தன்னையே கொல்லும் சினம்…

வரைபடத்தை மீண்டும் பாத்தேன். வரைபடத்தில் சிவப்புநிறத்தால் சுழிக்கப்பட்டிருந்த வட்டவடிவ குறியினைச்சுற்றி அமைந்த குறிப்புகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து நான் தற்போது நின்று கொண்டிருககும் இந்த சாலை என்னுடைய திட்டத்தின்படி சரியான பாதைதானா என உறுதிசெய்துகொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணியினை முடிக்க இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு மனிதவெடிகுண்டு. ஆம் என்னுடைய வாழ்க்கை இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடப்போகின்றது. நான் உயிருக்கு பயந்தவனல்ல. என்னுடைய இனத்தின் மீதான கோபம்… அதனுடைய இயலாமையின் கோபம் என்னை மனித வெடிகுண்டாக மாற்றியிருந்தது. அதனால் என்னை நான் இணைத்துக்கொண்டதுதான் என்னுடைய  E.E.E.  இயக்கம். இயக்கத்தின் நோக்கம் எங்கள் இனத்தின் இயலாமையை இல்லாமலாக்கி விடுவது. என்னுடைய இயக்கம் மற்றும் அது சார்ந்த கொள்கைகளுக்கும் நான் கட்டுப்பட்டவன். அந்த கட்டுப்பாடு இட்ட கட்டளையால் இன்று  நான் இந்த உயிர்க்களத்தில். 

ஆள் அரவமற்ற அந்த சாலையோர தேநீர்கடையில் என்னுடைய கடைசி தேநீரைப்பருகிக்கொண்டிருந்தேன். மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது.  நான் புறப்பட ஆயத்தமானேன். தேநீர்க்கடைக்காரர் என்னைப்பார்த்து ‘தம்பிக்கு ரொம்ப அவசரமோ.. மழை விட்டதும் போகலாமே..’ என்றார். அவர் என்னைப்பார்த்து அனுதாப்பட்டது என்னுடைய பருமனான உருவத்தைப்பார்த்துதான் என நான் யூகித்துக்கொண்டேன். இப்போது நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். நான் இங்கு வந்து போனது நாளை இந்த உலகுக்கு தெரியவந்தால் எத்தனைவிதமான இன்னல்களுக்கு இவர் ஆளாக நேரிடும்… அப்போது இதுபோல் என் மேல் இவர்அனுதாபப்பட முடியுமா… அதற்க்கு பேசாமல் இப்போதே அவர் என்னுடன் வந்துவிடுவது சாலச்சிறந்தது… என நினைத்துககொண்டேன். நான் என்னுடைய மழைக்கோட்டை சரிசெய்துகொண்டேன். மழைக்கோட்டின் உள்ளே சரியாக  வடிவமைக்கப்பட்ட உயர்அழுத்தத்திறன் நிரம்பிய பொதுமொழியில் சொல்லவேண்டுமென்றால் உருளை உருளையாய் மஞ்சள் நிறத்தில் பல வெடிகுண்டுகள் வரிசையாய் பொருத்தப்பட்டிருந்தன. அத்தனை வெடி குண்டுகளையும் ஒரே சமயத்தில் உயிர்ப்பிக்கப்போகும் சிவப்பு நிற பொத்தான் என்னுடைய  இடதுகை ஆட்காட்டிவிரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே அமைந்திருந்தது. இந்த சிவப்புநிற பொத்தான்தானை அழுத்தப்போவதுதான் என்னுடைய இறுதி இயக்கமாக இருக்கவேண்டும். நான் தேநீர் கடைக்காரரிடம் பிரியா(?)விடைபெற்றுக்கொண்டு என்னுடைய இலக்கைநோக்கி என்னுடைய விலையுர்ந்த(?) பைக்கை விரட்டினேன்.

சாலை வேகமாக பின்னோக்கிச்சென்றுகொண்டிருந்தது. தூரத்தில் நகரம் என்னை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தது இன்னும் சற்று நேரத்தில் அது தன் அமைதியை இழக்கப்போகிறது எனத்தெரியாமலேயே.  நான் சற்று வேகமெடுத்தேன்.  எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் அலட்சியமாய் கடந்து முன்னேறிச்சென்று கொண்டிருந்தேன்.  மழை இன்னும் தூறிக்கொண்டிருந்தது. என்னுடைய கடந்தகாலம் என் கண்முன்னே வந்து நின்றது. மழையில் அப்பா வாங்கித்தந்த புது சைக்கிளில் நனைந்தபடி சென்று அம்மாவிடம் அடிவாங்கியது., பின் சினிமாக்கொட்டகையில் அதே சைக்கிளை தொலைத்துவிட்டு வந்து அப்பாவிடம் அடிவாங்கியது., கல்லூரி காலத்தில் யாரோ ஒருவன் பின்னாலிருந்து கல்லெறிந்ததற்காக மாணவர் கூட்டத்தின் முன்னால் நின்றுகொண்டிருந்த நான்  நன்கு வளர்ந்த ஒரு போலீஸ்காரர் கையினால் அடிவாங்கியது., பின்னர் இயக்கத்தில் சேர்ந்து வளர்ந்து பயிற்சியின் போது துப்பாக்கியை தவறுதலாய்  பிடித்து தலைவனிடம் அடிவாங்கியது என அடிபடும் படலம் என் முன்னே விரிந்து மறைந்தது. இந்த நிகழ்வுகளில் எனக்கு பலமுறைகோபம் வந்தபோதும் என்னுடைய இயலாமை என்னை ஊமையாக்கிவிடும்..  ஹ்ம்..

நகரம் என்னை அன்போடு வரவேற்க்கின்ற அந்த எல்லையில் நான் வேகத்தை குறைத்து மெல்ல ஊர்ந்தேன். திடீரென்று கீரீச்… என்ற சத்தத்துடன் ஒரு ஆட்டோ என்முன்னேவந்து என்னை மறித்துக்கொண்டு நின்றது. ‘த்தா…  கண்ணுதெரியல.. ஃபாரின் பைக்குல உக்காந்துட்டா நீ என்ன பிளைட்ல போறதா நினைப்போ..’ ‘ரோட்டுல இருக்கிற தண்ணிய என் வண்டிக்குள்ள அடிச்சுடடு போற..’ என்றபடி என் முன்னே கோபமாய் வந்து இறங்கினான் அந்த ஆட்டோ ஓட்டுனன். சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் அரவமில்லை. நான் அவனைவிட்டு விலகும் பொருட்டு என்னுடைய  பைக்கை வேறு திசையில் திருப்ப முயல்கையில் ஒடிவந்து என்னுடைய மழைக்கோட்டை இறுகப்பிடித்துக்கொண்டான். ‘த்தா..  நா பேசிக்கினே இருக்கேன்.. நீ பாட்டுக்குனு கம்முன்னு போறியே.. போயிடிவியா..’ என்றவனின் கைகளை விலக்க முயன்றேன். திடீரென அவன் என்னை அடிக்க முயல நான் விலக அவனுடைய இரண்டாவது முயற்சியில் அவனுக்கு வெற்றி கிட்டி அவன் என்னை இப்போது அடித்தே விட்டான். விரு விருவென என் தலையின் உச்சிக்கு கோபம் சென்றுகொண்டிருந்தது. ‘த்தா.. கொன்னுறுவேன்’ என கூறியவண்ணம்  அவனுடைய அடுத்த அடி என்மேல் விழுவதற்க்கும் என்னுடைய விரல் அந்த சிவப்பு பொத்தானை அழுத்துவதற்க்கும். . . .

Published in: on ஒக்ரோபர் 4, 2010 at 12:40 பிப  Comments (4)  

குடி குடியைக்கெடுக்கும்…

 ‘டேய் சின்னா.. என்ன அப்படி பாக்குற.. முதல்ல யோசிக்கிறத நிறுத்து.. சரக்கு உள்ளே போனா எல்லாம் சரியாயிடும்..’ என்றான் கோட்டி. நான் என் முன்னால் இருந்த கண்ணாடி டம்ளரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். பொன்னிறமான ஒரு திரவம் கோலி சோடா ஊற்றப்பட்டு என் முன்னால் வைக்கப்பட்டிருந்தது. என் இடது கையில் முறுக்கு. ‘பட்டுன்னு எடுத்து அடிச்சுட்டு முறுக்க ஒரு கடிகடிச்சுக்கோ..’ இது கோட்டி. ‘இல்ல இதிலிருந்து வர்ற வாசன எனக்கு பிடிக்கல..’ என்றேன். ‘பாவி மகனே.. உனக்காக கஷ்டப்பட்டு ஒஸ்தியான சரக்க வாங்கி வந்தா நீ என்னடான்னா வாசன பிடிக்கலன்ற..’ ‘இதோ பாரு.. இப்ப நீ குடிக்கல… மவனே நா உ வாய திறந்து ஊத்திப்புவேன்…’ என்றான் மிரட்டலாக.  ஆனது ஆகட்டும் என்று பட்டென எடுத்து குடித்துவிட்டேன். தொண்டையிலிருந்து வயிறு வரைக்கும் உள்ளே  யாரோ தீவைத்தது மாதிரி இருந்தது. ‘ஐய.. கசக்குது..’ என்று நான் கண்ணாடி டம்ளரை கீழே வைத்தேன். ‘முதல்ல கசக்கத்தான் செய்யும்.. அப்புறம் சரியாயிடும்..  கையில இருக்கிற முறுக்க கடிச்சுக்க..’ என்றான். கடித்துக்கொண்டேன். உள்ளே எரியும் தீக்கு இந்த முறுக்கு ஒரு சோளப்பொறிமட்டுமே. ‘என்னப்பா கபகபன்னு வயிறு எரியுது..’ என்றேன். ‘கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும்.. இந்தா இந்த மிக்சரையும் சாப்பிடு..’ என்று எனக்குத்தந்தான்.  நான் கோட்டியை பார்த்தபடி சாப்பிடலானேன்.

என்றைக்கும் இல்லாத தனி ருசி இந்த அண்ணாச்சிக்கடை மிக்சருக்கு எப்படி வந்தது என்று கையில் உள்ள மிக்சரைப்பார்த்து யோசித்துகொண்டிருந்தவனை ‘மாப்ள அடுத்த ரவுண்டு போடட்டா…’ என்றான் கோட்டி. ‘போடு மாப்ள..’ என்று சொன்னேன். இப்போது என் குரல் கணீரென்று எனக்கு கேட்டது.  உடலில் புது உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பித்திருந்தது.  இம்முறை கோட்டியின் வற்புறுத்தல் இல்லாமலேயே கண்ணாடி டம்ளரை எடுத்து நிமிர்நது கோட்டியை இளக்காரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மடமடவென குடித்தேன். ‘யேய்.. பாத்துப்பா.. தலைக்கு ஏறிடப்போகுது’ என்றான் கோட்டி.  நான் குடித்து முடித்துவிட்டு கண்ணாடி டம்ளரை பட்டென வைக்கவும் அது உடைந்தது.  கோட்டி என்னை முறைப்பதை லட்சியம் செய்யாமல் மெதுவாக எழுந்தேன். நின்றேன். நாங்கள் குடிப்பதற்க்காக தேர்ந்தெடுத்த இந்த மலையுச்சியின் ஒரு புறத்தில் எங்களூரின் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் தெளிவாக(?)த்தெரிந்தன.  மலையின் மறுபுறத்தில் பாண்டிச்சேரி பைபாஸ் சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஊர்ந்து செல்வதும் தெரிந்தது. ‘மாப்ள உக்காருடா.. என்ன தலய சுத்துதா..’ என்றான் கோட்டி.  நான் அவன் பேசுவதை காதில் வாங்காமல் மெல்ல நடந்தேன். அருகில் உள்ள பெரிய பாறையின் அருகே சென்று அதில் நின்றபடியே சாய்ந்தேன். எனக்குப்பின்னால் வந்த கோட்டி அந்த பாறையில் ஏறி அமர்ந்தான்.  ‘என்னடா உன்னய கூட்டிக்கிட்டு வந்தது நானு.. எம்பேச்ச கேக்காம நீ பாட்டுகிட்டு போறீயே…’ என்றான் பாறையின் மேலிருந்து. இப்போது என்னுடைய உடலில் ஆயிரம் யானை பலம் வந்திருப்பது அவனுக்குத்தெரியாது. ‘டேய்.. கோட்டி.. டேய்.. உன்ன இப்ப இந்த பாறையோட கீழ தள்ளட்டுமா..’ என்றேன். அவனும் சிரித்துக்கொண்டே ‘எங்க தள்ளு பாக்கலாம்..’ என்றான்.  நான் என் இரு கைகளையும் பாறையின் மேல் வைத்து அழுத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு ‘ஆ’ என்று சப்தமிட்டபடி வேகமாக பாறையைத்தள்ளினேன். கை வலித்தது. கண் திறந்து பார்த்தேன். பாறை நகரவில்லை. கோட்டி சிரித்தான். ‘மாப்ள இதுக்குப்பெயர்தான் போத..’ ‘கவலப்படாத இன்னுமொரு கிளாஸ் உள்ளப்போனா உண்மையாகவே உனக்கு பலம் வந்து விடும்..’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மிச்சமிருந்த சரக்கை மிச்சமிருந்த ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

எனக்குள் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி. பாறையைச்சுற்றி ஓடி வந்தேன். என்னை தடுத்து நிறுத்தினான் கோட்டி. ‘யேய்.. நில்லுப்பா.. இந்தா இதயும் குடி..’ என்று டம்ளரை நீட்டினான். இம்முறை நின்று நிதானித்து குடித்தேன். என்னையறியமால் என் கால்கள் துள்ளின. ‘டேய் அடங்குடா.. புதுசா குடிக்கும்போது கவனமா இருக்கணும்.. நம்ம உடம்பு சரக்குக்கு செட் ஆகணும்..’ என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கயில் இருந்த கண்ணாடி டம்ளரை பாறையின் மேல் ஓங்கி அடித்தேன். கோட்டி பயந்துவிட்டான். ‘டேய்.. சின்னா வாடா போகலாம்..’ என்றான். ‘இரு போகலாம்.. இந்த மலையில இருக்கிற கல்லையெல்லாம் பொறுக்கி தூரப்போட்டுவிட்டு போயிடலாம்..’ என்று சொல்லிவிட்டு வானத்தை பார்த்தபடி சிரித்தேன்.  பகலிலேய நட்சத்திரங்கள் நன்றாகததெரிந்தன.

கோட்டி இம்முறை நிதானமாய் செயல்பட்டான். கையிலிருந்த வஸ்த்துக்களையெல்லாம் தூர வைத்துவிட்டு அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து நான் செய்வதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன். ‘மாப்ள.. உனக்கு மப்பு ஏறிடுச்சு..  வா சீக்கிரமா ஊருப்பக்கம் போயிரலாம்..’ என்றான். ‘ஊரா.. எந்த ஊரு..’ என்று சொல்லிக்கொண்டே நான் மலையின் மறுபுறம் விருவிருவெற இறங்கத்தொடங்கினேன். ‘டேய் மாப்ள நில்லுடா.. நான் சொல்லுறதக்கேளு.. வேகமா இறங்காதே..’ என்று என் பின்னால் கத்திக்கொண்டே கோட்டி ஓடி வந்துகொண்டிருந்தான். இறக்கத்தில் ஓரிடத்தில் நின்றேன். இப்போது கோட்டி என்னருகே வந்து ‘முட்டாப்பயலே இவ்வளவு வேகமாவா இறக்கத்துல இறங்கறது.. ஏண்டா இந்தப்பக்கம் இறங்கினே..’ என்று கேட்டான். அவன் கேட்டதற்க்கு நான் பதில் சொல்லாமல் ‘அங்கே பார்..’ என்றேன் தூரத்தில் பைபாஸ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தைக்காட்டி.  ‘அதுக்கென்ன இப்ப..’ என்றான் கோட்டி. ‘இப்ப பாரு..’ என்ற படியே கையில் அடங்குகிற மாதிரி ஒரு பெரிய கல்லை எடுத்துக்கொண்டு மிக வேகமாய் மீண்டும் மைலைச்சரிவில் இறங்க ஆரம்பித்தேன். ‘டேய்.. என்ன செய்யப்போறே..’ என்ற கோட்டியை திரும்பிப்பார்த்து விட்டு பைபாஸ் சாலையில் எனைநோக்கி வந்துகொண்டிருந்த அந்த வாகனத்தை நோக்கி கல்லை எறிந்தேன்.

—————————————————————————————————————————-

தினத்தந்தி செய்தி :  மணமை, சூன் 21 –  பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சாராயம் கடத்திக்கொண்டு வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று மணமை மலையை ஒட்டி அமைந்துள்ள பைபாஸ் சாலையில் நேற்று கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததால் சரக்குப்பொதியின் கட்டவிழ்ந்து  சாராயபாக்கெட்டுகள் சாலை முழுவதும் பரவிக்கிடந்தன.  தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று வாகனத்தை கைப்பற்றியதோடல்லாமல் அனைத்து சாராயபாக்கெட்டுகளையும் ரோட்டிலேயே பரப்பி ரோடு ரோலரின் மூலமாக நசுக்கி அழித்தனர்.

Published in: on ஜூலை 22, 2010 at 5:30 முப  Comments (2)  

மண்ணாம்பூச்சி…4

தண்ணீரில் விழுந்த வேகத்தில் நான் என் கண்களை திறந்து பார்த்தேன். எண்ணெய்யை கண்களில் விட்டுவிட்டு மூடி பின் கண்களை திறந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. என்னைச்சுற்றி கண்ணாடி கீற்றுக்கள் போன்ற ஏதோ ஒருவெளிச்சம் சூழ்ந்திருந்தது. நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்வதற்க்குள் என் கால்களை யாரோ இழுப்பது போன்ற ஒரு ஒரு உணர்வு. நான் இப்போது கிணற்றுவெள்ளத்தில் நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் எனக்குப்புரிந்தது. அது ஒரு சூன்யமான சூழல். என் மூக்கும் வாயும் காற்றை சுவாசிக்க பிராயத்தனப்பட்டு அதற்க்கு பதிலாக தண்ணீரை உள்வாங்கியது…என் மூக்கிலிருந்து உச்சந்தலைக்கு நூல் பிடித்தார்போல் ‘ங்’ ஒலியுடன் கூடிய ஒரு வலி கோடுகிழிக்க ஆரம்பித்தது. இதுவரை அமைதியாக இருந்த என்னுடல் இப்போது என்னைக்கேட்காமலேயே படபடவென வெள்ளத்தில் துள்ளியது. கைகால்களை கோபம் கொண்ட கயவன் போல இலக்கில்லாமல் வெள்ளத்தில் அடித்தேன். என்ன ஒரு ஆச்சர்யம்… இப்போது என்னுடல் வெள்ளத்தினுள்ளிருந்து மெல்ல மேலே எழும்புவதை உணர்ந்தேன். மீண்டும் கைகால்களை பலம்கொண்டு வெள்ளித்தை அடித்தேன். என்னுடல் முன்னைவிட் வேகமாக மேலேறியது. இப்போது என்தலை வெள்ளத்திற்கு வெளியே. என் வாய் மற்றும் மூக்கின் வழியாக புதிய காற்று உள்சென்றதை நான் உணர்ந்தேன்.உடல் மட்டும் வெள்ளத்தினுள் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. நண்பர்களின் வழக்கமான ‘ஹோ’ என்ற ஓசை என்காதுகளில் விழுந்தது. கண்களைத்திறந்து பார்த்தேன். தெளிவாகத்தெரிந்தது. என் கண்கள் பாதகன் மாயாண்டியைத்தேடியது. ஆனால் அவனை காணவில்லை. என்னால் வெள்ளத்தின் மேல் என்னுடலை நீண்டநேரம் நிலைப்படுத்த முடியவில்லை. கரையை அடையும் சூத்திரமும் எனக்குத்தெரியாது. ஆளில்லத்தீவின் நடுவே கைவிடப்பட்ட தனியாள்யோல வெள்ளத்தில் தத்தளித்தேன். என் கைகால்களோ எதையேனும் செய்தாவது என்னை வெள்ளத்தில் நிலைப்படுத்த முயன்றன. சிறிது நேரத்தில் என் கைகால்கள் சோர்ந்து தளர்ந்து நான் மீண்டும் மூழ்கத்துவங்கினேன். மூழ்கிக்கொண்டே கண்களைத்திறந்து பார்த்தேன் பச்சைகலந்த வெண்மைசிறம் என் கண்களுக்கு முன்னால்.  கைகால்கள் தளர்ந்து என்னால் மூச்சினை அடக்கமுடியாமல் மெதுவாக கிணற்றுவெள்ளத்தினை குடிக்க ஆரம்பித்தேன். ஒன்று.. இரண்டு.. மூன்று.. என் அம்மாவின் முகம் என் கண்களுக்குத்தெரிந்து மறைந்தது.  நான் கைகால்களை அசைக்காமல் மேலெழும்பும் முயற்ச்சியைக்கைவிட்டு வெள்ளத்தில் இட்ட கல்போல கிணற்றின் ஆழம்நோக்கி பயணித்தேன்.

2012:   ஆகஸ்ட் 6:   லண்டன் ஒலிம்பிக்ஸ்:

ஒலிம்பிக்ஸ் நீச்சல் குளத்தின் ஒன்பதாவது வரிசையின் கைப்பிடிச்சுவற்றைப்பிடித்து மேலேறினேன். கைத்தட்டல்கள் சத்தம் அரங்கத்தினை அதிரச்செய்ய என்னிருகைகளையிம் மேலே தூக்கி நான்குபுறமும் உள்ள மக்களுக்கு காண்பித்துவிட்டு என்னிருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னையே நான் நடந்து செல்வதையே பிரம்மாண்டமான திரை காண்பித்துக்கொண்டிருந்தது. நான் ஆரவாரமில்லாமல் சென்று என்னிருகைகையில் அமர்ந்து என்னுடலில் இருந்த நீரினை ஒரு துணியால் துடைத்துக்கொண்டிருக்கையில் என் பயிற்ச்சியாளர் ஓடிவந்து என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டார். என் சக நீச்சல் வீரர்களும் என்னருகே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்க ஒலிப்பெருக்கி உயிர்பெற்றது. முதல் இரு பதக்கங்களையும் அறிவித்தபின் ‘தி கோல்ட் மேடல் கோஸ் டு மிஸ்டர் முருகன் ப்ரம் இண்டியா..’என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து பதக்க மேடையை நோக்கி நடந்தேன். பச்சைநிற விரிப்பில் என் கால்கள் நடந்து கொண்டிருந்த போது எனக்கு அன்று என்னை காப்பாற்றிய மாயாண்டியின் முகம் நினைவுக்கு வந்தது… 

Published in: on மே 7, 2010 at 12:15 பிப  Comments (4)  

மண்ணாம்பூச்சி…3

சலனமில்லாத தண்ணீரின் நடுவே நான் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் கிணற்றின் ஒரு மூலையில் இருந்து ஒரு சத்தம். ‘டேய்.. யாரடா தேடுறீங்க..’ சத்தம் வந்த திசையில் பார்த்தேன். கூட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஆமையைப்போல கிணற்றின் ஒரு மூலையில் தண்ணீரை ஒட்டியிருந்த ஒரு படிக்கட்டின் அடியிலிருந்து மாயாண்டியின் தலைமட்டும் தெரிந்தது. எல்லோரும் ‘ஹோ’ வென கூச்சலிட்டார்கள். ‘டேய் பசங்களா நா தண்ணிக்குள்ள இருக்கிற சேத்துக்குள்ள தேங்காய சொருகி வச்சிட்டு வந்திருக்கேன்.. போய் கண்டுபிடிச்சு எடுத்துட்டுவாங்க..’ என்று சொன்னவன் சட்டென்று நீரில் இருந்து வெளியே வந்து தன்ககளால் கிணற்றின் படிக்கட்டு ஒன்றைப்பற்றி லகுவாக தன்உடலை பலூன்போல மேலே கொண்டுவந்து பட்டென கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்தான். மற்றவர்கள் அனைவரும் இப்போது தண்ணீரின் உள்ளே கிணற்றின் அடி நோக்கி ஒவ்வொருவராக மூழ்க துவங்கினார்கள். எனக்கும் அவர்களைப்போல் தண்ணீரில் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரமானது. இப்போது கிணற்றுக்குள் போனவர்கள் ஒவ்வொருவராக தண்ணீருக்கு வெளியே வர ஆரம்பித்தார்கள். எல்லோரும் வந்தபின் மாயாண்டி ‘தேங்கா அகப்பட்டுச்சா..’என்றான். அவர்களிடமிருந்து பதிலில்லாததால் ‘திரும்பவும் போய் தேடுங்க.. மண்ணாம்பூச்சின்னா சும்மாவா..’ என்றான். மீண்டும் தேடும் படலம் ஆரம்பமானது.  நான் தயக்கத்துடன் மாயாண்டியைப்பார்த்து ‘மாயாண்டி’ என்று விளித்தேன். அவன் கிணற்றுப்படிக்கட்டிலிருந்தபடியே மேலே இருந்த என்னைப்பார்த்து ‘என்ன’ என்றான். அவன் என்ன என்று கேட்டதில் இருந்த அலட்ச்சியத்தை நான் பொருட்படுத்தாமல் ‘மாயாண்டி.. எனக்கும் உங்களப்போல கிணத்துல இறங்கி விளையாடணம்னு ஆசயா இருக்கு.. அதனால..’ என்று இழுத்தேன். மாயண்டி சற்று உற்ச்சாகமானவனாய் ‘அப்படிப்போடு.. ம்.. ஆச வந்துடுச்சா.. ’ என்று கூறிக்கொண்டே படிக்கட்டைவிட்டு எழுந்து என்னைநோக்கி மேலேறிவந்தான்.

வந்தவன் என்னருகே அமர்ந்து ‘முருகா.. இப்பத்தான் நீ ஆம்பள.. ஆம்பளங்க பயப்படக்கூடாது.. இப்ப நீ எங்கள மாதிரி தண்ணியில விளயாடணும் நா முதல்ல நீ பயத்தவிட்டுடணும்.. இந்த கிணத்தின் ஆழம், பிறவு இதுக்குள்ள இருக்கிற பாம்பு(?),  தண்ணியில மூழ்கி செத்துடுவோம்ற பயம்.. இதயெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு தைரியமா.. தண்ணிக்குள்ள இறங்கு.. அப்புறமா நான் பாத்துக்கிறேன்’ என்றான். பயமில்லாதிருந்த எனக்கு இப்போது பயம்வந்தது. தண்ணிக்க்குள்ளாற பாம்பெல்லாம் இருக்குமா..’ என்று மாயாண்டியிடம் கேட்டேன்.  ‘அதெல்லாம் தண்ணிப்பாம்பு.. மனுஷனக்கண்டாலே ஓடி பொந்துலபோய் ஒளிஞ்சுக்கும்.. பாத்தியா நீ பயப்படுறே..’ என்றான் என் கண்களைப்பார்த்து.  ‘சே..சே.. அப்பெடியெல்லாம் ஒண்ணுமில்ல.. பாம்புன்னு சொன்னதினால கேட்டேன்..’ என்றேன் மனதுக்குள் உள்ள பயத்தினை வெளிக்காட்டாதவாறு.  அதற்க்குள் தேங்காய் தேடபோனவர்களில் மாரிமுத்து மட்டும் வெற்றியுடன் திரும்பினான்.  எல்லோரும் சந்தோஷத்தில் ‘ஹோ’ என்று சப்தமிட்டனர்.  மாயாண்டி கிணற்றுக்குள் இருந்த நண்பர்களைப்பார்த்து ‘யே.. பசங்களா.. நம்ம கூட விளயாட முருகனும் வரானாம்’ என்றான்.  அதற்க்கும் அவர்கள் ‘ஹோ’ வென சப்தமிட்டார்கள். மாயாண்டி என்னைப்பார்த்து ‘சொக்காய அவுத்து கரமேல வச்சுட்டு மெதுவாக படிக்கட்டில் இறங்கி தண்ணி தொடற கடைசிபடிக்கட்டுல வந்து நில்லு’ என்று கூறியபடியே மீண்டும் கிணற்றில் குதித்தான். நான் மெதுவாக எழுந்து நின்றேன். சொக்காயை கழற்றி சுருட்டி கிணற்றுக்கரையில் வைத்துவிட்டு  கிணற்றுக்குள் இறங்க ஆயத்தமானேன். முதல் இரண்டு படிக்கட்டுகளை கடக்கும் போது கலங்காத நான் மூன்று நான்கு என்று செல்லத்துவங்கியதும்  கிணறு என்னை விழுங்குவதைப்போல் உணர்ந்தேன். ‘பயப்படாம இறங்கி வா..’ என்றனர் நண்பர்கள்.  ஐந்து.. ஆறு… ஏழு… இப்போது நான் எட்டாவது படிக்கட்டில்.  அதற்க்குமேல் என்னால் முடியவில்லை.. என்னை யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்ற ஒரு உணர்வு.. மெல்ல படிக்கட்டில் அமர்ந்தேன்.. அவசரப்பட்டுவிட்டேன்.  இப்போது மாயாண்டி தண்ணீரில் தவழ்ந்து வந்து வெள்ளம் தொட்டுக்கொண்டுள்ள படிக்கட்டில் அமர்ந்தான். ‘பயப்படாமே இறங்கி வா.. இன்னும் நாலு படிக்கட்டுதான்’ என்றான்.  நான் இப்போது மேலே பார்த்தேன். கிணற்றினை வெட்டியெடுத்த  வட்டமாய் வானம் தெரிந்தது.  மேலிருந்த தென்னையின் உச்சியிலிருந்து ஒரு ஏதோ ஒரு பறவை என்னைப்பார்க்க பிடிக்காதவானாய் எனைப்பார்த்ததும் பறந்து சென்றது.  நான் இப்போது மிக்க பயத்துடன் ‘மாயாண்டி.. என்னால இறங்க முடியல..’ என்றேன்.   மாயாண்டி பதிலேதும் கூறாமல் படிக்கட்டிலிருந்து எழுந்து எனை நோக்கி மேலேறினான்.  இப்போது மாயாண்டி என்னருகில்.  ‘நான் சொல்றதக்கேளு..  அதப்பாரு நம்ம ஆளுங்கள.. முதல்ல உன்னவிட பயந்தவங்கதான்.. ஆனா இப்ப பாரு.. நா கிணத்துக்கு அடியில புதச்சிவச்ச தேங்காயவே கொண்டுவராங்கன்னா பாத்துக்கயேன்.. அதனால பயப்படாம இறங்கு..’ என்றான்.  நான் பிடிவாதமாக மறுத்தேன். ‘சரி வேணா விட்டுடறேன்.. இப்போ உன்னால மேலேறிப்போக முடியுமா..’ என்றான். நான் ‘முடியும்’ என்றேன். ‘சரி.. அப்ப மேலேறிப்போ..’ என்று சொன்னான். நான் மெல்ல படிக்கட்டினைப்பிடித்து என்னை நிலைப்படுத்திக்கொண்டு நின்றேன்.  மெதுவோக மேலேற முற்பட்ட போது என்னுடைய கால்கள் படபடவென ஆடின.  நான் மேலேறும் முயற்ச்சியைக்கைவிட்டு ‘மாயாண்டி என்னால மேல ஏற முடியல..’ என்றேன் சற்றே கெஞ்சும் தோரணையில்.  ‘சரி நான் ஏற்றிவிடுகிறேன்..’ என்றான் சிரித்த படியே. அவனுடைய சிரிப்பின் பொருள் விளங்குவதற்க்குள் மாயாண்டி என் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு கிணற்றின் பக்கவாட்டு சுவற்றினை தன்கால்களால் வேகமாக ஒரு உதைவிட்டுவிட்டு என்னுடன் கிணற்றுக்குள் பாய்ந்தான்…

இன்னும் வரும்…

Published in: on மே 5, 2010 at 11:45 முப  Comments (3)  

மண்ணாம்பூச்சி…2

தூரத்தில் மாயாண்டி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.  சீனுவும் மாரியும் மாயாண்டியைப்பார்த்ததும் அவனை நோக்கி ஓடினார்கள்.  நானும் என்னவென்று புரியாமல் அவர்கள் பின்னால் ஓடினேன்.  மாயாண்டி எங்களைப்பார்த்ததும் ‘என்னங்கடா இன்னிக்கு இவ்வளவு நேரம்.. நான்தான் நேத்தே சொன்னேன்ல.. சீக்கிரமா வந்துடணம்னு.. நேரமான வயக்காட்டுக்காரன் வந்து நம்மள விரட்டிடுவான்.. ’ என்று சொல்லிக்கொண்டே கிணறைநோக்கி நடந்தான். இப்போது கிணற்றின் அருகே நாங்கள் வந்திருந்தோம்.  கரையில்லாத கிணறு.. ஆங்காங்கே புல்மண்டிருந்தது.  மாயாண்டி எங்களை கிணற்றின் விளிம்பிலே அமரச்செய்துவிட்டு கிணற்றின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கினான்.   நான் கிணறை நோக்கினேன்.  கலைக்கப்டாத தண்ணீரில் மாயாண்டியின் பிம்பம் தண்ணீரில் இருந்து மெல்ல மேலேறிக்கொண்டிருந்தது. மாயாண்டி இப்போது தண்ணீரைத்தொடும் பட்டிகட்டில் மெல்ல அமர்ந்து தன் கைகளால் மெல்ல தண்ணீரைத்தொட்டான்.  ‘சில சமயம் மோட்டார் கரண்ட் தண்ணீல பாய்ஞ்சிருக்கும்.. முதல்ல அத செக் பண்ணிக்கணும்.. அப்புறமாத்தான் நம்ம விளயாட்டெல்லாம்’ என்று மாயாண்டி கிணற்றுக்குள்ளிருந்து எங்களைப்பார்த்து சொல்லிவிட்டு எங்களை படிக்கட்டின்  வழியாக இறங்குமாறு சகைசெய்தான்.  என்னைத்தவிர இப்போது எல்லோரும் கிணற்றினுள். ‘யாருப்பா அது கிணத்துமேல.. நீ விளயாட்டுக்கு வரலியா..’ என்றான் மாயாண்டி.

மயாண்டியை நான் இதற்க்கு முன் பார்த்ததில்லை.  அவன் வீரதீரபராக்கிரமங்களை சீனுவும் சங்கரும் பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். மாயாண்டி கிணற்றுக்குள் இறங்கிவிட்டானென்றால் கிணறே அவனுக்கு சொந்தமாகிவிடும் என்றும் எவ்வளவு ஆழமான கிணறு என்றாலும் மூச்சடக்கி உள்சென்று தரையைத்தொட்டுவிட்டுதான் தண்ணீருக்கு மேல் வருவானர்ம்.  இன்று அவன் செய்யப்போவதைக்காண தயாரானேன்.   ‘யேய்.. உன்னத்தாம்பா.. உள்ளார வரலியா’ என்றான் மாயாண்டி. ‘அப்பு அவனுக்கு நீச்சல் தெரியாது..’ என்றான் சீனி.  ‘நீச்சல் தெரியாதா?.. இத பாருப்பா.. இந்த மாயாண்டி இருக்கிற கூட்டத்தில ஒருத்தனுக்கு நீச்சல் தெரியலனா.. அது இந்த மாயண்டிக்கு அசிங்கம்.. பயப்படாம இறங்கிவா.. நா உனக்கு நீச்சல் சொல்லித்தரேன்..’ என்றான். ‘ஐயோ.. வேணாம்பா.. நான் இங்கயே இருந்துக்கிறேன்’ என்றேன். ‘நான்தான் இருக்கேன்ல.. பயப்படாம இறங்கி வா..’ என்றான் மீண்டும் சத்தமாக. நான் பிடிவாதமாக மறுத்தேன் ‘இல்ல நா இங்கயே இருந்து உங்கள வேடிக்கை பாக்கறேன்’ என்றேன்.  சீனு மாயாண்டியிடம் ‘விடுப்பா.. நேரமாகுது.. நம்ம விளயாட்ட ஆரம்பிப்போம்’ என்றான். 

இப்போது கிணறு சலசலத்தது.  சீனுவும் சகாக்களும் இப்போது தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தார்கள்.  மாயாண்டி இப்போது மேலே ஏறிக்கொண்டிருந்தான். நண்பர்கள் தண்ணீரில் மிதப்பது எனக்கு குஷியை ஏற்படுத்தியது. மாயாண்டி இப்போது வெளியில். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கிணறை ஒட்டிய ஒரு தென்னைமரத்தில் விறுவிறுவென்று ஏறினான். மரத்தின் உச்சியை அடைந்ததும் தன் ஒருகையால் மரத்தினை பற்றியபடி மற்றொருகையால் சிறிய கைக்கு அடக்கமான பிஞ்சு தேங்காயை பறித்தான். இது போன்ற செயலை என்னால் செய்யமுடியுமா என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நான் மாயாண்டியையே பார்த்துக்கொண்டிருந்தேன். மாயாண்டி இலகுவாக ஒரு தென்னைமட்டையின் மீது ஏறி அமர்ந்து தன் இரு கைகளுக்கிடையில் பறித்த தென்னங்காயை வைத்துக்கொண்டு கால்கள் இரண்டையும மரத்தின் மீது அழுத்தியபடி மேலிருந்து கிணற்றை நோட்டமிட்டான். அவனைப்பார்த்து ‘ஹோ’ என கூச்சலிட்டார்கள் தண்ணீரில் இருந்த நண்பர்கள். நான் இப்போது உற்ச்சாகமானேன். திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மாயாண்டி தென்னைமர உச்சியிலிருந்து வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல கிணற்றின் நடுவே பாய்ந்தான். 

தொபுகடீரென்ற சத்தம். கிணற்றின் வெள்ளம் எல்லா திக்கிலும் பாய்ந்து கரையில் அலையடித்தது. மாயாண்டி குதித்த இடத்தில் மட்டும் இப்போது  தண்ணீர் குமிழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. நண்பர்கள் ஆளுக்கொரு திக்காய் கிணற்றின் வெள்ளத்தில் தடுமாறியபடி கிணற்றின் பாசிபடர்ந்த உட்புற சுவற்றின் செங்கற்களைப்டித்துக்கொண்டு வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார்கள். நான் மாயாண்டி குதித்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் கடந்துகொண்டிருந்தது. வெள்ளத்தின் தளும்பலும் அடங்கிக்கொண்டிருந்தது. இப்போது நண்பர்களும் கலவரமாய் தண்ணீரின் பரப்பிலே தம் கண்களை அலையவிட்டார்கள். ஆனால் மயாண்டி…

இன்னும் வரும்…

Published in: on ஏப்ரல் 29, 2010 at 10:12 முப  Comments (3)  

மண்ணாம்பூச்சி…

‘டேய்.. முருகா.. வெளியில வாடா’ என்ற குரல் கேட்டு வெளியே ஓடிவந்தேன்.  ‘என்னடா காலையிலே வந்துட்ட.. எங்க அம்மா பாத்தாங்கன்னா அவ்வளவுதான்.. நீ சீக்கிரமா இங்கியிருந்து போயிடு.. நா கொஞ்சம் நேரங்கழிச்சி வரேன்..’ என்றேன்.  ‘என்னடா.. சங்கர் வீட்டுக்கு போனாலும் அதான் சொல்றான்..  உங்க வீட்டுக்கு வந்தா நீயும் அதயே சொல்ற.. நீங்க வந்தா வாங்க.. இல்லனா நா மாரிமுத்துவ கூட்டிகிட்டு கிளம்பறேன் என்றான். ‘கோவிச்சுக்காதடா.. உங்க வீட்டில நீ ஒத்த ஆளு.. இங்க அப்படியா.. எங்க அண்ணன் ஒருத்தன் போதும்.. என்ன போட்டுக்கொடுக்க.. நீ கிளம்பு.. நா பின்னாடியே வறேன்..’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினேன். அம்மா வீட்டின் பின்புறம் உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருந்தாள்.நான் ஒடிப்போய் அம்மாவை பின்புறமாக கட்டிபிடித்து ‘அம்மா.. ’ என்றேன்.  ‘என்ன தொரைக்கு இன்னிக்கு பாசமெல்லாம் பொங்குது’ என்று கேட்டாள். ‘சீனிவாசன் என்னய விளையாட கூப்பிட்டான்.. அதான்.. அம்மா நா போய் விளயாடிட்டு சீக்கிரமா வந்துடறேன்மா..’ என்றேன் அவளை கெஞ்சும் தோரணையில். ‘ஆமா.. நேத்துக்கூட நீ சீக்கரமா வந்துடறேன்னு சொல்லிட்டு போய் சீக்கிரமாவா வந்தே?  உங்கப்பனுக்கு யார் பதில் சொல்றது.. அதனால அடங்கி வீட்டுலேயே உக்காரு’ என்றாள்.  ‘அம்மா…’ என்றேன் சற்று  குரலுடைந்து அழும் தொனியில். ‘சரி.. சரி.. நேரத்துக்கு சீக்கிரமாவே வந்துடணும் என்ன…’ என்று அவள் சொல்லி முடிப்பதற்க்குள் வீட்டைவிட்டு பறந்தேன்.

ஏரிக்கரையின் முகட்டில் ஒற்றைப்பனைமரத்தடியில் சீனிவாசனும் மாரிமுத்துவும் வீற்றிருந்தனர்.  என்னைப்பார்தததும் உற்சாகம் கொண்டு ஓ என்று ஊளையிட்டனர்.  நான் மூச்சிரைக்க அவர்கள் முன்னால் நின்று ‘இன்னிக்கு எங்க போறோம்’ என்றேன்.  ‘இன்னிக்கு பட்டினத்தார் கிணத்துக்குப்போய் மண்ணாம்பூச்சி விளையாடலாம்’ என்றான் மாரி. ‘மண்ணாம்பூச்சியா..’ என்றேன் நான். ‘ஆமா.. காய்ஞ்ச தேங்காக்கூட்ட எடுத்துகிட்டு அப்படியே கிணத்துல குதிச்சி உள்ளார இருக்கிற சேத்து மண்ணுல  புதச்சிவச்சிட்டுணம். பிறவு  அத யார் கண்டுபிடிக்கிறான்றதுதான் விளயாட்டு.. என்று மாரிமுத்துக்கூற நான் மிரண்டேன்.  ‘கிணறா.. ஐயோ நான் வரலப்பா..’ என்றேன்.  ‘ஏன்’ என்றான் மாரிமுத்து.  ‘எனக்கு நீச்சல் தெரியாது..’ என்று நான் கூறவும் சீனிவாசனும் மாரியும் கொல்லென சிரித்தார்கள். ‘ஏன்டா நாங்க இருக்கும்போது உனக்கு நீச்சல் தெரியாதுன்னு சொல்றது எங்களுக்கு அசிங்கம்.. அதனால பயப்படாம எங்க கூட வா.. அங்கே நம்ம மாயாண்டியும் அவன் தம்பியும் நமக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.. என்று சொல்லியபடி வேகமாக பட்டினத்தார் கிணற்றை நோக்கி நடந்தான் மாரி.  நானும் சீனுவும் அவன் பின்னால் நடக்கத்துவங்கினோம்.

ஏரிக்கரையின் பக்கவாட்டு பனைமரங்களின் நிழல்கள் எங்களை தாண்டித்தாண்டி சென்று கொண்டிருந்தன. நான் பனைமரங்களைப்பார்த்தேன். சென்ற முறை பனைமரங்களில் இருந்து பனம்பழங்களை பறித்து அருகில் உள்ள காய்ந்த புதர்களின் செருகளில் தீயிட்டு அதில் பறித்த பனம்பழங்களை   நன்றாக வெடிக்கும்வரை கருகவைத்து பின்  காய்ந்த பனைமட்டையால் அவைகளை தட்டி வெளியிலெடுத்து  சூடு ஆறியும் ஆறாமலும் இருக்கும் பதத்தில்  ஏரிக்கரையின் பக்கவாட்டு  மடுக்கரையில் அமர்ந்து ருசித்திருக்கிறோம்.  ஆனால் இது என்ன? மண்ணாம்பூச்சி..  பட்டிணத்தார் கிணறு என்று வேறு சொல்கிறார்கள்.  எனக்குள் ஒரு இனம் புரியாத பயம்.  முன்னொரு முறை பட்டினத்தார் கிணற்றை பார்த்திருக்கிறேன்.   அகலமான பெரிய வட்ட வடிவக்கிணறு அல்லது வட்டவடிமான குளம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ஒரு முறை பட்டினத்தார் தோட்டத்தில் தேங்காய் பறித்த(?) போது பார்த்ததாக நினைவு. அன்று நான் பார்த்தது அடர்ந்த மரங்களின் நிழல் தண்ணீரில் விழுந்த மாலைப்பொழுது. நான் பார்தததால் கிணறு உள்ளே  இருளடைந்து   என்னை பயமுறுத்தியிருந்தது. மீண்டும் அந்த கிணற்றுக்கா என்று என் மனம் நினைத்தாலும்  சுயகௌரவத்தின் காரணமாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் நான் அவர்களை பின்தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன்.

 

இன்னும் வரும்…

 

 

Published in: on ஏப்ரல் 26, 2010 at 12:56 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

பாவம்…

 ஊதுகுழல் எடுத்து அடுப்பை ஊதிக்கொண்டிருந்தேன்.. வெளியே கணவனின் குரல். ‘நல்லதே நடக்கும்..’ என யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இது போன்ற கீதாஉபதேசங்களைக் கேட்டுக்கேட்டு என் காது புளித்துப்போயிருந்தது. மனுஷனை கட்டிக்கிட்டு பத்து வருஷம் முடியப்போகிறது.  நிரந்தர வருமானமில்லை.  நல்லவன், பண்பானவன் என்று என்னை கட்டிக்கொடுத்தார்கள்.  உண்மையிலேயே நல்ல உள்ளம் படைத்தவர்தான். இரக்க மனசு. ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒடி ஓடி உதவிசெய்வார். பல முறை அவரை நான் கட்டுப்படுத்த முயன்று தோற்றிருக்கிறேன். 

‘அப்பப்பபா..இன்னிக்கு கடுமையான  வெயில் தெரியுமா.. செண்பகம்… கொஞ்சம் குளிச்சியா குடிக்க தண்ணி கொண்டுவா’ என்று உள்ளே வந்தார்.  நான் மண்பானையில் உள்ள தண்ணீரை  அகன்ற செம்பினால் மோர்ந்து ‘இந்தாங்க’ என்று தந்துவிட்டு ‘வெளியிலே யார் கொரலோ கேட்டுச்சே..’ என்றேன். ‘நம்ம மாடசாமிதான்.. அவன்கிட்ட ஒரு விஷயத்தைப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன்..’ என்றார் விசிறியை எடுத்து வீசியபடி.  நான் பக்கத்தில் அமர்ந்து ‘என்ன அப்படிப்பட்ட விஷயம்..’ என்றேன்.  ‘உனக்குத்தெரியுமா.. அதாம்புள்ள நம்ம முனியன் அவ பெண்டாட்டியையும்  அவன் பசங்களையிம் தவிக்க விட்டுட்டு எவளயோ இழுத்துகிட்டுப்போய்ட்டான்ற சங்கதி… நமக்கு தெரிஞ்சதுதானே… பாவம் அந்த குடும்பம்… ரொம்ப கஷ்டப்படுது.. அதுவும் அந்த கொழந்தகளப்பாக்கும்போது ரொம் கஷ்டமா இருக்குது.  அந்த பிஞ்சு பசங்களை படிக்கவேண்டிய வயசில உப்பளத்துக்கு வேலைக்கு அனுப்பியிருக்குது முனியன் பெண்சாதி . நாங்க உப்பகழியில  வேலைசெய்யும் போது பாத்தேன் ரெண்டு ஆம்பிள பசங்கங்களும் உப்பு அள்ளுதுங்க..  அதுங்க அந்த வெயில்ல கஷ்டப்படறத பாக்கும்போது ரொம்ப பாவமா இருந்திச்சு. மதியம் சாப்பிடும்போது   நான் அந்த பசங்களை கூப்பிட்டு ஒக்காரவச்சி நம்ம சாப்பாட்ட கொடுத்தேன் பெரியவன் சாப்பிடமாட்டேன்னு சொல்லிட்டான்.  சின்னவன் மட்டும் சாப்பிட்டான்.  எனக்கு மனசு கேக்கல பெரியவன  சாப்பாடு பிடிக்கலனாக்கூட பரவாயில்ல ஒரு டீ வாங்கித்தரேன் சாப்பிடுன்னேன். அவன் பிடிவாதமா வேண்டாம்னு சொல்லிட்டான்.. என்னத்த சொல்ல.. கடவுள் மனுஷனுங்கள கஷ்டப்படுத்தறத நினைக்கும்போது.. ஹம்..’ என்று சொல்லி முடிக்கும்போது வெளியில் ஒரு சத்தம்.

யாருயா வீட்டுல.. வெளியே வாயா.. என்று சத்தம்.  நானும் அவரும் வெளியே வந்தோம். ‘நீ யாருயா எம்புள்ளைகளுக்கு சோறுகொடுக்க.. நாங்க என்ன அன்னக்காவடியா.. என்னையும் எம் புருஷன்மாதிரி நினைச்சுட்டையா.. நா மானமுள்ளவ தெரிஞ்சுக்கோ…’ என பேசிக்கொண்டே போனாள் முனியனின் பெண்சாதி.

 

Published in: on ஏப்ரல் 20, 2010 at 1:17 பிப  Comments (4)  

காதல் வந்தால் சொல்லியனுப்பு…

‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்ற நல்ல தமிழ் ஓசையோடு இரண்டு மஞ்சள் நிறப்பூக்கள் என் முன்னால்.  நான் நிமிர்நதேன். என் முன்னே சுமார் இருபத்தைந்து முதல் முப்பது வயது வரை மதிக்கத்தக்க ஒரு வாலிபன்.  சினிமா நடிகனைப்போன்ற நல்ல தோற்றம்.  நல்ல உடையமைப்பு. கையில் ஒரு மடிக்கணினி  மற்றும்  உணவு வைக்கும் பைகள் . முகத்தில் பயம்கலந்த புன்னகை.  அசையாமல் என் முன்னே நின்றுகொண்டிருந்தான். நான் சற்று பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தேன். கடற்கரையின் காலைநேர இரயில் என்பதால் நான் இருந்த இரயில் பெட்டியில் எங்களிருவரைத்தவிர யாரும் இல்லை. நான் சேர வேண்டிய டைடல் பார்க் நிலையம் வருவதற்க்கு இன்னும் அரைமணிநேரமிருந்ததது.  நான் எனக்குள் தைரிய உணர்வை வரவழைத்துக்கொண்டு நேராக அவன் கண்களைப்பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைகளில்  இருந்த சற்றே வாடிய  மஞ்சள் மலர்களை என் முன்னால் நீட்டிக்கொண்டிருந்தான்.  நான் மெதுவாக என் கை அவன் மேல் படாமல் அந்த மலர்களை  என்கைகளால் வாங்கிக்கொண்டு அவனை என்முன்னே அமரும்படி கூறினேன். அமர்ந்தான்.

‘நீங்கள் யார்’ என்றேன்.  ‘நானும் உங்களைபோன்று  ஒரு ஐடி தொழிளாளி.. தினமும் இந்த வண்டியில் பயணிப்பவன்.. நீங்களும் இந்த வண்டியில் தினமும் பயணம் செய்கிறவர் என்பது எனக்கு தெரியும்.. நான் தினமும் உங்களை இந்த கடற்க்கரை நிலையத்தில் பார்ப்பதுண்டு..’ என கூறி என்னை நோக்கினான். ‘அதனால்.. முன்பின் தெரியாத என்னை, என்னுடைய பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்ளாமல்,   நான் மணமானவளா இல்லையா என்பதைப்பற்றிக்கூட தெரிந்துகொள்ளாமல் உங்களுடைய காதலை இப்படித்தான் நாகரீகமில்லாமல் வெளிப்படுத்துவீர்களா..’ என்றேன். ‘காதலிக்க எந்த ஒரு பின்னணியும், முன்னணியும்  தேவையில்லை..  முக்கியமாக வயது ஒரு பொருட்டே அல்ல..’ என்றான்.  நான் மெல்ல என் கோபத்தினை கட்டுப்படுத்திக்கொண்டு ‘நீங்கள் பார்ப்பதற்க்கு நல்ல குணவானாகத்தெரிகிறீர்கள் மற்றும் நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தில் பணியாற்றும் நல்ல ஊழியர் என்றும் நினைக்கிறேன்.. உங்களுடைய இந்த சிறுமையான எண்ணம் இந்த சிறிய வயதில் அதுவும் என்போன்றவர்களிடம்… நிச்சயமாக வரக்கூடாத ஒன்று..’ என்றேன்.  அவன் மௌனமானான். பின் ‘ஹம்.. என்று பெருமூச்சு விட்டபடி… ‘முடிவாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்றான் சற்றே மிரட்டும் தொனியில்.  நான் விருடென்று எழுந்து ‘முட்டாளே… நான் திருமணமாணவள்..  இது என் கணவருக்குத்தெரிந்தால் நீ இப்போது என் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டாய்’ என்றேன் கோபமாக.

அவன் மெதுவாக எழுந்து நின்றான். ‘இவ்வளவு நேரமாக நீங்கள் எனக்கு அறிவுரைத்ததை, விளக்கியதை  சற்று உங்கள் கணவருக்கு போதியுங்கள். ஏனென்றால் நேற்று என் மனைவிக்கு அவர் தந்த மலர்களைத்தான் நான் இப்போது உங்களுக்கு தந்திருக்கிறேன்.  அதுதான் உங்கள் கைகளில் உள்ளது ..’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.

Published in: on ஏப்ரல் 15, 2010 at 1:11 பிப  Comments (9)  

இசைக்கலைஞன் என்ஆசைகளாயிரம்… 3

கதவைத்திறந்தான். ‘வா மாப்ள.. உள்ளே வா’ என்றான். வந்த மாப்பிள்ளையின் வயதோ ஒரு ஐம்பது இருக்கும். நீளமான தாடி. நெற்றியில் வட்டப்பொட்டு. கதர்ஜிப்பா.. வெள்ளை வேட்டி என சங்கீதத்துக்குரிய நல்ல தோற்றம். வித்வான் போலிருந்தார். ‘என்னப்பா திடீர்ன்னு என்னை வரசொன்னே’ என்றபடியே உள்ளே வந்தவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். உக்காருங்கோ என்று சொன்ன என் நண்பன் என்னை அறிமுகப்படுத்தினான். ‘நான் சொன்னேனில்லியோ.. சார்..  என் ப்ரண்டுதான்.. நம்மஊர்காரரு.  இவருக்குத்தான் நான் சொல்லியிருந்தேன். இப்ப நேரா நீங்களே பேசிக்கிங்க’ என்றபடி எழுந்து ‘நா கொஞ்சம் வெளியில போய்ட்டு வர்ரேன்’ என்று எழுந்து வெளியேச்சென்றான். எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது எனக்கு கிடார் சொல்லிக்கொடுக்கப்போகும் ஆசான் இந்த மாப்ளதான் என்று. அவர் மெதுவாக என்பக்கம் திரும்பி ‘எப்பத்திலிருந்து இந்த ஆசை உங்களுக்கு வந்தது..’என பழைய பல்லவியை ஆரம்பித்தார்.

நானும் மிகப்பொறுமையாக என்கதையனைத்தையும் அவரிடம் கூறினேன். பின்பு சிறிது நேர அமைதிக்குப்பின் அவர் ‘சரி.. கிடார் கத்துக்கறத்துக்கு முன்னாலே நாம நம்ம தயார்படுத்திக்கணும்’ என்றார் ஏதோ நான் 100மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடப்போவதுபோல. ‘கிடார் வாசிக்கறத்துக்கு நல்ல விரல்அம்சம்(?) இருக்கணும்.. எங்க உங்க கை விரல்களை காமிங்க’ என்றார்.  நானும் பொறுமையோடு இரண்டு கைகளையும் அவர் முன்னால் நீட்டினேன்.  என் இரு கைகளையும் திருப்பி திருப்பி பார்த்துவிட்டு  ‘ம் அம்சமான விரல்கள்.. கிடார்ல பூந்து(?) விளையாடலாம் போங்கள்’ என எனை பார்த்து புன்னகைத்தார். ‘சரி உங்களுக்கு ஏற்கனவே கிடார் வாசிக்கத்தெரியுமா..’என்றார். ‘தெரியாது’ என்றேன்.  ‘கிடாரை தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா.. அதன் கம்பிகளை மீட்டியிருக்கிறீர்களா.. என்றார் தொடர்ந்து.  எனக்கு மெல்ல கோபம் வந்தது. ‘இல்லை’ என்றேன் சற்றே வேகத்தோடு. ‘சரி கிடார்தான் கத்துக்குவேன்னு சொல்றீங்களே.. நீங்க ஏன் வயலின் வாசிக்க ஆசைப்படவில்லை’ என்றார். எனக்கு சூடு ஏறியது.  இந்தப்பாவி வேறு வெளியில் சென்றுவிட்டான்.  நான் மெதுவாக என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ‘எனக்கு கிடார்தான் பிடிக்கும்…’ அதிலிருந்துதான் நல்லா டொய்ங்குன்னு சத்தம் வற்ரது’ என்றேன்.  என் கண்கள் அறையின் எல்லாமூலையையும் நோட்டமிட்டது. இதற்க்கு மேல் என்னை அவன் ஏதாவது குந்தகமாக கேட்டால் ஏதாவது ஒரு பொருளைவைத்து அவனை ஒரே போடாக போட்டுவிடலாம் என்று நினைத்தேன். ‘மிஸ்டர் உங்களைத்தான்.. உங்களுக்கு எந்த அளவுக்கு இசை அறிவு இருக்குன்னு இப்ப ஒரு டெஸ்ட்..  இசையோட பிதாமகன் யாரு? என்று கேட்கத்துவங்கிய உடனே நான் உண்மையான பிதாமகனாக விக்ரம்போல உக்கிரத்துடன் எழுந்தேன். நான் எழுவதை அவன் எதிர்பார்த்தவன் போல அவனும் எழுந்தான். கையில் அகப்பட்ட ஒரு நாற்காலியை எடுக்க நான் எத்தனித்தபோது கதவு வேகமாக திறந்தது.   

எனக்கு ஒன்றும் புரியவில்லை.  கதவை திறந்தவள் என் மனைவி.  அவள் கையில் என் மூன்றுவயது மகள்.  அவளுக்குப்பின்னால் என் நண்பன் யாரையோ வேகமாக விளித்துக்கொண்டிருந்தான். வித்வான் என்னெதிரே அமைதியாக புன்னகைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.  இப்போது நான் அமைதியானேன். எந்த இருக்கையை எடுத்து அவரை அடிக்க நினைத்தேனோ அந்த இருக்கையிலேயே நான் உட்கார்ந்தேன். என் மனைவி கண்ணீரோடு என்னருகே வந்தாள். உள்ளே நுழைந்த என் நண்பன் வித்வானைப்பார்த்து ‘என்ன டாக்டர் ஆச்சு.. நா வர்றத்துக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுச்சா’ என்றான். ‘ச்சேச்சே  அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கல தாஸ்.. சும்மா பேச்சு கொடுத்துப்பாத்தேன்.. அவ்வளவுதான்..’ என்றார்.  இந்த ஆள் டாக்டரா.. அப்படியென்றால் நான் நினைத்ததுபோல் இவர் கிடார் வித்வான் இல்லயா?.. என் மனைவி இங்கே எப்படி வந்தாள்?.. என் நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே என் மனைவி பேசத்துவங்கினாள். ‘நல்ல உதவி செஞ்சீங்க தாஸ் அண்ணா.. நீங்க காலையிலேய போன் செய்யலைன்னா நா இங்க உடனே வந்திருக்க முடியாது.. ஹம்…யாரோ ஒரு குடுகுடுப்பைக்காரன் இவர் கடயில இருக்கும்போ வந்து ஏதோ காசுகேட்டிருப்பான் போல.. அதுக்கு இவர் காசு இல்லேன்னு சொல்லாம அவன் குடுகுடுப்பையை பிடிங்கி வச்சுகிகிட்டாரு. அன்னையிலிருந்து எந்த மியூசிக் இன்ஸ்ட்ருமன்டைப்பார்த்தாலும் நான் அத கத்துக்கறேன் பேர்வழின்னு கிளம்பிடறார்.  அன்னைக்கு அப்படித்தான் கோவில் திருவிழாவில் எவனோ ஒருத்தன் கிடார்வாசிக்கப்போக அதபாத்துட்டு கிடார் கத்துக்கறேன்னு உங்களைப்பாக்கப்போறேன்னு கிளம்பி  வந்துட்டாரு.  நல்லவேளை என்கிட்ட உங்களபாக்க போறேன்னு சொன்னதுநால நான் உங்களுக்கு முன்னாலேயே போன்ல சொல்லிட்டேன். நீங்களும் நல்லவேளையா நா வர்றத்துக்குள்ள ஒரு டாக்டரையும் ஏற்பாடு பண்ணிட்டு ஹாஸ்பிடல் அட்மிஷனும் வாங்கிட்டீங்க.. இந்த நன்றிய நா மறக்கமாட்டேன்..’ என நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனாள்.  வெளியில் ஏதோ வண்டிவந்து நிற்க்கும் சத்தம் கேட்டது.  எட்டி ஜன்னல் வழியாகப்பார்த்தேன்.  நீளமான ஒரு வெள்ளைநிற ஹாஸ்பிட்டல் வேன். எனக்காகத்தான் போல…

 

பின் குறிப்பு    :      காலையிலேயே ஒருவர் தண்ணியடிக்க பல காரணங்கள் உண்டு.

Published in: on ஏப்ரல் 9, 2010 at 12:47 பிப  Comments (2)  

இசைக்கலைஞன் என் ஆசைகளாயிரம்… 2

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். பாட்டிலைத்திறந்து ஒரு உயரிய கண்ணாடி கோப்பையில் மதுவை ஊற்றினான்.  பிறகு அதனுடன் சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்றை ஊற்றிக்கலந்துகொண்டு என்முன்னே அமர்ந்து ‘ம் விஷயத்துக்கு வா’ என்றான்.   நான் மெதுவாக ‘ கிடார் கத்துக்கணும்.. அதான் உன்னப்பாத்துட்டு போலாம்ன்னு…’ என்று இழுத்தேன்.  நான் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு பதில் ஏதும் கூறாமல் ஒரு நீளமான சிகரெட்டை பற்றவைத்தான்.  பின்னர் மெதுவாக ‘இப்ப ஊர்ல நீ என்ன செய்யறே..’ என்றான் சம்மந்தமில்லாமல்.  உனக்கு வேலை வெட்டி இருக்கா என்பதன் சுருக்கம்தான் அது என புரிந்து கொண்டு ‘என்னப்பா இப்படி கேட்டுட்ட.. உனக்குத்தான் தெரியுமே.. நா படிச்சு முடிச்சுட்டு எங்கப்பாவுக்கு உதவியா பெரிய டிபார்மெண்டல் ஸ்டோர்ல உதவியா இருக்கேன்னு.. போன முற கூட நீ நம்மூருக்கு வந்தப்ப எங்க கடைக்கு வந்தயேப்பா..’ என்றேன். ‘அது உங்க சொந்த கடையா.. பரவாயில்லயே பெரிய ஷாப்பிங் மால் போல இருக்குதே..’ என்றான் இன்னும் என்னுடைய பணபலம் தெரியாமல். ‘காசப்பத்தி நீ கவலப்படாதே.. நா எப்படியாவது கிடார் கத்துக்கிடணும்.. அவ்வளவுதான்..’ என்றேன்.  அவன் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘கத்துக்கலாம்’ என்றான் பன்மையில்.  அவனுடைய பதில் எனக்கு எந்த விதமான தெளிவையும் தரவில்லை என்றாலும்  சாங்கியத்துக்காக புன்னகைத்துவைத்தேன்.

அவன் மெல்ல எழுந்து நடந்து பக்கத்தில் உள்ள அறையின் கதவைத்திறந்து ‘இங்கே வா என்று என்னை அழைத்தான்.  நான் மெல்ல எழுந்து அந்த அறைக்குச்சென்றேன். உள்ளே பார்த்ததும் நான் ஆச்சர்யபப்பட்டேன். வெளியில் குப்பை மேடாக காட்சியளித்த அந்த அறை உள்ளே மிக சுத்தமாக கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  ‘இதுதான் என்னுடைய மினி ரெக்கார்டிங் தியேட்டர்..’ இந்த ரூமில் இன்ஸ்ட்ருமண்ட்ஸ்ம் அந்த பக்கம் வாய்ஸ் ரெக்காட்டிங்கும்.. ’ என்று சொல்லிவிட்டு ‘எப்படி இருக்கு’ என்றான்.  ‘நல்லாயிருக்கு.. ஆனா வெளியிலதான்..’ என நான் சொல்லிமுடிப்பதற்க்குள் ‘ஏன் ஒரே குப்பையா இருக்குன்னுதானே  கேக்கப்போறே.. சொல்றேன்.. 2வாரமா நான் ஊர்ல இல்ல.. இங்க ரெக்காடிங்க்கு வந்த என் சகாக்கள் செய்ததுதான் இதெல்லாம்.. இன்னும்  கொஞ்ச நேரம் கழிச்சுப்பாரு..’  என்று சொல்லி விட்டு ‘வா டிபன் சாப்பிடிட்டு வந்துடலாம்’ என்றான்.  நான் சொல்ல வந்ததை அவன் சொல்லிவிட்டபடியாலும் என் காலை உணவு வெறும் ஆப்பிள் மட்டும்தானா என் வயிறு கேட்டபடியாலும் நான் சந்தோஷமாக அவனுடன் புறப்பட்டேன். கதவைப்பூட்டாமல் தாளிட்டுவிட்டு அவன் நடந்தான்.  நான் அவன் பின்னால் நடந்தேன்.  முடிவில் பக்கத்து சாலை ஆரியபவனில் எங்களின் காலை உணவு முடிந்தது.  பில்லை அவன் கொடுக்க எத்தனிக்க நான் மறித்து என் பர்ஸில் இருந்த சில ஐநூறு ரூபாய் நோட்டுகளில் இருந்து ஒன்றை உருவி கல்லாவில் இருந்தவரிடம் நீட்டினேன்.   என்னுடைய செழிப்பை அவன் புரிந்துகொண்டான்.

நாங்கள் திரும்பும்போது கதவு திறந்திருந்தது.  உள்ளே நுழைந்தததும் எனக்கே ஆச்சர்யம். அறை இப்போது மிக சுத்தமாக இருந்தது. எப்படி என நினைக்கின்ற வேளையில்  பக்கத்து அறையிலிருந்து ஒருவன் வெளியில் வந்து ‘சார் எல்லாம் முடிஞ்சது’.. என்று ஒரு பேப்பரை அவன் முன்னால் நீட்டினான். நான அனுப்பிடறேன் போ என சொல்லிவிட்டு பையன் போனதும் கதவை அடைத்தான். ரூமின் ஏசியைத்தட்டிவிட்டு என் முன்னே வந்து அமர்ந்து ‘திடீர்ன்னு என்னப்பா உனக்கு கிடார் கத்துக்கணம்ன்னு’ என்றான். ‘எல்லாம் ஒரு ஆர்வம்தான்’ என்றேன்.  ‘சரி.. இப்ப நா சொல்றத கவனமாக்கேளு..  உனக்குன்னு சொந்த பிசினஸ் இருக்கு.. அதுவும் வியாபாரம் வேற.. அதனால இப்ப இருக்கிற ஆர்வக்கோளாருல கிடார் கத்துக்கறேன்னு சொல்லிட்டு பின்னால ஒரு மூணுகிளாஸ் முடிஞ்சபிறது இது நமக்கு சரிபடாதுன்னு ஓடிடக்கூடாது’  அதுவுமில்லாம இத கத்துகிட்டு நீ என்னப்பண்ப்போறேன்றதையும் இப்பவே தீர்மானிச்சிக்கணும்.. சும்மா பொழுது போக்கிற்க்காக கத்துக்கறேன்னு சொல்றது எல்லாம் சும்மா..   கத்துக்கிட்டு நான் என்னவா வரணும்..  இதுல பணம் சம்பாதிக்க முடியுமா என்றெல்லாம் பார்க்கணும்.. அதுவுமில்லாம இது மத்த விஷயத்தப்போல இல்ல.. கொஞ்சம் ஞானமும் வேணும்..’ என அடுக்கிக்கொண்டே போனான். இதுவரை நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது.. இப்போது ஏன் இவன் இப்படி பேசுகிறான். ஒரு வேளை நாளை நான் இவனுக்குப்போட்டியாக வந்துவிடுவேனோ என்று… நான் நினைத்துக்கொண்டிருக்கும் போது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

…மீட்டுவேன்

Published in: on ஏப்ரல் 7, 2010 at 9:39 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...