மன்னார்சாமியும்… கிரிக்கெட்டும்…

சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனை. செய்தியை கண்ட உடன்  எனக்கு மன்னார்சாமியின் நினைவுதான் வந்தது.  மன்னார்சாமி எப்படிப்பட்டவன் என சொல்லுகிறேன்.  சின்ன வயதில் மன்னார்சாமி எங்களுக்கு அறிமுகமானான்.  எங்களை விட வயதில் மூத்தவன். எங்கள்  பள்ளிக்கூடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த அன்றே மூன்று ஆடுதோடா செடியின் தண்டுகளை வெட்டி ஸ்டம்பாக்கி மண்சேர்த்து புதைத்து… சைக்கிள் ட்டியூப் வெட்டி அதன் வளையங்களைக்கொண்டு பந்து செய்து.. மரக்கட்டையை வெட்டி மடையாக்கி.. எங்களுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுத்ததே அவன்தான்.  காட்டுத்தனமாய் நானும் என் நண்பர்களும் மர பேட்டை சுற்ற மன்னார் ஓடி வந்து ‘நோ..நோ.. அப்படியால்லாம் பேட்டை சுத்தக்கூடாது.. இப்ப நான் காணிக்கறேன் பார்’  என மட்டையை வாங்கி குனிந்து நின்றுகொண்டு இடதுகாலை முன்னால் வைத்து, அந்த காலை ஒட்டியே மட்டையை கொண்டு வந்து காற்றில் மேல் நோக்கி வீசுவான்.  ‘இதுக்கு பேர் தான் டிபன்ஸ்.. இத முன்னாலப்போய் பந்த தடுத்தா ப்ரன்ட் புட்.. பின்னால போய் இரண்டு காலையும் ஒண்ணா வச்சி இப்படி தடுத்தா இது பேக் புட்..’ என்றான்.   அவன்  இங்கலீஷ் பேசுவதை கண்டு நாங்கள் வியந்தோம்.  மன்னார்சாமிக்கு கிரிக்கெட்டை பற்றி எப்படி தெரிந்தது என்று நாங்கள் வினவியபோது ‘எங்க தாத்தா வெள்ளக்காரதுரைகிட்ட வேலை செய்யும் போது கத்துகிட்டது..  என்றான். அவர்தான் மன்னார்சாமிக்கும் கற்றுக்கொடுத்தாராம்.  கிரிக்கெட்டும் மன்னார்சாமியும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்.  

உள்ளூர் கிரிக்கெட் மேட்சுகளில் மன்னார்சாமிதான் ஹீரோ.. ஒரு முறை மன்னார்சாமி அடித்தபந்து எல்லைக்கோட்டையும் தாண்டி பக்கதிதில் உள்ள மின்சாரவாரியத்தின் டிரான்ஸ்பாமரையே பதம் பார்த்தது (டமால் என்று ஒரு சத்தம்.. நாங்கள் எல்லாம் ஓடி விட்டோம்).  அதே போல மன்னார்சாமி  பௌவ்ல் செய்வதும் அற்புதமாக இருக்கும்.  (ஆனால் ஒவ்வொரு பந்திற்க்கும் எல்லைக்கோடு வரை சென்று திரும்புவது கடுப்பாக இருக்கும்).  அவன் வீசுகிற பந்தை எந்த மட்டையாளனாவது தன் கால்காப்பில் தடுத்து விட்டால் அவ்வளவுதான்.. ‘ஹாவிஸ் தட்…….’ ஒரே காட்டு கூச்சல் போடுவான். அம்பையரா நிக்கிற பையனே சில சமயம்  அறண்டு விடுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மன்னார்சாமி ஒரு ஆல் ரவுண்டர்.  சில சமயம் விக்கட் கீப்பராக கூட நான் அவனைப் பாத்திருக்கிறேன். 

என்னதான் இருந்தாலும் மன்னார்சாமிக்கு வில்லன் இல்லாமலா இருப்பார்கள். அவன்  அப்பாதான். காவல்துறையிலே இருந்ததால் கண்டிப்பானவர். ‘படிக்கச்சொன்னா கலப்ப எங்கேயோ போய் விளையாடிட்டு வருது பார்.. எல்லாம் அவங்க தாத்தாவச்சொல்லணும்..  இந்த வருஷம் இவன் 10வது எப்படி பாஸ் பண்ணப்போறான்னு தெரியலயே’   என  மன்னார்சாமியை மிக அன்பாக கண்டிப்பார். அவன் தாத்தாவோ ‘நீ வேணும்னா பாரு.. எம் பேரன் பெரிய கிரிக்கெட் ப்ளேயரா வருவான்’ என சொல்லுவார்.  அப்படி இப்படி என்று மன்னார்சாமியும் எல்லையில்(அதாங்க பாடர்ல) பாஸாகிவிட்டான். அதன்பின் அவன் அப்பாபுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி உத்தரவு வந்ததால் மன்னார்சாமியும் அவன் குடும்பமும் அந்த ஊருக்கு போய்விட்டார்கள்.  நாங்களும் மன்னார்சாமி இல்லமலேயே கிரிக்கெட்டை தொடர்ந்தோம்.

காலவெள்ளத்தில் அடித்துத்துக்கொண்டு நான் சென்னை வந்து செட்டிலாகி விட்டேன்.  இருந்தாலும் கிரிக்கெட்டை விட முடியவில்லை. இங்கே சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளையும் நேரிடையாகவே கண்டு களிப்பேன். இம்முறை  இந்தியா இலங்கை ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.  நுழைவுச்சீட்டு என் நண்பன் மூலமாக  கிட்டியது (ஸ்டேடயத்தில்தான் வேலை செய்கிறான்).  பகலிரவு ஆட்டம் என்பதால் நண்பனின் புண்ணியத்தில் காலையிலேயே  நான் அரங்கில் நுழைந்து விளையாட்டு வீரர்களை அருகில் பார்ப்பதற்க்கு வசதியாக முதல் வரிசையில் போய் அமர்ந்து விட்டேன்.  தொலைவில் இலங்கை வீரர்கள் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.  இந்திய வீரர்கள் இன்னும் பயிற்ச்சிக்கு வரவில்லை. மைதானம் சூரிய ஒளியில் பச்சையாக பளபளத்தது. என் எதிரே பெரிய  திரை (பகல்ல எப்படி தெரியும்). திடீரென அரங்கில் உற்ச்சாகம்.  ஆம் இந்திய வீரர்கள் பயிற்ச்சியில் ஈடுபட வந்துகொண்டிருந்தார்கள்.  எனக்கு உற்ச்சாகம் கரைபுரண்டது.  ஏனெனில் அவர்கள் பயிற்ச்சிக்காக தேர்வுசெய்த இடம் எனக்கு மிக அருகில். நான் வீரர்களை அருகில் பார்க்க ஆர்வமானேன்.  டோனியும் சேவாக்கும் உடற்பயிற்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.  மற்றவர்கள் வளையம் போல் நின்றுகொண்டிருந்தார்கள். சச்சின் டெண்டுல்கர் தூரத்தில் என்னை நோக்கி  வருவது தெரிந்தது. நான் ஆர்வமானேன்.  இப்போது சச்சின் எனக்க மிக அருகில். சச்சினுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய ஒரு பாதுகாவலன்.  அவன் சச்சினை மறைத்தான். நான் அவனை விலகும்படி கூச்சலிட்டேன் (இடையில் இரும்பு வலை).  பாதுகாவலன் என்பக்கம் திரும்பி வாய்மேல் ஒற்றை விரலை வைத்து ‘ம்’ என்றான். அவனை நான் எங்கோ பாத்ததுபோல் இருந்தது..  எங்கே…  ஆம்.. அவன்… மனனார்சாமியேதான்…

Published in: on பிப்ரவரி 26, 2010 at 8:33 முப  Comments (5)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/26/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

5 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. நெஜம்மாவா….?

    • உண்மையாத்தான். வேணும்மின்னா சச்சினையே கேட்டுப்பாருங்களேன்.

  2. மன்னார்சமியிடம் கேட்டு பாருங்கள் என்று சொல்லாமல் ,சச்சின்னிடம் கேட்டு பாருங்கள் என்று சொல்லும் உங்கள் பகடி பிடித்திருக்கிறது

  3. http://smuthukrishnan@blogspot.com


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...