முடைய பதிவுகளில் பதித்து சவுக்கடி தந்துகொண்டிருந்தார். முதலில் தயக்கத்தோடுதான் இவருடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் அவருடைய சொல்வீச்சு அப்படி…  அவருடைய அறிமுக பதிவில்..

வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.

இது ஒரு உதாரணமே.  

இது போன்ற சொல்வீச்சும் தெளிவான சமூக நோக்கும் எனக்கு இல்லை என்பதாலும் எனக்கான ஒரு வலைப்பூவை வெகுஜன பத்திரிகைப்போல் அமைக்கும் நோக்கிலும் நான் இவரை பின்பற்றுவதில்லை என முடிவுசெய்துவிட்டேன்.  பின்னாளில் என் வலைப்பூவுக்கு அகம் புறம் என பெயரிட்டு மற்ற பொழுதுபோக்கு வலைத்தளங்களைப்போல் வடிவமைத்து உலவவிட்டேன்.  இன்று வோர்ட்பிரஸ் முகப்புதளத்தில் முதல் நூறு வலைப்பூக்களுக்குள் என்னை அமரவும் செய்துவிட்டேன்.  ஆனாலும் கை. அறிவழகன் என்னால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை. சில(பல)சயங்களில் சமூகத்தில் நம் கண்முன்னே நடக்கும்  சமூக அவலங்களை நம்மால் தட்டிக்கேட்க முடியவிட்டாலும் கூட நம் எண்ணங்களில் உருவாகும் நியாயங்ளை நம் மனதிற்க்குள்ளேயே போட்டு  பூட்டிவிட்டு நம் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறோம். அதையே ஒருவருடைய எழுத்தில் நாம் காணும்போது நாம் நினைத்ததுபோல், நமக்கு நேர்ந்ததுபோல், நமக்குத்தோன்றியதுபோல் என்று அவருள் அவருடைய எழுத்தினுள் நம்மைநாம் பார்க்கிறோம். அப்படித்தான் அறிவழகனை என்னுள் நான் காண்கிறேன். வாசிக்கிறேன். 

எல்லோரும்  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவினுடைய திருமணத்தை நம் தேசிய உணர்வோடு ஒப்பிட்டு எழுதுகின்றவேளையிலே சானியாவும் ஒரு பெண்.. அவளுக்கும் மனம் இருக்கிறது.. அவளுக்கும் உணர்வு இருக்கிறது.. என்று  திருமண வாழ்த்துக்கள் “சானியா மிர்சா”.  என்கின்ற அவருடைய உயரிய பார்வைக்கு முதன்முதலில் பின்னூட்டமிட்டேன். அதற்கு பதிலும் இருந்தது.

ஆனாலும் கூட அதன்பின் வரும் பதிவுகளை நான் வாசித்திருநதாலும கூட அவைகளுக்கு பின்னூட்டமிடுவதற்க்கான உண்மையான உணர்வுப்பூர்மான தகுதி நமக்கு இருக்கிறதா என வினவிக்கொண்டு பின்னூட்டமிடாமல் விட்டுவிடுவேன்.  ஆனால் அவருடைய சமீபத்திய பதிவு என்னை மிகவும் பாதித்தது.  தேவசி சாரின் மரணம். என்ற பதிவில் ஒரு தனிமனிதனுடைய உயரிய குணத்தினை அவருடைய அனுபவத்தின்மூலம் அழகாக சொல்லியிருக்கிறார். 

//அறிமுக அட்டையைக் கையில் கொடுக்கும் போது அச்சிடப்பட்டிருந்த “தேவசி தாமஸ்” என்கிற பெயரும், ” சார், தமிழாளோ” என்கிற கொஞ்சலான மலையாளம் கலந்த அவரது தமிழும் அவரை ஒரு மலையாளி என்று சொல்லாமல் சொன்னது.//

//மலையாளிகள் என்றால் கொஞ்சம் சுயநலவாதிகள், வணிக மயமானவர்கள் என்று எனது மூளையின் நினைவுச் செல்களில் வரையப்பட்டிருந்த ஒரு பழைய வரைபடத்தை ஒரு தனிமனிதனாக, அதுவும் ஒரே ஒரு சந்திப்பில் அவர் அழித்து விட்டிருந்தார். “மொழிகளுக்கும், மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் துளியும் தொடர்பில்லை” என்கிற ஒரு தத்துவத்தை எந்த நூலையும் படிக்காமல் அவரது புன்னகையால் விளக்கி இருந்தார் தேவசி சார்.//

இந்தப்பதிவு என்னை பாதிக்க காரணம் நானும் பிறப்பால் ஒரு மலையாளியானாலும் வளர்ப்பால் மண்ணால் நானும் ஒரு தமிழன்தான்.  சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவர் தம்முடைய பதிவில் தமிழகத்தில் மலையாளிகளுடைய ஆதிக்கத்தைப்பற்றி எழுதி அவர்களை விரட்டவேண்டும் என என்னவெல்லாம் அவருக்குத்தோன்றியதோ அவற்றைப்பற்றியெல்லாம் சிலாகித்து எழுதியிருந்தார்.  அந்த நண்பருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் முதலில் மனிதம் என்றால் என்ன என்பதற்க்கு விடையளித்துவிட்டு மற்றவர்களை விரட்டகூடிய வேலையில் நாம் இறங்குவோம். ஈழத்தில் உள்ள நம் சகோதர்களு நம்மால் என்ன செய்ய முடிந்தது என்று ஒரு முறை சிந்தித்துப்பார்த்துவிட்டு மற்றவர்களை விரட்டக்கூடிய வேலையில் நாம் இறங்குவோம். நண்பரே… நம் நாட்டில் இருந்து  விரட்டப்படவேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் சாதி, இனம், மொழி,மதம் சார்ந்த வெறியர்களையும் சேர்த்து…

 

பின் குறிப்பு  :   கை. அறிவழகன் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவருடைய பதிவிலிருந்து சிலவற்றை வெட்டி என் பதிவில் ஒட்டியமைக்கு என்னை அறிவழகன் மன்னிப்பாராக.

 

Published in: on ஓகஸ்ட் 6, 2010 at 6:55 முப  Comments (2)  

கத்தியைத்தீட்டாதே…

மாலை நேரம். வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் தாண்டி இரயில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சில  நிமிடங்களுக்குள்ளாகவே சிக்னல் கிடைத்து வண்டி புறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பத்துநிமிடங்களுக்குமேலாகியும் இரயில் வண்டி ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் திருவள்ளூர் செல்லக்கூடிய இரயில் வண்டிகளில் பயணம் செய்து வருபவர்களை நான் கவனத்திருக்கிறேன். அவர்கள் இதுபோன்ற மாலை நேர காலதாமதத்துக்கெல்லாம் பதட்டமடைவதில்லை. ஏனென்றால் கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்ட உடனேயே இரண்டு சிக்னல்களில் வண்டி நின்றே செல்லும் என்பதும் அவசரமாக செல்ல வேண்டியிருந்தால் சென்ட்ரல் நிலையத்தை தேர்ந்தெடுத்து பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத்தெரிந்திருக்கிறது. ஆகவே கிடைத்த நேரத்தில் கைப்பேசியிலோ அல்லது வாயிலோ கடலைபோட்டுக்கொண்டு இன்புற்றிருப்பர். விடயம் அறியாத என்னைப்போன்ற சிலபேர் மட்டுமே இரயில் பெட்டியின் வாயிலில் நின்று எத்திநோக்கிக்கொண்டிருப்பர். மழை இலேசாக பட்டும்படாமல் பெய்துகொண்டிருந்தது. பொதுவாக நான் வெண்டார் கோச் என்றழைக்கப்படும் விற்பனையாளர்களுக்கான பெட்டியில் ஏறுவது வழக்கம்.  உண்மையைக்கூறவேண்டுமெனில் அதில்தான் நான் நிறைய சங்கதிகள் நிறைந்த மனிதர்களை பார்க்க முடியும். நான் பெட்டியில் உள்ளவர்களை நோட்டமிட்டேன்.

மூன்று நான்கு இளைஞர்கள் வாயிலுக்கு அருகேயுள்ள இடத்தில் எதிரெதிராக அமர்ந்து வாயில் குட்காவைப்போட்டு குதப்பிக்கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவன் அடிக்கடி தலையை எத்தி இரயில் பெட்டிக்கு வெளியே துப்பிக்கொண்டிருந்தான். சென்(னை)தமிழ் அவர்களோடு விளையடிக்கொண்டிருந்தது. அருகே குழல்அப்பளம் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டடு அதனருகே பலவகையான நொறுக்கு தீனி சமாச்சாரங்கள் பொதியப்பட்டிருந்தன. உள்ளே உள்ளது எல்லாம் வெளியேத்தெரியும்படியான ஒரு பிளாஸ்டிக் பொதிவு. இதைபிரித்து பல கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் போலும். எடை கூடுதலாக இல்லாவிட்டாலும் அவற்றின் பொதிகள் பெரியதாக இருந்தன.  பொதிகள் சாய்ந்துவிடாமல் இருக்க அவற்றை வண்டியின் சுவரை ஒட்டி அடுக்கி அவற்றை பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு நபரைப்பார்த்தேன். இளவயது முதலாளி. இந்தமாதிரி நபர்களை பார்க்கும்போது எனக்கு சில சமங்களில் பொறாமையாக இருக்கும். என்னைப்போல் ஒரு நிறுவனத்தின் உயர்தர அடிமையாய் இல்லாமல் சுயமாய் முடிவெடுத்து தொழில்செய்து அவற்றின் மூலமாக தானும் தன் குடும்பமும் முன்னேறவேண்டும் என்கின்ற இலக்கோடு செயல்படும் இவர்கள்தான் உண்மையான தொழிலதிபர்கள். ஹ்ம் என்ற பெருமூச்சுமட்டும்தான் எனக்கான அப்போதைய ஒரே ஆறுதல். எனக்கெதிரே உள்ள இருக்கையின் மூலையில்  ஒருவர் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர் இரயில்வேயில் பணிபுரிந்து வருவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவருடைய மேல்சட்டைப்பையில் வெளியே தெரியும்படி ஏதோ ஒரு இரயில்வே தொழிற்சங்க குறியீட்டு எழுத்துகள் பதித்த அட்டையை வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவரை நித்திரைக்கொள்ள செய்தது அவர் அருந்திய ஏதோ ஒரு கஷாயம் என்பது மட்டும் அவர் மீது வந்த வாசத்தினால் நான் அறிந்துகொண்டேன். எனக்கெதிரே  தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்திருதார் ஒருவர். அவருக்கருகே சுழலும் சைக்கிள் ரிம்மில் ஒரு நாடா இணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டு இயங்கும் சாணைபிடிக்கும் ஒரு கருவி.  நிச்சமாக அவருடையதாக்கதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். வண்டி இப்போது நகரத்தொடங்கியது.

வண்டி நகரத்துவங்கியதும் இரயில்வே ஊழியர் விழித்துக்கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு தாம் இன்னமும் பயணத்தில்தான் உள்ளோம் என்பதை உறுதிசெய்துகொண்டார். பின் மெதுவாக எழுந்து தன் கைப்யையை எடுத்துக்கொண்டு பெட்டியின் வாயிலுக்கு வந்து நின்றார். அதே சமத்தில் சாணைபிடிப்பவரும் எழுந்து தன் கருவியை இறக்குவதற்க்கு வசதியாக வாயிலுக்கு அருகே கொண்டு நிறுத்தினார். இ.ஊ வெளியே பார்த்துவிட்டு சலிப்புடன் ‘சே சனியம்பிடிச்ச மழ.. நேர காலந்தெரியாம பெய்யுது..’ என்று சலித்துக்கொண்டார். அதற்க்கு அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த சாணைப்பிடிப்பவர் ‘ஐயா.. மழ பெய்ஞ்சாலும் திட்டுறீங்க.. வெயில காய்ஞ்சாலும் திட்டுறீங்க.. மழ பெய்யுதுன்னு வீட்டிலேயே முடங்கி கெடக்க முடியுமா.. இல்ல வெயில் நல்லாக்காயுதுன்னு வீட்டுக்கே போகாம இருந்துர முடியுமா.. மழயோ வெயிலோ எதுவும் நம்ம கயில இல்ல..  எல்லாம் இயற்க.. எது எப்படி இருந்தாலும் தொழில் செய்யறவனுக்கு மழயும் வெயுலும் ஒண்ணுதான்.. ’ அதற்க்குள்  இ.ஊ இடைமறித்து ‘அப்பா உன் வியாக்கியானத்த நா கேக்கல.. நீ ஒழுங்கா போய் கத்திய தீட்டுற வேலயப்பாரு..’ என்றார். ‘ஐயா நா போய் கத்திய தீட்டறேன்.. நீங்க போய் உங்க புத்திய தீட்டுங்க’ என்று சொல்லிவிட்டு  வியாசர்பாடி நிலையத்தில் நிற்பதற்க்காக ஊர்ந்த இரயில் இருந்து  தன் சாணைபிடிக்கும் கருவியை எடுத்துக்கொண்டு சட்டென இறங்கிக்கொண்டார்.  நான் சன்னல் வழியக எத்தி பார்த்தேன். தூரத்தில் மழையில் நனைந்தபடி சாணைபிடிக்கும் கருவியை தனது தோளில் சுமந்துகொண்டு அவர் நடந்து செல்வது எனக்கு நன்றாகத்தெரிந்தது.  

 

Published in: on ஜூலை 20, 2010 at 1:27 பிப  Comments (2)  

பறவை ஜாதி…

இன்று காலை பெரம்பூர் இரயிலடியிலிருந்து பீச்ஸ்டேஷனை வந்தடைந்தேன். அடுத்து வேளச்சேரி இரயிலுக்கான காத்திருப்பு. வண்டி வர தாமதமாகும் என்று என் உள்மனது சொல்லியதால் ஒரு கப் சூப்வாங்கிக்கொண்டு பிளாட்பாரக்கூரையை தாங்கி பிடித்துக்கொண்டிருந்த ஒரு பில்லரின் தாழ்வாராத்தில் அமர்ந்தேன். வேளச்சேரி இரயில் என்பதால் பிளாட்பாரம் முழுவதும் ஒரே ஐடி பர்சனாலிட்டீஸ்தான். கப்பிலிருந்து எப்படியாவது கடைசி சொட்டு சூப்பையும் எடுத்து ருசித்து(நக்கி)விடவேண்டும் என்ற ஆவலின் காரணமாக அருகில் இருந்த நாய் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டிருந்தபோதும் (நான் சொன்னது நிஜமான நாய்தாங்க…) நான் அதைபொருட்படுத்தாது கப்பை என் உதடுகளுக்கு நேராக கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அந்த சத்தம் கேட்டது. மழைக்காலங்களில் தெருமுனையில் உள்ள டிராஸ்பார்மர் வெடிக்கும்போது கேட்க்குமே அந்த சத்தம்.  சட்டென திரும்பிப்பார்த்தேன். நான் எந்த இரயில் வண்டியிலிருந்து வந்திறங்கினேனோ அந்த வண்டியின் இரண்டாவது பெட்டியின் கூரைமேல் அமைந்த மின்சார கம்பியிலிருந்துதான் அந்த சத்தம் கேட்டது. பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரது கவனமும் இப்போது சத்தம் வந்த திசையில். பெட்டியின் கூரைமேலிருந்து புகைந்த நிலையில் கருகிய ஏதோ ஒன்று பொத்தென பெட்டியின் அருகே நடைபாதையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் நானும் ஆர்வமாய் அருகில் சென்று பார்த்தேன். அது ஒரு காகம்.

காகம் என்று தெரிந்த உடன் என்னுடைய சுற்றங்கள் சுவாரிசியமற்றவர்களாய் டைம்ஸ் ஆப் இந்தியாவை தொடர்ந்து படிப்பதற்க்கும் (ரூபாய்க்கு ஏதோ ஸிம்பல் வச்சுட்டாங்களாமாமே? நிசமாவா..) மற்றும் மீதிவைத்திருந்த காபியை மிச்சம் வைக்காமல் குடிப்பதற்க்கும் மற்றவர்கள் அருகில் உள்ள சகதோழிகளுடன் கடலை போடுவதற்க்கும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். இப்போது நான் மற்றும் செத்துப்போன காகம் இருவர் மட்டும். தகுதிக்கு மீறிய சாவு. எவ்வளவு வோல்டேஜ் பாய்ந்தது என்று தெரிய வில்லை. கருமையே கருத்திருந்தது. என்னை தாண்டிச்சென்ற பலபேர் காகத்தைவிட என்னை அதி வினோதமாகப்பார்த்தார்கள். அப்போது அது நடந்தது. 

மழைவானத்திலே கருமேகங்கள் கூட்டமாக திரள்வதுபோல் திடீரென காக்கைகள் கூட்டம் வானத்தில் வட்டமிட்டு பீச்ஸ்டேஷனுடைய பிளாட்பாரங்களை இணைக்கக்கூடிய இரயில் மேம்பால நடைமேடையின் விளிம்பில் இரைச்சலுடன் வந்தமர்ந்தன.  கா கா கா என்று ஒரே சத்தம். மேலும் காக்கை கூட்டங்கள் வரத்துவங்கியிருந்தன.   கா கா கா என்ற ஒலி எங்கும் வியாபித்திருந்தது. அவைகளினுடைய சப்தத்தை யாரும பொருட்படுத்தவில்லை என்றாலும் கூட அவைகள் தொடர்ந்து சப்தமிட்டபடியே இருந்தன. நான் அவைகளை பார்த்தேன். பதட்டம் நிரம்பியக்கூக்குரல். அபயக்குரல் என்பார்களே அது இது தானோ? காக்கை இறந்துவிட்டது என்பது அவைகளுக்குத்தெருயும் என்றாலும் கூட செத்துப்போன அந்த காக்கைக்கு இவ்வளவு சொந்தங்கள் இருக்குமா என்று எனக்குள் வினவிக்கொண்டேன்.

எனக்குப்பின்னால் போலீஸ் சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரர் என்னைப்பார்த்து ‘என்ன தம்பி அந்த செத்துப்போன காக்காய அப்படி பாக்குறீங்க’ என்றார். ‘இல்ல சார்.. காக்கா வந்து..பாவம்..’ என்று நான் இழுத்துக்கொண்டிருந்தபோதே அவர் தொடர்ந்தார் ‘அட நீங்க வேற தம்பி.. மனுஷனே இந்தக்கம்பில் அடிப்பட்டு இதே இடத்தில் விழுந்திருக்கான்..’ என்றார்.  ‘அதுக்கில்ல சார்.. அங்க பாருங்க.. ஒரே காக்கா கூட்டம்.. பாவம் என்னம்மா பீல் பண்ணுதுங்க..’ என்றேன்.  ‘தம்பி நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க.. நான் சொன்ன மாதிரி மனுஷனே இங்க அடிப்பட்டு விழுந்து கிடந்தாலும் அவன ஒரு பய வந்து தூக்கமாட்டான்.. சும்மா ஒரு இச்சோட அவனவன் வேலயப்பாக்க கிளம்பிடுவான்.. நீங்க வேளச்சேரிதானே போகணும்.. அதோ பாருங்க உங்க ட்ரெயின் வந்துடுச்சி’ என்றார்.  நம்மவர் கூட்டம் வண்டியை ஆக்கிரமித்துக்கொண்டது.  நான் மெல்ல நடந்து சென்று ஒரு பெட்டியின் வாயிலில் ஏறி நின்றுகொண்டேன்.

நான் காகங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் கூட தன் சொந்தங்களைத்தவிர  மற்ற பொதுவான இறப்புகளுக்கு இப்படி உணர்வுபூர்வமாக கூடுவதில்லை என்பதே உண்மை. காக்கையைப்பொறுத்தவரை இப்படி கூடுவதென்பது இறப்புக்கு மட்டுமல்லாமல் இரைப்பைக்கும் கூட கூடுவது கண்கூடு. மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த இனமான உணர்வு வரமாட்டேன் என்கின்றது?  போலீஸ்காரர் சொன்னதுபோல் காலத்தை கருததில் கொண்டாலும்கூட அந்த காலத்திலேயே பராசக்தி படத்தில் வந்த பாடலில் உடுமலைநாரயணகவி அவர்களின் பாடல் வரிகளில்..

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா

எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க

பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க

கா..கா..கா..

இரயில் நகரத்துடங்கியது. செத்துப்போன காக்கா இப்போது என்னை விட்டு பின்னோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் காக்கைக்கூட்டத்தின் சத்தம் மட்டும இன்னும் என் காதுகளைவிட்டு அகலவில்லை.

Published in: on ஜூலை 16, 2010 at 1:06 பிப  Comments (4)  

பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 7

 

குரல் வந்த திசையை நோக்கினேன். நடந்துவரும் கூட்டத்தின் நடுவே ஒரு பெண் என்னைநோக்கி வேகமாக நடந்து வருவது எனக்குத்தெரிந்தது. இதற்குமுன் அந்தப்பெண்ணை நான் பார்த்ததில்லை. அவள் என்னருகே வரும் வரை காத்திருந்தேன். வேகமாக என்னருகே வந்த அவள் ‘சுரேந்திரன் கல்லூரிக்கு வந்த முதல் நாளே உங்க டைரிய மிஸ்பண்ணலாமா? இது உங்க கையிலிருந்து விழுவது கூடத்தெரியாமல் நடந்து போய்கொண்டிருக்கிறீர்களே..’ என்றவண்ணம் என்னுடை கல்லூரி டைரியை நீட்டினாள். இப்போது எனக்கு புரிந்தது அவள் என்னை என் பெயர் சொல்லி விளித்ததற்க்கு. டைரியை வாங்கிக்கொண்ட நான் ‘மிகுந்த நன்றி’ என்றேன். ‘நன்றி எல்லாம் நன்றாக இருக்கட்டும்.. நீங்களும் என்னைபோல முதலாமாண்டு வணிகவியல் வகுப்பைச்சேர்ந்தவர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.. எனக்கு மகிழ்ச்சி.. நீங்கள் கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் நட்பு… என் பெயர் ரேவதி..’  என்று என்னை நோக்கி அவள் கையைநீட்டினாள் என்கையை குலுக்குவதற்க்காக. அவள் என்னை நோக்கி தன் கையை சட்டென நீட்டவும் நான் சற்று திணறினேன். ‘கமான்.. ஏன் கூச்சப்படறீங்க.. நீங்கதான் என் முதல் ப்ரண்ட்.. ஓகே என வலிந்து வந்து என் கைகளைப்பிடித்து குலுக்கினாள்.  இப்போது நான் எந்த உலகத்தில் இருக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. ‘கமான்.. வாங்க போகலாம்’ என்றாள்.  நான் அவள் வளர்க்கும் நாய்குட்டி போல அவளுடன் சென்றேன்.  முதன் முறையாக ஒரு பெண்ணுடன் ஜோடி போட்டுக்கொண்டு நடப்பது மிக்க மகிழ்ச்சியளித்தது. கல்லூரின்னா கல்லூரிதான் என்று மனத்தில் நினைத்துக்கொண்டு அவளுடன் நட்ந்துகொண்டிருந்தேன்.

—————————————————————————————————————————-

நிற்க. இந்த பதின்ப வயது குறிப்புகளை வைத்துக்கொண்டே காலத்தை தள்ளிவிடலாம் என்கின்ற நினைப்பு வந்துவிடாமல் இருக்கவும் பருவகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பலவற்றை மீண்டும் நினைவில் கொண்டுவருவதற்க்கும்   ஏதோ இதுவரை ஒப்பேற்றிவிட்டேன் என்ற திருப்தியிலும் மற்ற பகுதிகளை கதைவடிவத்தில் கொண்டுவரும் நல்ல(?) எண்ணத்திலும எனது இந்த பதின்ப வயது பதிவுகளை  இதோடு நிறுத்திக்கொண்டு அதே சமயம் என்னுடைய அனுபவங்களை வாசகர்களாகிய(?) உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைத்துக்கொடுத்த பத்மஹரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு அடுத்ததாக இந்த தொடர்பதிவில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நான் அழைப்பது தனிக்காட்டு ராஜா  என்கின்ற அடங்க மறுக்கின்ற அத்துமீறுகின்ற அந்த நல்லத்தம்பியை.

 

Published in: on ஜூன் 22, 2010 at 10:59 முப  Comments (3)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...