பயணங்கள் முடிவதில்லை…

நேற்று என் பயணத்தினைப்பற்றிய பதிவினை படித்துவிட்டு என் நண்பன் போனில் என்னை அழைத்தான். ‘சும்மா நம்ம பக்கத்தில இருக்கிற தூத்துக்குடி, இராமேஸ்வரத்துக்கு போய்ட்டு வந்துட்டு ஏதோ ஜப்பானுக்கு போய்ட்டு வந்தமாதிரி பயணக்கட்டுரை எல்லாம் எழுதுர… இது உனக்கு ஓவராத்தெரியல..’ என்றான். அதற்க்கு நானும் ‘ஜப்பானுக்கு போய்வந்து அந்த நாட்டப்பத்தி எழுதணும்ன்னுதான் ஆசையாத்தான் இருக்கு.. ஆனா அதுக்கு அந்த ஜப்பானுக்கு இன்னும் அதிர்ஷ்டம் வரலியே..’ என்றேன்.  எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட்ட சத்தம் எனக்கு தெளிவாக கேட்டது. (சென்ற வாரம் எங்களூரின் ஏரிக்கரையை நான் படம்பிடித்து இவனிடம் காண்பிக்க அதற்க்கு இவன் ‘அட ஊட்டி ஏரி.. எப்ப போய் போட்டோ எடுத்த’ என்றவனாயிற்றே..) பொதுவாக பயணம் என்பதை   குறைந்தது 3 மணிநேரமாவது பஸ்ஸிலோ இரயிலிலோ பிரயாணம் செய்து செல்லுகிற இடத்தில் குறைந்தது 1நாளாவது தங்கியிருந்து அங்குள்ளவற்றை பற்றி அறிந்து அனுபவம் கொள்வது என்று நான் வரையறுத்திருந்தேன். என்னுடைய பள்ளிப்பிராயத்தில் முதன் முதலாக எங்களின் துவக்கப்பள்ளியிலிருந்து ஒருநாள் இன்பச்சுற்றுலா அழைத்துச்சென்றதுதான் என் முதல் பயணம். 

முதலில் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்று எஸ்.எஸ்.ஆர் பாட பிளாக் அன்ட் வொய்ட்டில் டிவியில் நாங்கள் கண்ட கடல்மல்லையை வண்ணத்தில் நேராக கண்டோம். அர்ச்சுனன் தபஸ் (எவ்வளவு பெரிய யானை..), வெண்ணெய் திரட்டிக்கல் (எவ்வளவுபேர் சேந்ந்து தள்ளினாலும் நகரமாட்டேங்குதே..), குரங்கு பேன் பார்க்கும் சிற்ப்பம் (சூப்பர்..), ஐந்து ரதம் (குச்சிஐஸ் சாப்பிட்டோம்) என அனைத்தையும் தொட்டுப்பார்த்து அனுபவித்தோம் (இப்போது தடுப்பிவேலியெல்லாம் போட்டு.. வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியுமாம்).  அடுத்தது கடற்கரைக்கோயில். முதன் முதலாக கடலைப்பார்த்த அனுபவம்.  எங்கள் ஆசிரியரைப்பார்த்து நாங்கள் இவ்வளவு தண்ணி எங்கிருந்து வந்தது?.. கடல் அலை என்றால் என்ன?… அது ஏன் நம்மைப்பார்த்து சீறிவருகிறது?.. எனக்கேட்டுவிட்டு அவர் சொன்ன அறிவியல் புரியாமல் கடலையே பார்த்துக்கொண்டிருந்தோம். பின்  வரிசையாக நிற்க்க வைக்கப்பட்டு கால் நனைத்தோம் (அன்று சுனாமி வந்திருந்தால் எங்களூரில் பள்ளிகூடமே இருந்திருக்காது).

அடுத்தது திருக்கழு(கு)குன்றம்.  மலையடிவாரத்தில் அமர்ந்து பயணத்துக்கே உரித்தான புளியோதரை மற்றும் தயிர்சாத பொட்டலங்களை பிரித்து பகுத்துண்டோம்.  பின் மலையேற்றம்.  நெட்டுருவான ஏற்றம்.  இளம்வயது என்பதால் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறினோம்.. (குரங்கு மாரிதி தவ்வறான் பார்.. எங்கள் வாத்தியார்). மலையுச்சியில் ஏகப்பட்ட கூட்டம்.  ஒரு இடத்தில் மக்கள் ஒரேதிசையை நோக்கி கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். நாங்களும் அமர்ந்தோம். சுமார் மதியம் 12மணியளவில் கோவில் குருக்கள் ஒரு பெரியதட்டினை எடுத்துக்கொண்டு மலையுச்சியில் உள்ள  ஒரு பாறையின் மேல் அமர எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து அந்தப்பாறையின் மேல் அமர்ந்தது.  பிறகு மெதுவாக குருக்களின் அருகில் வந்து அவர் கையில்  உள்ள உணவை கொத்தியது.  இதைக்காண மக்கள் கூட்டம் முண்டியடித்தது. நாங்கள் கம்பித்தடுப்பின் மேல் ஏறி நின்று பார்த்தோம்.  நாங்கள் பார்த்ததால் என்னவோ கழுகு உடனே மேலெழும்பி ஒரு சிறிய வட்டமும் பின் ஒரு பெரிய வட்டமும் அடித்து எங்கள் தலைக்குமேல பறந்து சென்றது.  நாங்களும் விடாமல்  தாழ்வாகப்பறக்கும் ஆகாயவிமானத்தின் பின் ஓடி பின் அது மறையும் போது போடாப்போ என்று கூவுவது  போல கழுகை நோக்கி கையை  ஆட்டி கூவினோம். எல்லோரும் எங்களை ஒரு மாதிரியாகப்பார்த்தார்க்ள். பிறகு சிவனை வணங்கிவிட்டு மலையிறங்கினோம்.  இப்போதெல்லாம் கழுகு வருவதில்லை என அறிந்தவர்கள் சொன்னார்கள்.

அடுத்தது சர்க்கஸ்.  செங்கற்பட்டிலே ஜெமினி சர்க்கஸ்.  ஜெமினி கணேசனுக்கும் சர்க்கஸ்சுக்கும் சம்மந்தமில்லை என உள்ளேபோன போதுதான் தெரிந்தது. வட்டமான பகுதி.  பகுதியைச்சுற்றி வட்டமாக நாற்காலிகள். அதற்க்குமேல் கட்டையால் அடிக்கப்பட்டு படிக்கட்டுபோன்ற இருக்கைகள்.  இந்தப்பபகுதியின் மேல் துணியால் ஆன கூரை. குறுக்கும் நெடுக்குமாக பல கயிற்றுப்பின்னல்கள். எங்களை அரங்கத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டை இருக்கையில் அமரவைத்தார்கள். உயரத்திலிருந்து பார்த்துபோது குளத்தில் கல்லிடும்போது தோன்றும் வளையங்கள் நினைவுக்கு வந்தன. தின்பதற்க்கு பொரிகடலை என் பள்ளியின் சார்பாக எங்களுக்குத் தந்தார்கள். பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன் (சர்க்கஸ் ஆரம்பித்த உடன் சாப்பிடலாம்).  சர்க்கஸ் ஆரம்பமானது. வேடிக்கையான பல நிகழ்ச்சிகள், விலங்குகளின் சாகஸங்கள் என களைகட்டியது.  சிங்கம், புலி, கரடி, யானை போன்றவவைகளை முதன்முறையாக நேரடியாக கண்டோம்.(அவற்றின் இயல்புநிலையில்லாமல்…  பின்னே.. யானை புட்பால் விளையாடுகிறது…).  கூண்டுக்குள் ஒருவன் அதிவேகமாக மோட்டார்சைக்கிளில் சுற்றியதை கேட்டோம் (சத்தம் மட்டும் வந்தது.. கூண்டுக்குள்ளே தேடினோம் சரியாகத்தெரியவில்லை). 

அடுத்தது பார்விளையாட்டு. அந்தரத்தில் இங்கும் அங்குமாய் பெண்களும் ஆண்களும் தாவித்தாவி பறந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. உடலை பம்பரம் போல் சுற்றி அவ்வளவு உயரத்திலிருந்தது கீழே உள்ள வலையில் குதிப்பது குலைநடுங்க வைத்தது. சர்க்கஸ் முடிந்து வெளியேவந்தபோது  ஏதோ ஒன்றினை இழந்துவிட்ட மனநிலை.  பேருந்தை விட்டு இறங்கி அப்பாவுடன் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.  எனக்குள்ளே பல நினைவுகள்.  கடற்கரை மணல்.. கழுகு.. சர்க்கஸ்பெண்கள்.. பஸ்சுக்குள்ளே நண்பர்களின் ஆட்டம் பாட்டம் என  பயணநினைவுகள்.  என் பின்னால் யாரேல நடந்துவரும் சத்தம் கேட்டது. மெல்ல திரும்பிப்பார்த்தேன்.  பயணம் என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

Published in: on மார்ச் 8, 2010 at 9:49 முப  Comments (8)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/08/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/trackback/

RSS feed for comments on this post.

8 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. சர்க்கஸ் பார்த்த அனுபவத்தை க்கூட இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்களே. …

    ”யானை போன்றவவைகளை முதன்முறையாக நேரடியாக கண்டோம்.(அவற்றின் இயல்புநிலையில்லாமல்… பின்னே.. யானை புட்பால் விளையாடுகிறது…)”

    இந்த சிந்தனையெல்லாம் அந்த வயசிலேயே தோன்றியதா….?

    பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு திரும்பி வந்தவுடன் அதைப் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்தக் கொடுமைக்காகவே சுற்றுலா போக வேண்டாம் என்று தோணும்…

    • புவனா முரளி அவர்களுக்கு என் நன்றி. சத்தியமாக அந்த சிந்தனை எல்லாம் அந்த வயதில் வந்தவை அல்ல. அந்த நினைவுகளை இப்போது மனதுக்குள் கொண்டுவரும் போது சற்றே மிகைப்படுத்தியிருக்கிறேன் அடைப்புக்குறிக்குள் (அப்பா தப்பிச்சேன்…).

  2. your writing reminds me my favorite writer Sujatha keep it up , thank you for your wonderful job.

    • அருள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  3. பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு திரும்பி வந்தவுடன் அதைப் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்தக் கொடுமைக்காகவே சுற்றுலா போக வேண்டாம் என்று தோணும்…

    உண்மை என்கருத்தையே பிரதிபலிக்கிறீர்கள் ,

    • //இந்தக் கொடுமைக்காகவே சுற்றுலா போக வேண்டாம் என்று தோணும்…//

      உண்மைதான். காலையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கையில் மனது பாரமாக இருக்கும்.., ம்.. அந்த வேதனைய வார்த்தையால் சொல்லிவிட முடியாது…

  4. சர்க்கஸ் முடிந்து வெளியேவந்தபோது ஏதோ ஒன்றினை இழந்துவிட்ட மனநிலை.

    – நீங்க பொரி கடலை பொட்டலத்தை சொல்றீங்களா? ;-))

    உங்கள் பதிவுகளை கடந்த சில வாரங்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். தெளிவான, அழகிய நடை. வாழ்த்துக்கள். நிறைய பதியவும்.

    • சக்ரா சம்பத் அவர்களின் வருகைக்கும் வாத்துக்களுக்கும் நன்றி…


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...