தர்பார் டீசர் – ஒரு பார்வை

கபாலி, காலா, பேட்ட வரிசையில் இப்ப தர்பார் டீசர். வழக்கமான பீஜியம் வித் டமால் டுமீல் ஸவுண்ட்ஸ். தலைவர் என்ட்ரோ…. ஸாங் பை எஸ்பிபி ஹூப்பர். பன்ச் டயலாக்ஸ் பழசுதான். ஆனா அத தலைவர் ஸ்டைலா சொலுலம்போது.. ஹாஸம். வில்லன் அசலோ? என்னா முரட்டுத்தனம். நயன்தாரா நச்…

டீசர வச்சி முருகதாஸ் கதைய கணிக்க முடியாது.. மனுஷன் எங்க எங்க ட்விஸ்ட் வச்சிருக்காரோ..

மொத்தத்தில் டீசர் சும்மா கிழி.. கிழி..

Published in: on திசெம்பர் 17, 2019 at 6:44 முப  தர்பார் டீசர் – ஒரு பார்வை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது  

கும்முக்கி – ஒரு காகப்பார்வை

A-still-from-Kumki

நரி காகத்தினை பார்த்து ‘காக்கா… காக்கா.. (கக்கா.. கக்கா என்று படித்து வைக்காதீர்கள்) நீ ரொம்ப அழகா இருக்கே… ஒரு பாட்டு பாடேன்’ என்றது. காக்கையும் நரியின் புகழ்ச்சியில் மயங்கி ‘கா.. கா..’ என்று பாட துவங்கியது.  அப்போது காகத்தின் வாயிலிருந்த வடை நழுவியது.

இந்த ஸீன் இங்கே நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அங்கே பாட்டி தான் சுடுகின்ற வடை கருகிக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வடை சுட்டுக்கொண்டிந்தாள்.  

ஜிம்மி ஜிப் கேமரா கோணத்துல கீழே வர்ர இந்த ஸீனை நினைச்சிப்பருங்க…

மரத்தின் உச்சிக்கிளையில்  காகம் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கிறது.. (அங்கிருந்து கேமரா ஸ்ட்ராட்)

காகம் வாயிலிருந்து நழுவிய வடை மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது….  (கேமரா வடை கூடவே ட்ராவல்)

நரியும் தன்னை நோக்கி கீழே விழுந்துகொண்டிருக்கும் வடையை மேலே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. (கேமரா ஃபாலிங்)

‘தொப்’ , ‘தொபுகடீர்’ , ‘பட்’, ‘பட்டென்று’, ‘டம்’, ‘டமால்’…..என்று உங்களுக்கு பிடித்த ஒரு சவுண்டை செலக்ட் செய்து கொள்க.

ஒரு சரியான ஷணத்தில் மேலிருந்து கீழே விழுந்த வடையானது நரியின் உச்சந்தலையில் விழ (செலக்டட் சவுண்ட்…) நரியும் பட்டென்று சாய்ந்துவிட்டது.  வடை விழுந்ததால் நரியின் தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் குபு குபுவென கசிய, நரியின் தலையைச்சுற்றி ரத்தம் தரையில் படர்ந்துகொண்டிருந்தது.

இதை பார்த்த காகமோ சட்டென்று மரத்திலிருந்து கீழிறங்கி(?) வந்து நரியினை தொட்டுப்பார்க்க நரி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருப்பதை அது உணர்ந்தது.

இந்த இழவு தன்னால் தானே நிகழ்ந்தது என்று எண்ணி கலங்கி கண்ணீர் விட்டு, காகம் கனத்து அழுதது.

அழுகை அடங்கியதும் தான் பாட்டியிடமிருந்து சுட்ட வடைக்காக, வடை சுட்ட பாட்டியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பாட்டியிடம் சென்று…. 

‘ ஐயகோ  என்ன கொடுமை’….  அங்கே பாட்டி கரு(க்)கியிருந்தாள்.

 

‘திம்’…. யாரோ ஓங்கி என் முதுகில் மிதித்ததை என்னால் உணர முடிந்தது…

‘வீணாப்போனவனே… போனாப்போவுதுன்னு காணமப்போயிருந்த உன்ன கூட்டியாந்து இங்க உட்டா… நீ கும்கி படத்தையே கலாய்க்கிறியா…  இப்ப உன்ன குமுக்கி எடுக்கிறேன் பாரு……’

 

Published in: on திசெம்பர் 28, 2012 at 5:20 முப  Comments (1)  

நொந்தலாலா…

இன்றைக்கு எப்படியும் பார்த்துவிட வேண்டும். சாநியும் ஜெமோவும் ரொம்ப சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆன  நிலையில் படத்தினைக்காண ஆவலாய் ஆயத்தமானேன். ஆயத்தம் என்று சொன்னால் அப்படி இப்படியில்லை. என்னுடைய முழுநாள் வேலையை அரைநாளில் முடித்துவிட்டு நிறுவனத்தின் முதல் பேருந்து புறப்படும் நேரத்திற்க்காக கவுண்டவுன் முறையில் காத்திருந்தேன். ஆனால் யார் செய்த செய்வினையோ என்னுடைய அலுவலகத்திலிருந்து நான் சீக்கரிமாகவே புறப்படவேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் என்னுடைய பாஸ் என்கிற பாஸ்கரன் என்னை உள்ளே அழைத்தார். (சத்தியமா என் பாஸ் பெயர் பாஸ்கரன்தான்.. ம்.. நம்புங்க…) மிஸ்டர்.. நாளைக்கு ஃபாரின் விசிட்டர்ஸ் வராங்கன்னு சொன்னேனில்லயா.. அதற்கான ஏற்பாடுகளை செஞ்சாச்சா?.. என்று சற்றே உரத்த சொனியில் வினவ நான் வேகமாக ‘ஆச்சு சார்’ என்று மறுமொழிந்தேன். ‘மண்ணாங்கட்டி’ என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. ‘வெல்கம் போர்டுல என்னய்யா லெட்டர்ஸ் ஒட்டியிருக்கே.. நான் கேணல் திரு.. என்று போடச்சொன்னா கேண திரு..ன்னு போட்டிருக்கே..’ என்று மொழிய நான் எந்த போர்டு என்று கேட்க நினைத்து பின் சுதாகரித்துக்கொண்டு ‘நான் பார்த்து சரி பண்ணிடறேன் சார்’ என்று சொல்லியபடி பின்வாங்கி கோபமாய் என் சகாவைத்தேடினேன். ‘என்னப்பா பேயறஞ்சா மாதிரி வெளியே வரே..’ என்றபடியே எதையோ எடுத்து தனது வாயில் போட்டபடி என்னைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தான் சகா. ‘டேய் உன்னுடைய பொறுப்புதானே நேம் போர்ட் கிரியேஷன்’ என்றேன். ‘யெஸ்.. ’ என்றான். ‘பாவி நீ பண்ண தப்புக்கு என்ன கூப்பிட்டு திட்டறான் அந்த லூசு’ ‘நேம் போர்டுல கேணல் என்பதற்கு பதிலா கேண என்று போட்டிருக்கியாமே..’ என்று கடிந்தேன்.   ‘அந்த லூசு சொல்லுதுன்னு இந்த லூசு வந்து நிக்குது..’ என்று முனகியவனை ‘என்ன உனக்குள்ளேய பேசிக்கற’ என்றேன். ‘கேணல்..ல  ‘ல்’ காணாம் அவ்வளவுதானே. ஒட்டிட்டாப்போச்சு..’ என்றான் கூலாக. நான் அவனை வைய வாயெடுப்பதற்குள் மீண்டும் பாஸ்கரன் கூப்பிட்டார்(ன்).

‘மிஸ்டர்.. எல்லாத்தையும் வெரிபை பண்ணிட்டு எனக்கு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் இன்னைக்ககு நீங்க புறப்படணும்..’ என்று எனக்கு கட்டளையிட்டு விட்டு அவர்(ன்) புறப்பட்டுக்கொண்டிருந்தார்(ன்). நான் பார்த்து வளந்த பய .. ஹ்ம்.. எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பாஸ்கரன்  எனைப்பார்த்து ‘மிஸ்டர்.. என்ன யோசிக்கிறீங்க.. நான் கன்பார்ம் பண்ணச்சொன்னது என்னுடைய மொபைல்ல.. அண்டர்ஸ்டேண்ட்..’ என்று சொல்லியபடி விருட்டென்று எழுந்து சென்றான்.  பாஸ் என்கிற பாஸ்கரன்  யாரையாவது கார்னர் செய்கிறான் என்றால் அதில் ஏதாவது ஒரு உள்குத்து இருக்கிறது என்று அர்த்தம். ஒரு முறை சகா பளிச்சென்று நல்ல விலையுயர்ந்த சர்ட் அணிந்து வர அது பாஸ்கரன் கண்ணை உறுத்த அன்றைக்கு சகா பட்ட பாடு இருக்கிறதே… அப்பப்பா… சொல்லி மாளாது.. அன்னைக்கு சகா அவன் சர்ட்டுல அவனே வலிய தேனீர் ஊற்றி கறைபடுத்திக்கொண்டு பாஸ்கரன் முன்னால் போய் நின்ற போதுதான் பாஸ்கரன் அமைதியானான். (உங்க ஆபீஸ்ல கூட இப்படித்தானுங்களா?…). இப்பொழுது பாஸ்கரன் மனம் நோகும்படி நான் என்ன செய்தேன்… கடவுளே எனக்கு விளங்கச்செய் என்று என்னையே நான் நொந்தபடி செக்லிஸ்டை எடுத்துக்கொண்டு சகாவின் உதவியை கூட எதிர்பாராமல் விருவிருவென என் வேலையை(?) துவங்கினேன்.

வெல்கம் போர்ட் வெரிபிகேஷன் (ஆப்டர் தி ஒட்டிங் ஆப் தி லெட்டர் ‘ல்’), பொக்கே மற்றும் சந்தனமாலை ஆர்டர்.. டீ ட்ரேவில் வைக்கவேண்டிய யுடென்ஸில்ல்.. டீ.. (ஹெர்பல் டீயாம்.. அந்த கருமத்த எப்படித்தான் குடிக்கிறான் இந்த பாஸ்..) மில்க்.. பாரின் பிஸ்கட்ஸ்..  , கான்பரஸ் ஹால் ஸ்ப்ரே அண்டு ஹவுஸ் கீப்பிங் என்று சரிபார்த்ததோடு மட்டுமால்லாமல் ரிசப்ஷனிஸ்ட் கேரளாடைப் சாரி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்பது வரை உறுதிசெய்துவிட்டு வேகவேகமாய் என்னுடைய நிறுவன பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ‘என்ன சார் இன்னைக்கு லேட்டு’ என்றது பக்கத்து சீட்.  ‘வேலப்பா..’ என்று வேலை என்ற சொல்லுக்கே வேலை என்று அர்த்தம் கற்பித்துவிட்டு ஆசுவாசமாய் நந்தலாலாவைப்பற்றி சிந்ததிக்கத்தொடங்கினேன்.

மிஷ்கின். ஒரு அற்புதமான டைரக்டர். ஆனால் இதுவரை நான் அவருடைய படங்களை பார்த்ததில்லை. பின் எப்படி அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் இணையத்தில் அவரைப்பற்றி சேகரித்த செய்திகளை வைத்துத்தான். சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே திரைவிமர்சனங்களை படித்தபின்பு அவருடைய களங்கள் வித்தியாசமானது என்பதை நான் அறிந்து(?) கொண்டேன். ஆனால் அவருடைய படைப்பான நந்நலாலாவில் ஒரு வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் அதுவும் மிஷ்கினே மனநலம் குன்றியவராக நடிக்கவும் செய்துள்ளார் எனும்போது என் ஆவல் கூடவும் மேலும் பல விமரிசனங்கள் படத்தினை தூக்கியும் சில விமரிசனங்கள் படத்தினை தாக்கியும் இணையத்தில் வந்ததால்  கண்டிப்பாக படத்தினை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தினை தூற்றிய பலராலும் காப்பி என்று சொல்லப்பட்ட அல்லது தழுவல் என்று அறியப்பட்ட நந்தலாலா ஜப்பான் பதிப்பை(?) யூடிபில் அரசல் புரசலாக பார்த்துவிட்டதிலிருந்து(?)  ஒரு வாரம் காத்திருந்தது தவறு என்று எனக்கு பட்டதால் படத்தினை அன்றே உள்ளூர் திரையரங்கில் காண முடிவுசெய்தேன்.  முடிவெடுத்தலில் தவறில்லை. ஆனால் எடுக்கப்பட்ட நாள் எனக்கு சரியான நாளில்லை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

வேகவேகமாய் வீடு சென்ற நான் ‘சினிமாவுக்கு போறேன்’ என்றேன் மொட்டையாக. ‘எப்ப’ என்ற கேள்விக்கு பதிலாய் ‘10 மணிக்கு’ என்றேன். ‘வேண்டாம்.. மழ வர மாதிரியிருக்கு..’ என்ற ஆணவ பேச்சுக்கு பதிலாய் ‘கண்டிப்பா இன்னிக்கு நா பாத்தேயாகணும்..’ என்றேன். ‘அப்ப.. இன்னிக்கு டின்னரு உங்களுக்கு தேவை இல்ல.. ம்.. அப்பபுறம்.. என்ன படம்’ என்ற அலட்சிய கேள்விக்கு ‘நந்தலாலா’ என்றேன். ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலிக்கு ‘என்ன சிரிப்பு’ என்றேன். ‘ஒண்ணுமில்ல..  போய்ட்டு வாங்க’ என்ற நக்கலுக்கு பதிலளிக்காமல் வீட்டை விட்டிறங்கி திரையரங்கை நோக்கி வேகமாய் சைக்கிளை மிதித்தேன். வழக்கத்தைவிட சைக்கிள் மிக மெதுவாய் சென்றது. காரணத்தை அறியும் ஆவல் அப்போது என்னிடம் ஆர்பரிக்காததால் நான் என் முழு திறனையும் உபயோகித்து வேகமாய் சைக்கிளை மிதித்தேன். ஒரு வழியாய் திரையரங்கின் நுழைவாயிலை அடைந்து விட்டேன். தியேட்டரின் விளம்பர சுவற்றில் மிஷ்கின் தனது ஒருகையால் பள்ளிச்சிறுவன் ஒருவனின் கையையும் மறுகையால் தான் அணிந்திருந்த பேண்ட் நழுவாமலும் பிடித்துக்கொண்டு என்னை உற்றுப்பார்த்தார். நான் அவருடைய பார்வையை தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கூட்டம் இல்லை என்று சொல்வதைவிட கூட்டமேயில்லை என்று சொல்வதுதான் சரி. மணியை பார்த்தேன். சரியாக இரவு 9. 30.  தியேட்டரின் வாகன நிறுத்துமிடத்தில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். என் சைக்கிளைத்தவிர வேறு எந்த வாகனமும் இல்லை. சற்று முன்கூட்டியே வந்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ‘என்ன சார்.. டோக்கனா’ என்றபடி ஒரு பையன் என்னைப்பார்த்து வந்து கொண்டிருந்தான். பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கும் முன் பையன் எனைப்பார்த்து ‘ இன்னா படம் சார்’ என்றான். ‘நந்தலாலா’ என்றேன்.  ‘நீங்க பத்து மணிக்கு வந்து டோக்கன் போட்டுக்குங்க சார்’ என்றபடி என் பதிலை எதிர்பாராதவனாய் அரங்கதின் வாயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்தான். நான் என் சைக்கிளை பூட்டி விட்டு மெதுவாய் நடந்து சென்று திரையரங்கின் வெளிவாசலை அடைந்தேன்.

திரையரங்கின் எதிரே டாஸ்மாக் தனது அன்றைய நாளின் இறுதிகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. மிதமான கூட்டம் மிதந்து கொண்டிருந்தது. ஹ்ம்.. கல்யாணத்துக்கு முன்னே இருந்த சுதந்திரம் இப்போது எனக்கிருந்தால்.. இந்நேரத்தில் நாள் உள்ளே இருந்திருப்பேன்.. என்று நான் பெருமூச்சுவிடவும் பக்கத்திலிருந்த நாய் என்னைப்பார்த்து குரைக்கவும் சரியாக இருந்தது. தனியா நிக்கறது தப்பா என்று நாயினை முறைத்துவிட்டு அதன் குரையினை பொருட்படுத்தாது இருண்ட வானத்தை அண்ணாந்து பார்த்தேன். மேலேயிருந்து மழைச்சிதறல்கள் பூச்சிதறல்களாய் என் முகத்தை முத்தமிட்டன. மனம் சிறகாய் பறந்தது. அதை இன்னும் சற்று உயரத்தில் பறக்கவைக்க எண்ணி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டாஸ்மாக்கினுள் நுழைந்தேன் (ஒரு ரெண்டு மணி நேரத்துல சரக்கு வாசன நம்ம கிட்டயிருந்து போயிடாது?). லைட்டாக ஒரு மீன்கொத்திபறவையினை வாங்கிக்கொண்டு மணியைப்பார்த்தேன். சரியாக 9.50. வேகவேகமாய் பாட்டிலை காலிசெய்துவிட்டு நிமிர்ந்தேன். எனக்கெதிரே சற்று தொலைவில் டோக்கன் பாய் சரக்கடித்துக்கொண்டிருந்தான். நான் அவனை அணுகி ‘தம்பி டோக்கன் போட வரலியா?’ என்றேன். அவன் கடுப்புடன் எனைப்பார்த்து ‘டோக்கன் எல்லாம் கிடையாது.  போய் முதல்ல டிக்கட் கிடைக்குதான்னு பாருங்க’ என்றான். ஆஹா.. எல்லாம் அட்வான்ஸ் புக்கிங்கா.. என்று மனசுக்குள் நினைத்தபடி தியேட்டரின் டிக்கட் கவுன்டரை (கவுண்டர் என தவறாக படிக்காமல் ‘என்கவுன்டரில்’ வருமே அந்த கவுன்டர் போல வாசிக்கவும்)  நோக்கி விரைந்தேன்.

டிக்கட் கவுன்டரில் ஆளும் இல்லை வரிசையும் இல்லை. இதே இடத்தில் போன மாதம் எந்திரனுக்கு வரிசையில் நின்று டிக்கட் வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது. உள்ளே எட்டிப்பார்தேன். விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.  மணியைப்பார்த்தேன். சரியாக 10. ‘என்னா வேணும் சார்’ என்ற குரல்கேட்டு திரும்பினேன். பேண்ட் சர்ட் அணிந்து கையில் ஒரு சின்ன பெட்டியுடன் ஒருவர் (இந்த நேரத்தில் எந்த பேங்க் திறந்திருக்கும்) என்னை பார்த்து நடந்துவந்துகொண்டிருந்தார்.  ‘நந்தலாலா டிக்கட்’ என்றேன் தயக்கத்துடன். அவர் சாவகாசமாய் என்னருகே வந்து நின்று ‘சார் கலைப்படங்களை விரும்பி பாக்கறவரு போலிருக்கு’ என்றார். ‘ஆம்’ என்றேன். அமைதியாக.  ‘உங்களையும் சேத்து மொத்தம் மூணுபேர் மட்டுமே நந்தலாலாக்கு வந்திருக்கிறதால நாங்க ஷோவ இன்னிக்கு ரன் பண்ண முடியாத நிலைமையில் இருக்கோம்.. மன்னிச்சுக்கோங்க’ என்ற படி நகர முயன்றார். ‘என்ன சார் இது இப்படி பண்ணறீங்களே’ என்று நான் கேட்க அவர் சற்று நிதானமாய் ‘மூணு பேருக்காக படத்த ஓட்ட முடியுமா.. எங்களையும் நீங்க பாக்கணும்.. புரிஞ்சிக்கோங்க..’ என்றபடி திரையரங்கின் உள்சென்று கதவையடைத்துக்கொண்டார். நான் வெளியே பார்த்தேன். இப்போது மழையை என்னால் ரசிக்க முடியவில்லை.  மெதுவாய் நடந்துவந்து என் சைக்கிளை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வெளியே வந்தேன். சைக்கிளை தள்ளுவதே சிரமமாய் இருந்தது.  சைக்கிளை நிறுத்தி பார்வையிட்டேன். புரிந்தது. முன் சக்கரம் பங்ஞ்சர். என்னை நானே நொந்தபடி சைக்கிளை தூறும் மழையில் தள்ளிக்கொண்டு நடந்தேன். இரவு நேர சாலை வாகனங்கள் என்மேல் சேற்று சிதறல்களை பூவாய்(?) தூவியபடி பறந்துகொண்டிருந்தன.  நான் சாலையின் இடது ஓரமாய் நடந்துகொண்டிருந்தேன். சாலையின் எதிர் முனையில் சாலையோர விளக்கு கம்பத்தின் கீழே ஒரு உருவம் நின்றுகொண்டு விளக்கு கம்பத்தின் மேலே இருந்த விளக்கினை பார்த்து கடுமையான வார்த்தைகளால்  திட்டிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாய் அதை சத்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது (இதுதான் என்னைப்பார்த்து குரைத்த நாயோ?..). நான் சைக்கிளை தள்ளிக்கொண்டே அந்த உருவத்தைப்பார்த்தேன்.  முகம் பளபளவென்று வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது.  செக்கியூரிட்டி அணிவது போன்ற ஒரு வெளிர் நீல சர்ட்டும், சர்ட்டில் தொங்கும் ஒரு ஊதலும்,  கருமை நிறம் என்று சொல்ல முடியாத கருமையான நிறத்தில் ஒரு அளவில்லாத பேண்டும் அணிந்து கொண்டு அந்த பேண்ட் தரையில் விழுந்து விடாதபடி தனது ஒரு கையால் அதை கெட்டியாக பிடித்தபடி அந்த உருவம் நின்று கொண்டிருந்தது. சமீபத்தில்தான் அதன் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்க வேண்டும் என தோன்றும் வகையில் அதன் தலையில் முடியிருந்தும் இல்லாது போன்ற ஒரு நிலை. நான் அது மன்னிக்கவும் அவனை பார்த்தேன். அவன் நிற்பதும் துள்ளுவதுமாக யாரையோ ஏசிக்கொண்டிருந்தான். நான் இப்போது நின்றுவிட்டிருந்தேன். வயிற்றில் இருந்த மீன்கொத்தியின் வாசனை இப்போது என் தொண்டையின் வழியாக ஏப்பமாக வெளிவந்தது. இப்போது அவன் ஏசுவதை நிறுத்திவிட்டு என்னை உற்றுப்பார்த்தான். ஆஹா தேவையில்லாமல் நாம் எதிலும சிக்கிக்கொள்ளக்கூடாது என சட்டென்று என் சைக்கிளில் ஏறி அது பங்ஞ்சர் என தெரிந்தும் வேகமாக சவட்டினேன். சிறிது தூரம் வந்து சைக்கிளை நிறுத்தி என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனிதனின் படைப்புளில்தான் எத்தனை விதம். பாவம் அவன். அவன் பிறக்கும் போது அவன் தாய் எவ்வளவு ஆனந்தப்பட்டிருபபாள்.  மீண்டும் நந்தலாலா நினைவு.  மிஷ்கின் என்னை பார்த்ததை நான் நினைத்துப்பார்த்தேன்.  ஒரு கலைப்படம் எடுத்துப்பிழைப்பது எவ்வளவு கடினம் பார்த்தாயா? என்று அவர் என்னை கேட்பது போல எனக்கு தெரிந்தது.  ‘பளீர்’ ஒரு மின்னல் தாக்கிய உணர்வு. நான் அந்த விளக்கு கம்பத்தின் அடியில் பார்த்தது.. அது ஒரு வேளை….

Published in: on திசெம்பர் 7, 2010 at 10:20 முப  Comments (14)  

இமயமும்… சிகரமும்…

பாத்துகுங்க மகாஜனங்களே…  இதுக்கு நான் பொறுப்பில்ல… சொல்லிப்பிட்டேன் ஆமா…

Published in: on பிப்ரவரி 9, 2010 at 4:16 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

நல்லா சொன்னீங்க போங்க…

 

விஜய் :      கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?

 நாம      :    விடுங்க   பாஸ்… இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை.  இதுக்கெல்லாம் பயந்தா நாம  “தொழில்” பண்ண முடியுங்களா..

—————————————————————————————————————————-

 

நாம்      :     வா இப்பிடியே செத்து செத்து விளையாடுவோமா..

 அஜீத் :    முடியலவேணாம் அளுதுருவேன்!

—————————————————————————————————————————-

 

நாம்      :    உங்கிட்ட ஒப்பனிங் நல்லா இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே.  இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?

சூர்யா :    இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது…

—————————————————————————————————————————-

 

நாம்      :       உன்ன எவ்ளோ அடிச்சாலும் தாங்கறியே.   நீ ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன்ப்பா.

விக்ரம்:      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்ணிட்டா ங்க…

—————————————————————————————————————————-

வசன உபயம்  திரு. வடிவேலு (வைகை புயல்) அவர்கள்.

Published in: on திசெம்பர் 31, 2009 at 4:40 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...