தடாக மலையும்… தாடகை மலையும்…

கிரகம் சுத்திச்சுத்தியடிக்கும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் நடந்தது. புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆசை. ஆனால் அதற்க்கு  ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணிநேரமென்றால் நீங்களாய் இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா. ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். சகதர்மினியோடு (தமிழ் சரிதானே?..) ஒரு ஷாப்பிங் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ‘அப்படியே புக் ஃபேர் போயிட்டு வரலாமா?.’ என்றேன்.  ‘முதல் ஷாப்பிங் போவோம்.. அப்புறம் டைம் இருந்திச்சுன்னா போகலாம்’ என்றாள். ‘இல்ல நாளையோடு புக் ஃபேர் முடியுதாம்.. அதனால ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.. ’ என்ற என் ஆதங்கத்தை புரிந்தவளாய்.. ‘சரி.. சரி.. ஒரு ஒரு மணி நேரம்னா நானும் வரேன்..’ என்றவளிடம் பதிலேதும் பேசாமல் புறப்பட்டேன். வாங்கியதென்னவோ இரு பொருள்கள் என்றாலும் அதற்க்கே ஒரு மணிநேரமானது. பின் விரைவாக புக் ஃபேர் விரைந்தோம். வண்டியில் அமர்ந்தபடியே புக் ஃபேருக்கான ஒரு திட்டம் வகுத்தேன். நேராக உயிர்மை ஸ்டால்.. அப்புறம் கிழக்கு.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என முடிவுசெய்தேன். என் சகதர்மினியின் (மீண்டும் கேட்கிறேன் என் தமிழ் சரிதானே?…) இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக ‘நீ எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க விரும்புவாய்? என்றேன் அன்பாக. ‘அது கிடக்கட்டும்..  போனமோ வந்தமோன்னு இருக்கணும்… வீட்டுல சின்னவ அழ ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்..’ என்று என் இலக்கிய ஆர்வத்தில் கல்லெறிந்தாள். புத்தகத்திருவிழா நடக்கும் அரங்க வாயிலை அடைந்தோம்.  பொங்கல் விடுமுறையாதலால் நல்ல கூட்டம். வண்டியை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்தோம்.

திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்த எங்களுக்கு ஒருவர் உதவினார்.  ‘என்ன புத்தகம் வாங்க போறீங்க’ என்றவளுக்கு ‘இன்னும் முடிவு செய்யல’ என்றபடி அவளையும் இழுத்துக்கொண்டு உயிர்மையைநோக்கி ஓடினேன். உள் நுழைய முடியாதபடி கூட்டம். என்னவள் வெளியிலே நிற்க நான் சிரமப்ட்டு உள் நுழைந்து சாருவையும், மனுஷ்ய புத்திரனையும் தேடினேன். அவர்களுடைய நல்ல நேரமோ என்னமோ தெரிய வில்லை அவர்கள் அங்கில்லை. என்னுடைய தேடல் சாருவின் புத்தகங்களில் இருந்து துவங்கியது. தேடினேன்… தேடினேன்… தேகத்தை தேடினேன்… ‘இன்னும் முடியலையா’ இது என் மனைவி. ‘வந்துட்டேன்’ என்று வெறும் கையுடன் திரும்பினேன். அடுத்தது கிழக்கு பதிப்பகம். நிறைய புத்தகங்கள். என் மனைவியும் ஆவலாய் புத்தகங்களை பார்வையிட்டாள். நான் ராகவன் சார் அங்கில்லை என்றதும் வெளியே வந்துவிட்டேன். அதற்க்குள் என் மனைவி மூன்று சமையல் சம்பந்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துவிட்டு பில் போடுவதற்க்கும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ‘சரி வாங்க போகலாம்’ என்றாள். எனக்கு அழுகையாக வந்தது. புத்தக கண்காட்சியில் சில பல எழுத்தாளர்களை பார்க்கலாம் பேசலாம் என்று வந்தால் அது நிறைவேறாது போலும என்று என்னை நான் நொந்தபடி என் மனையாளின் பின் நடந்தேன். திடீரென்று ஒரு தரிசனம்.  ஆம் அவரேதான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு. நாஞ்கில் நாடன் அமைதியாய் தமிழினி ஸ்டாலின் முன் அமர்ந்திருந்தார். முதலில் நான் அவரை பார்த்துவிட்டு கடந்தும் விட்டேன். பின் என்ன தோன்றியதோ என் மனைவியை அழைத்துக்கொண்டு அவரருகே சென்றேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.   பின் அவருக்கு சாகித்ய அகாதமி விருதினை பெற்றுத்தந்த படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தினை வாங்கி அவரின் கையெழுத்திற்காக அவரிடம் நீட்டினேன். ‘நட்புடன் நாஞ்சில் நாடன்’ என கையொப்பமிட்டு அன்ற தேதியையும் அதில் குறிப்பிட்டார்.  என் மனைவி யார் இவர் என வினவ.. என்னுடைய இலக்கிய அறிவை அவளுக்கு தெரிவிக்கும் விதமாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல்..(இரண்டு இலக்கியவாதிகள் பேசும்போது குறுக்கே.. ம்..)  நாஞ்சில் அவர்களைப்பார்த்து ‘ சார் உங்களை திரு. ஜெயமோகன் அவர்களுடைய வலைத்தளத்தின் மூலமாய் அறிந்து கொண்டேன். அவர் உங்களைப்பற்றி நகைச்சுவை கலந்து ‘தடாக மலையடிவார்த்தில் ஒருவர்’ என எழுதியுள்ளதை நான் பலமுறை படித்திருக்கிறேன்’ என்றேன் மிக பெருமிதத்தோடு. நாஞ்சிலார் மெல்ல புன்னகைத்து விட்டு ‘அது தடாக மலையில்லை.. தாடகைமலை..’ என்றார்.

வரும் வழியெல்லாம் என் மனையாள் அடிக்கடி சத்தமாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ஏனென்று தெரிய வில்லை. வீடு வரை நான் எதுவும் பேசவில்லை.  வீட்டிற்க்கு வந்த உடன் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தை எடுத்து என் மேசையின் மேல் வைத்தேன். இப்போது நாஞ்சில் நாடனும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

Published in: on ஜனவரி 18, 2011 at 12:00 பிப  Comments (6)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2011/01/18/%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/trackback/

RSS feed for comments on this post.

6 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. அண்ணே… நீங்களும் புக் எழுதுங்க …..அப்பத்தான் நெறைய பேர் உங்ககிட்ட வந்து ஆட்டோகிராப் வாங்குவாங்க …..உங்களுக்கும் பெருமையா இருக்கும்……யாரும் உங்களை பார்த்து சிரிக்க மாட்டாங்க ….:)

    • புத்தகம் எழுத ஆசை. தம்பியின் ஊக்கம் என்னை மேலும் வளப்படுத்தும். நன்றி.

  2. எனக்கு ஒரு சந்தேகம்… இந்த புகைப்படத்தில் யார் சுரேந்திரன்? யார் நாஞ்சில் நாடன்….? (எப்படி என் இலக்கிய அறிவு..? )

    • வாருங்கள் புவனா முரளி… நலமா…
      முதலில் ஒரு வினா. இலக்கியத்திற்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்?
      இரண்டாவது.. பதிவில் உள்ள புகைப்படத்தில் உள்ளது ஜெயமோகன் என்று ஏன் உங்களுக்கு தெரியவில்லை (ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்காங்களே.. அவங்க யாருன்னு எனக்குத்தெரியாது…)

      பிகு : இந்த புகைப்படத்தை என்னுடைய மொபைல் போனில் இருந்து தெளிவாக(?) எடுத்து என் மனைவி என்னை பழிதீர்த்தது போதாது என்று நீங்கள் வேறு வெந்த புண்ணில் டிஞ்சரை ஊற்றுகிறீர்களே.

  3. ”இரண்டாவது.. பதிவில் உள்ள புகைப்படத்தில் உள்ளது ஜெயமோகன் என்று ஏன் உங்களுக்கு தெரியவில்லை ”

    பதிவில ரெண்டே ரெண்டு (?) இ. வாதிகள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்… அந்த ரெண்டுபேர்தான் புகைப்படத்திலும் என்று நினைத்தேன்… நடுவிலே ஜெ.மோ எங்க வந்தார்…? ஒண்ணுமே புரியலே…. BTW அந்த டி ஷர்ட் இ.வாதி(?) கொஞ்சம் எம்.எஸ். பாஸ்கர் மாத்ரி இல்லை

  4. நல்ல பதிவு.
    நன்றி.


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...